தினமணி கதிர்

சுயசரிதை புத்தகங்களுக்கு வசீகரம்...

'காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப் பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

DIN

அருள்செல்வன்

'காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப் பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது'' என்கிறார் எழுத்தாளர் பாவண்ணன்

சாகித்திய அகாதெமி, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது, விளக்கு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். பணிநிமித்தம் காரணமாக, பெங்களூருவாசியாகிவிட்ட அவருடன் 'ஊரும் எழுத்தும்' சார்ந்து சார்ந்து ஒரு சந்திப்பு:

பெங்களூரிலேயே தங்க வேண்டிய சூழல் எப்படி வந்தது?

தொலைபேசித் துறையின் கர்நாடக மாநில அலுவலகத்தில் 1981-இல் எனக்கு இளநிலைப் பொறியாளர் பணி கிடைத்தது. ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு நகரங்களுக்கு இடையில் எஸ்.டி.டி. வசதியை ஏற்படுத்தும் பொருட்டு, கேபிள் பதிக்கும் பிரிவில் இணைந்தேன்.

முதலில் வேலை செய்தது பெல்லாரி மாவட்டத்தில்தான். 8 ஆண்டுகள் ஹூப்ளி, சித்ரதுர்கா, ஷிமோகா, மங்களூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேலை செய்தவுடன் எனக்குப் பெங்களூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகும் பல மாவட்டங்களுக்குச் சென்று வேலை செய்தேன். ஆனால் பெங்களூரையே வசிப்பிடமாகக் கொண்டேன். எனது மகனின் கல்வி வாய்ப்புக்கும், அடிக்கடி சொந்த ஊருக்குச் சென்றுவரவும் பெங்களூரு வசதியாக இருந்தது.

இலக்கியச் செயல்பாடுகளுக்கு உகந்த இடம் சென்னை. அதை விட்டுவிட்டுப் பெங்களூரில் இருப்பது வருத்தமாக இல்லையா?

என் செயல்பாடுகளுக்குச் சென்னை பொருத்தமாக இருந்திருக்கும் என்பது உண்மைதான். அப்படிப்பட்ட சூழல் அமையாத நிலையில் அதை நினைத்து ஏக்கம் கொள்வதால் என்ன பயன்? மூத்த படைப்பாளர்கள் க.நா.சு., வெ.சா., தி.ஜா., ஆதவன், இ.பா. போன்றோர் தில்லியில் பணி செய்துகொண்டு இலக்கியத்தில் இயங்கியவர்கள்தானே. எங்கிருந்து எழுதினால் என்ன? நமக்குரிய வாசகர்களைக் கண்டடையலாம் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் வருத்தம் எதுவும் இல்லை.

சென்னை வாழ்க்கை - பெங்களூரு வாழ்க்கை ஒப்பிட முடியுமா?

இலக்கியம் மட்டுமல்ல; நாடகம், திரைப்படம், நடனம், இசை, உணவு வகைகள் சார்ந்து சிறப்பான சுவையுணர்வு கொண்டவன் நான். என் சுவைக்கு உகந்தவற்றை நாடித் தேடிப் பெற்று மகிழும் இயல்பும் கொண்டவன். அதே சமயத்தில் எதையும் எதனுடனும் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டேன். உயர்வு, தாழ்வு கற்பிக்கவும் மாட்டேன். எங்கு இருந்தாலும், என் வாழ்க்கையை நான் வாழ்வேன்.

தமிழ்நாட்டுடனான நட்பு, தொடர்புகள் எப்படி உள்ளன?

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட வளவனூர் எனது சொந்த ஊர். எனது உறவினர்கள் அந்த ஊரைச் சுற்றியே உள்ளனர். நான் பணிநிறைவு பெற்றதால், பெங்களூரிலேயே இருக்கவேண்டிய தேவையானது குறைந்துவிட்டது. அங்கும், இங்குமாக மாறிமாறித்தான் வசித்து வருகிறேன்.

நண்பர்களோடும் எழுத்தாளர்களோடும் நல்ல தொடர்பில் இருக்கிறேன். தொடக்கத்தில் கடிதங்கள் வழியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு எப்போதாவது ஒருமுறை ஏதேனும் நிகழ்ச்சியில் சந்தித்து மகிழ்வோம். இப்போது கைப்பேசியும் இணைய வசதியும் அனைவரையும் அருகருகே இருப்பவர்களாக உணர வைத்துவிட்டது.

உங்கள் இலக்கியச் செயல்பாடுகளுக்கு பெங்களூரு சாதகமா?, பாதகமா?

இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சொந்தமாக எழுதியிருக்கிறேன். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். அனைத்தும் இந்த இடத்தில் வசித்தபடி செய்தவையே. எண்ணங்களின் ஆழமும் செயல்களின் விசையும்தான் ஓர் எழுத்தாளனுக்கு முக்கியமானவை. பிற எதுவுமே பொருள்படுத்தத்தக்கவையல்ல.

