'தமிழில் நூல்கள், இலக்கியங்கள், படைப்புகளைப் படைத்தச் சான்றோர்கள் மண்ணில் இருந்து மறைந்தாலும், தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் படைப்புகளை வாசிப்போர் இன்றும் அவர்களை நினைவு கூர்கின்றனர். சில சான்றோர்களின் வாழ்வில் நடைபெற்ற ருசிகர நிகழ்வுகள்:
* ஒருமுறை பாரதியாருக்கு விசுவநாத ஐயர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார். இதைப் பார்த்து வருத்தப்பட்ட பாரதியார், ''இனிமேல் நீ மடல் எழுதும்போது தமிழில் எழுது. ஒருவேளை அந்தத் தமிழ் கொச்சையாக இருந்தாலும் பரவாயில்லை'' என்று பதில் கடிதம் எழுதினார்.
* ஒருமுறை பாரதிதாசனைத் தாக்குவதற்காக ரௌடிகள் சிலர் வீட்டினுள் சூழ்ந்துவிட்டனர். அப்போது அங்கிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது கையில் இருந்த தடியை எடுத்துகொண்டு அவர்களை விரட்டி அடித்தார். இதைப் பார்த்த பாரதிதாசன் ஆச்சரியத்துடன், ''எப்படியப்பா உனக்கு இத்தனை தைரியம் வந்தது'' என்று கேட்டார். இதற்கு பட்டுக்கோட்டை, ''எங்கள் மூதாதையர் போர்த் தொழில் செய்தவர்கள்'' என்று பெருமையுடன் கூறினார்.
-முக்கிமலை நஞ்சன்
* கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை வரைந்த ஓவியங்களைப் பார்வையிட 'சிம்சன்' என்ற ஆங்கிலேய அலுவலர் வந்து, கவிஞரைப் பற்றி கேட்டறிந்தார். மறுநாள் கவிஞரை அழைத்து, சிறிய புகைப்படம் ஒன்றை அளித்தார் சிம்சன். சுமார் நான்கு வயதில் இறந்த நிலையில் உள்ள குழந்தையின் புகைப்படம் அது. ''இது என்னோட ஒரே குழந்தை. நான்கு மாதங்களுக்கு முன் திடீரென இறந்தது. உயிருடன் இருந்தபோது புகைப்படம் எடுக்கவில்லை. குழந்தை இறந்த நிலையில், உருவப் படத்தை கண் திறந்த நிலையில் ஜீவனுள்ளதாக மாற்ற வேண்டும். நான் பலரிடம் முயன்றும் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து, திருப்தி ஏற்படவில்லை. நேற்று உங்களுடைய ஓவியங்களைப் பார்த்தேன். உங்களால் நான் நினைத்தபடி வரைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு சன்மானமாக ஐம்பது ரூபாய் தருகிறேன். படம் பிடித்திருந்தால் மேலும் தருகிறேன்'' என்றார்.
அதை ஏற்ற கவிஞரும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில், பல மாற்றங்களைச் செய்து புகைப்படத்தை சிம்சனிடம் அளித்தார். இதைப் பார்த்த சிம்சனோ கவிஞரின் கைகளைப் பற்றிக் கொண்டு, ''நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். என் குழந்தையை ஜீவனுடன் பார்க்கிறேன். உமது வேலைக்கு ஐம்பது ரூபாய் மிகவும் குறைவு. உங்கள் கலைத்திறமைக்கு என் சிறிய காணிக்கை'' என்று கூறி, தனது சட்டைப் பையில் கையைவிட்டு கற்றை நோட்டுகளைத் திணித்தார். அதில், அறுநூற்று எழுபத்து ஐந்து ரூபாய் இருந்தது.
-பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
* வெ.சாமிநாத சர்மா எழுதிய 'நான் கண்ட அறிஞர்கள்' என்ற நூலில் சுப்பிரமணிய சிவம் தொகுப்பில் இருந்து:
''சிவனார் தன் சிறை அனுபவம் குறித்து எழுதியுள்ள குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. கைதி சிறையில் சென்றதும் முழு மொட்டையாக சவரம் செய்துகொண்டுவிட வேண்டும். அங்கு சாதாரணக் கைதியின் சரீரத்தின் எந்தப் பாகத்திலும் அரை அங்குலத்துக்கு மேல் நீளமுள்ளதாக வளர விடக் கூடாது என்பது வைத்திய விதி. ரோமம் அதிகம் வளர்ந்துவிட்டால், அழுக்குப் படிந்து நோய் உண்டாக்கிவிடுமாம். சவரம் செய்வதற்கு உபயோகிக்கப்படும் கத்திகள் சாணை பார்க்காத வெறும் இரும்புத் தகடுகள். சவரத் தினத்தன்று படும் காட்டம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அதிலும், என்னைப் போன்ற முரட்டு ரோமங்கள் உள்ளவர்கள். சவரம் செய்துகொள்வதைவிட எந்த வேலையும் செய்யலாம். மரண வேதனையும் அனுபவிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சவரம் செய்துகொள்ளும்போது, என் சரீரம் செத்துப் பிழைக்கும்.
ஆ.. ஆ... சவரம் என்று ஒன்று இல்லாவிட்டால் சிறை வாசத்தைப் போல் சுகவாசம் இல்லவே இல்லை என்று சொல்வேன். ஒவ்வொரு கைதியும் ஞாயிற்றுக்கிழமைதோறும் சவரம் செய்துகொள்ளத் தவறக் கூடாதாம்'' என்று கூறப்பட்டிருந்தது.
-த.நாகராஜன், சிவகாசி.
* ''மறைமலை அடிகளார் 'ஞான சாகரம்' எனும் இதழை நடத்திய காலம் அது. அவரது மகள் நீலாம்பிகை அம்மையார், மருமகன் திருவரங்கனார் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, அடிகளாரை திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகத்தில் கண்டதுண்டு. அடிகளாரின் தனித்தமிழ் இயக்கக் காலத்தில் அவருடைய மாணவரான பன்னிருகை பெருமாள் நாயனார் போன்ற பேராசிரியர்களின் பேச்சுகளை நான் கேட்டதுண்டு. திருநெல்வேலி கா.சு. பிள்ளை மூலம் சில காலம் அடிகளாரை நேரில் உபசரித்ததும் உண்டு.
1940-ஆம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபோது, ஒருநாள் விளையாட்டுத் திடலில் விளையாடிக் கொண்டிருந்த நான் இடறி விழுந்தேன். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அடிகளாரின் பிள்ளைகளான மாணிக்கவாசகம், மறை.திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு மாதம் தங்க வைத்து ஆதரவு அளித்தனர்'' என்று கா.அப்பாதுரையார் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார்.
* மயிலாடுதுறையில் உள்ள திருஇந்தளூர்தான் ஞானக்கூத்தன் பிறந்த ஊர். பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன், தி.ஜ.ரங்கநாதன், ஜெகசிற்பியன் உள்ளிட்டோர் இவரது ஊர்க்காரர் என்பது தெரியவந்தது. இவர் படித்த பள்ளி பட்டமங்கலம் தெருவிலும், மற்றொரு பள்ளி மகாதானம் தெருவிலும் இருந்தது. பட்டமங்கலம், மகாதானம் இரண்டும் குலோத்துங்க சோழன் பட்டம் சூட்டிக் கொண்ட நாள் நினைவாக நிறுவப்பட்டது. மகாதானத் தெருவில்தான் திருசிரபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வசித்தார். அந்தத் தெருவில்தான் அவரிடம் உ.வே.சாமிநாத ஐயர் படித்தார். அந்தத் தெருவில்தான் கோபாலகிருஷ்ணபாரதி, நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளைப் படித்தார்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஞானக்கூத்தன் திரைப்படங்களைப் பார்த்தார். அன்று திரைப்படம் கல்வியில் ஒரு கூறு. 'விஷுவல் எஜூகேஷன்' என்பார்கள். விக்டர் ஹ்யூகோவின் 'லே மிஸரபிள்' , 'ஹஞ்ச்பேக்' ஆஃப் நாடர்டாம், சார்லஸ் டிக்கன்ஸின் 'டேல் ஆஃப் டூ சி டீஸ்' உள்ளிட்டவை ஞானக்கூத்தன் பார்த்தத் திரைப்படங்கள். இந்தத் திரைப்படங்களில் தனது ஊரில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஊர்களை அவர் பார்த்தார். படத்தில் பேசிய அவர்களின் உடை, மொழி போன்றவை அவரைத் திகைக்க வைத்தன.
(அழகிய சிங்கர் எழுதிய 'ஞானக்கூத்தன்' என்ற நூலில் இருந்து..)
* 'பொதுவாக, என்னுடைய கதைகள் உலகுக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணிவைக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்துகொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கின்றனர். இன்னும் சிலர் கோபம் அடைகின்றனர். அவர்களை இன்னும் இன்னும் கோபிக்க வைத்து முகம் சிவப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது'' என்று 'காஞ்சனை'க்கு எழுதிய முன்னுரையில் புதுமைப்பித்தன் கூறியிருந்தார்.
* தென்னை மரங்கள் மீது எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஆசை. அவர் ஒருமுறை எழுதியிருந்தது:
''மணிக்கணக்கில் தென்னை மரங்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். மயிலின் தோகை மாதிரி சில நேரங்களில் அவை சிலிர்க்கும். மந்தகாசத் தென்றலில் சிட்டுக் குருவிகளுக்கு ஊஞ்சல் கட்டித் தாலாட்டும். புயல் காற்று வந்துவிட்டால் தலைவிரித்து நின்று ஆடும். மாரிக் காலத்தில் மழை பெய்து ஓய்ந்த பின்னர் சரம்சரமாக முத்துக்கட்டி நின்று... நிலாக்காலமும் சேர்ந்துவிட்டால் ஜகஜ்ஜாலம் காட்டி ஜொலிக்கும்.
அந்த தென்னை மரங்கள் எனக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டியவை அவசியமில்லை. அவை அண்டை வீட்டில் இருந்தால் போதும். ஆற்றங்கரை மணலில் நின்றிருந்தாலும் போதும். தொடுவானத்துக்கு விளிம்பு கட்டி ஊருக்கு வெளியே தோப்பாகக் கவிந்திருந்தாலும், அழகாய்த்தான் இருக்கும். கே.கே.நகரில் ஜெயகாந்தன் புதுவீடு கட்டியிருப்பதை அறிந்த முகமறியாத ஒரு நண்பர் பத்து தென்னங்கன்றுகளை அனுப்பியிருந்தார். நாளடைவில் பெரிய மரங்களாக வளர்ந்து பாளை வெடித்துச் சிரித்து குலைகுலையாகக் காய்த்துத் தள்ள ஆரம்பித்துவிட்டன. ஒருநாள் நள்ளிரவில் அவர் வந்தார். எப்படி வந்தார் என்று தெரியவில்லை. மரத்தின் மீதிருந்த தேங்காய்களைப் பரித்துகொண்டிருந்தார். சின்ன வயதிலிருந்தே எனக்குத் திருடர்களைப் பற்றிய பயம் கிடையாது. 'அவர்களும் மனிதர்கள்தானே' என்ற எண்ணம்.
எனவே, மாடி அறை ஜன்னலைத் திறந்து அவரிடம் அன்பாகப் பேசினேன். அவரை நான் திருடன் என்று நினைப்பதாக என்னை அவர் சந்தேகித்துக் குதித்து ஓடிவிட்டால் எனக்குத்தானே நஷ்டம்.
''என்னய்யா, பகலெல்லாம் தேடினேன். கிடைக்கவில்லை. நல்ல வேளை இப்போதாவது வந்தீரே.. இருக்கிற காய்களையெல்லாம் பறித்துப்போடும். உமக்கு வேண்டியதை எடுத்துகொண்டு போ. மறுநாள் காலையில் பார்த்தேன். அந்த மரத்தின் கீழே சில குலைகள் பறித்துப் போடப்பட்டிருந்தன. பறித்துப் போட்டவன் தனது கூலியை எடுத்துகொண்டு போயிருப்பான் அல்லவா? ஜன்னல் வழியாகத் தெரியும் தென்னை மரத்தின் பசிய ஓலைகளைப் பார்த்துகொண்டிருப்பது மட்டுமே எனக்கும் உள்ள சொந்தம்'' என்று கூறியிருந்தார்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.