தினமணி கதிர்

நாட்டியத்தில் இலக்கிய பாடல்கள்!

சென்னையைச் சேர்ந்த சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான வித்யாபவானி சுரேஷ் மற்றும் இசைக்கலைஞர்களில் ஒருவர்.

திவ்யா அன்புமணி

சென்னையைச் சேர்ந்த சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான வித்யாபவானி சுரேஷ் மற்றும் இசைக்கலைஞர்களில் ஒருவர். பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், இந்திய கலை, கலாசாரத் துறையிலிருந்து இரு ஆண்டு பெல்லோஷிப் பெற்றுள்ளார்.

இந்திய நடனம், இசை குறித்து பல நூல்களை எழுதியவர், தமிழ் இலக்கியங்களிலிருந்து விரிவான பரதநாட்டிய நடனங்களை நிகழ்த்தியவர், ஆங்கிலம்- தமிழில் சொற்பொழிவு ஆற்றக் கூடியவர்.. என்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர். இவர் அண்மையில் எழுதிய 'அப்ரிஷியேட்டிங் பரத நாட்டியம்' நூல் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடன் ஒரு சந்திப்பு:

உங்கள் பார்வையில் நாட்டியம்?

முன்பு நாட்டியம் 'சதிர்' என்று அழைக்கப்பட்டது. இதில் நாட்டியமாடும் மங்கையுடன் கூடவே இசைக் கலைஞர்களும் சேர்ந்து ஆடிப் பாடி இசைப்பதை படங்களின் மூலம் அறியலாம். நாளடைவில் பல்வேறு மாற்றங்களை அடைந்தன.

நடனத்துக்கான, உடைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. இசைக் கலைஞர்கள் அரங்கின் ஓரத்தில் அமர்ந்து இசைக்கவும் நட்டுவாங்கம் செய்யவுமான அமைப்பு உருவானது. இன்று நடனக் கலையானது 'பரதநாட்டியம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கான பாடல்கள் மட்டும் என்றும் மாறாமல் பழையபடியே உள்ளன.

பரதநாட்டியத்தில் நிகழ்த்தப்படும் பாடல்கள் பற்றி....

பரதநாட்டிய நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றுகின்றன. இது 'மார்க்கம்' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, முதல் உருப்படி 'புஷ்பாஞ்சலி' அல்லது 'அலாரிப்பு'. இரண்டாவது 'ஜதீஸ்வரம்'. ஜதீஸ்வரத்திற்குப் பதிலாக, சிலர் விறுவிறுப்பான கீர்த்தனையை நிகழ்த்துகிறார்கள். மூன்றாவது 'சப்தம்'.

நான்காவது 'உருப்படி' மிக முக்கியமானதும் மிக நீண்டதும்கூட! இது பதவர்ணம். ஐந்தாவதாகவும், ஆறாவதாகவும் அமைவன 'பதம்', 'ஜாவலி'. ஏழாவது 'தில்லானா'. நேரக் கட்டுப்பாடு இருந்தால், 'வர்ணம்', இரண்டாவது அல்லது மூன்றாவது உருப்படியாக நிகழ்த்தப்படுகிறது. இது முக்கிய உருப்படி மற்றும் அரை மணி நேரம் நிகழ்த்தப்படுகிறது.

பாடல்களின் கருப்பொருள் என்ன?

அலாரிப்பு, ஜதீஸ்வரம் முழுக்க முழுக்க அடவுகளை மையமாகக் கொண்டவை. புஷ்பாஞ்சலி, தில்லானாவில் பல அடவுகளும் பக்தியை மையமாகக் கொண்ட சிறிய பாடல்களும் உள்ளன. சப்தம் - அதிக பாடல் வரிகளையும் சிறிய சிறிய அடவுகளையும் கொண்டுள்ளது.

பத வர்ணத்தில் விரிவான ஜதிகளும் பாடல் வரிகளும் உள்ளன. பதம், ஜாவலி பாடல் வரிகளை மட்டுமே கொண்டுள்ளது. மூன்றும் முழுமையாக சிருங்காரத்தை மையமாகக் கொண்டவை. இவை நடன நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாகும். எனவே, பரதநாட்டிய நிகழ்ச்சியில் சிருங்காரம் ஒரு முக்கிய பாவமாகும்.

இசை பற்றி உங்கள் கருத்து என்ன...

வர்ணங்கள், பதம் மற்றும் ஜாவலிகள் பெரும்பாலும் பின்வருமாறு கொள்ளலாம்.

கதாநாயகி தன் காதலனை நோக்கி, 'ஏன் என்னை மறந்துவிட்டாய்' என்று கேட்கிறாள்.

'நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துகொண்டே இருக்கிறேன். ஆனால் உன்னைக் காணவில்லை. 'என் அன்பே. நான் நல்ல புடவை அணிந்திருக்கிறேன். என் நகைகளை மிகவும் உற்சாகமாக அணிந்திருக்கிறேன். வீட்டை பூக்களால் அலங்கரித்திருக்கிறேன். நீ எங்கே இருக்கிறாய்? நேற்று, நான் உன்னை வேறொரு பெண்ணுடன் ஆற்றங்கரையில் பார்த்தேன். ஏன் என்னை மறந்துவிட்டாய்?' என்கிறாள் கதாநாயகி.

அல்லது, கதாநாயகி தன் சகியிடம், 'என் நாதன் மற்ற பெண்ணிடம் சென்றுவிட்டான். அவன் அவளுக்கு விலையுயர்ந்த பரிசுகள், வீடு மற்றும் நகைகளைக் கொடுக்கிறான். நீ ஏன் அவளைக் குறை கூறுகிறாய், என் சகி? அது என் நாதரின் தவறு'' என்கிறாள். ஆனால் இங்கே நாயகி மற்ற பெண்ணின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறாள். அவள் இதை வேதனையுடனும் கிண்டலுடனும் கூறுகிறாள்.

எனவே, என் கருத்து என்னவென்றால், முன்னொரு காலத்தில் அதாவது சதிர் என்கிற பெயரில் நடைபெற்ற நடனத்தில் நடனக் கலைஞர்கள் ஆதரவுக்காக ஆதரவாளர்களைச் சார்ந்திருந்த முந்தைய காலங்களில் இவை பொருத்தமான பாடல்கள். எனவே, இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் ஆண் ஈகோவை மகிழ்விக்க உருவாக்கப்பட்டன. இது அந்த சூழ்நிலைக்கு ஏற்றது.

இன்று, பெண்கள் சுதந்திரமானவர்கள். அவர்களது சிந்தனை வேறானது. சிறந்த வேலைகளிலும் உள்ளனர், படித்தவர்களானதால் சமத்துவத்துக்காகப் பாடுபடுகிறார்கள். அப்படியானால், ஏன் இன்னும் இந்தப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள்? உண்மை என்னவென்றால், பரதநாட்டியத்துக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்க 'சதிர்' என்ற பெயர் நீக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பாடல்கள் இன்னும் பழைய பாடல்களாகவே உள்ளன.

இன்று, பாரம்பரிய நடனக் கலைஞர்களாக இருந்தவர்கள் நடனத் துறையில் முற்றிலுமாக இல்லை. ஆனால், பெண்களை மேம்படுத்துவது என்ற இன்றைய கருத்துக்கு எந்தப் பொருத்தமும் இல்லாத அந்தப் பாடல்கள் இன்னும் பாரம்பரியத்தின் பெயரால் நடனமாடப்படுகின்றன. இது மாற வேண்டும்.

அதை மாற்ற நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்கத் தோன்றும். எனது அரங்கேற்றம் 1986 - இல் நடத்தப்பட்டது. பாரம்பரிய பாடல்கள் எனக்குக் கற்பிக்கப்பட்டன. எனது அரங்கேற்றத்தின்போது அவற்றை நான் ஆடினேன். 1989 - இல் நான் சொந்தமாக நடன அமைப்பைத் தொடங்கினேன். அதன் பிறகு, நான் இந்தப் பாடல்களுக்கு ஆடவில்லை.

நான் தமிழ் இலக்கியத்திலிருந்து பொருத்தமான பாடல்களை எடுத்துகொண்டு நடனமாடத் தொடங்கினேன். குறிப்பாக பரிபாடல், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், திருக்குறள், மீனாட்சி அம்மை பிள்ளை தமிழ், நளவெண்பா போன்றவற்றின் பாடல் வரிகளை நான் தற்போது பயன்படுத்துகிறேன்.

இது எனக்கு நடனத்துக்கான புதிய சிந்தனைகளைத் தந்தது. இதன் காரணமாகே நான் இதுவரை பரதநாட்டியம் குறித்து ஏழு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன். கடந்த நூலில் நடனத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று விளக்கினேன். தற்போது ' அப்ரிஷியேட்டிங் பரத நாட்டியம்' என்கிற நூலை எழுதியுள்ளேன். அது இன்னும் விரிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளின் ஆசி... நிக்கி கல்ராணி - ஆதி!

புதுச்சேரியில் 118 கிலோ லட்டுடன் விநாயகர் சதுர்த்தி விழா!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... ரெஜினா!

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

SCROLL FOR NEXT