நீங்கள் எழுதிய 'நான் கண்ட பெங்களூரு' மிக முக்கியமான படைப்பு. எப்படிப்பட்ட சூழலில் அதை எழுதினீர்கள்?

நகரம் தொடர்பான நூல்களை வெளியிட வேண்டும் என எனது நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜன் விரும்பினார். தான் பிறந்து வளர்ந்த மாயவரம் குறித்து ஒரு புத்தகத்தை அவரே எழுதினார். அந்த வரிசையில் நான் பெங்களூரைப் பற்றி எழுதினேன்.

ஒரு நகரம் என்பது சில புவியியல் எல்லைகளுக்கு உள்பட்ட நிலப்பரப்பு என்றபோதும், மனித வாழ்க்கையால் காலம்தோறும் மாற்றம் அடையும். அதுதான் ஒரு நகரத்தின் வரலாறும் பண்பாடும் செழுமையடையும் வழிமுறையாகும். என் இயல்பான ஆர்வத்தால், பெங்களூரில் நான் வசிக்கத் தொடங்கிய காலத்தில் அத்தகு வழிமுறைகளின் தடங்களைத் தேடித் தேடி அறிந்தேன். அதனால், நண்பரின் தூண்டுகோலால் பெங்களூரைப் பற்றிய புத்தகத்தை எழுதத் தொடங்கியதும், அது வாழ்வு அனுபவக் கட்டுரைகளின் தொகுதியாக அமைந்துவிட்டது.

படிக்கும் மொழியிலும் மொழியாக்கம் செய்யும் மொழியிலும் என இருமொழி பயிற்சி உள்ளவர்கள் வெற்றிகரமான மொழிபெயர்ப்பாளராக விளங்கமுடியுமா?

படைப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறேன். இருமொழிப்பயிற்சி என்பது அடிப்படைத்தேவை. ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளராக இருப்பதற்கு அது மட்டுமே போதாது. வாசிப்பு ஆர்வமும், நல்ல ரசனையும் வேண்டும். தன் வாசிப்பு அனுபவத்தின் வழியாக சிறப்பான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் அனுபவம் வேண்டும்.

ஒரு படைப்பின் உட்சரடாக மறைந்திருக்கும் குரலையும் அது அடையும் வெவ்வேறு பரிமாணங்களையும் உய்த்துணரும் அர்ப்பணிப்பும் வேண்டும். ஒரு மாலையைத் தொடுப்பதுபோல, ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒரு சொல்லின் பொருளை அழகாக வெளிப்படுத்தும் பொருத்தமான இணைச்சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடுக்கவேண்டும். அப்போதுதான் ஒரு மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும்.

சமீபத்தில் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் எந்தப் படைப்பை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள்?

மிகச் சிறந்த கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ரா எழுதிய 'அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்னும் தன் வரலாற்றுத் தன்மையில் அமைந்த கட்டுரைகளின் தொகுதி தமிழில் கே.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் 'டூ ஷோர் ப்ரஸ்' என்னும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஒரு மகனின் நினைவில் நீடித்திருக்கும் தாய் பற்றிய சித்திரங்களின் தொகுப்பு என ஒரு கோணத்தில் அந்தப் புத்தகம் தோற்றமளித்தாலும், முப்பதாண்டு காலத்தின் கிராமச் சித்திரங்களும் கிராம மனிதர்களின் சித்திரங்களும் ஒருங்கிணைந்த காட்சித்தொகுப்பாகவே அமைந்துள்ளது. ஒரே அமர்வில் நாலைந்து மணி நேரங்களில் படித்து முடிக்கத்தக்க அளவில் மிகச்சிறப்பாக நண்பர் நல்லதம்பி மொழிபெயர்த்துள்ளார்.

உங்கள் மொழிபெயர்ப்பில் கடந்த 1990-களில் வெளிவந்த 'ஊரும் சேரியும்', 'கவர்ன்மெண்ட் பிராமணன்' சுயசரிதைகள் பரவலாகப் படிக்கப்பட்டவை. இப்போதும் கன்னட மொழியில் சுயசரிதை மரபு தொடர்கிறதா?

சமூகப் போராளி, அரசியல்வாதி, ஒரு பணக்கார முதலாளி, அறிவியலாளர் ஆகியோர் எழுதும் சுயசரிதைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே எழுத்தாளரின் சுயசரிதைக்கும் கன்னட மொழிச்சூழலில் எப்போதும் வரவேற்பு உண்டு.

குவெம்பு, த.ரா.பேந்த்ரே காலத்திலேயே அது தொடங்கிவிட்டது. சிவராம காரந்த் எழுதிய 'பத்து மனத்தின் பித்துமுகங்கள்' எனும் சுயசரிதை பல பதிப்புகளைக் கண்டுவிட்டது.

எஸ்.எல்.பைரப்பா, லங்கேஷ், யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரீஷ் கார்னாட், சித்தலிங்கையா, மொகள்ளி கணேஷ் என சுயசரிதை எழுதிய எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

வசுதேந்த்ரா போன்றவர்கள் காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப்பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

படம் : புதுவை நேரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT