மோரில் ஊறவைத்த கடுக்காயைச் சாப்பிட, பலவித உடல் உபாதைகள் நீங்கும் என்று கேள்விப்படுகிறேன். அதன் மருத்துவக் குணங்கள் என்னென்ன?
-நெடுமாறன், மாயவரம்.
ஆயுர்வேதம் 'அன்னாத் புருஷ:' என்கிறது. உணவு முறையாகச் செரிமானமாகி உடல் திசுக்களாக மாறும்போதுதான் ஆரோக்கியம் நிலைக்கிறது. அதற்கான ஏற்பாட்டை நீங்கள் குறிப்பிடும் 'தக்ரஹரீதகீ' செய்கிறது. 'தக்ரம்' என்பது மோர். 'ஹரீதகீ' என்பது கடுக்காய். ஏடு நீக்கிய அரை லிட்டர் தயிரில், கால் பங்கு தண்ணீர் விட்டு மத்தித்துக் கடைய அதுவே மோர் ஆகிறது.
லேசான தன்மை, துவர்ப்பு, புளிப்பு ஆகியன பசியைத் தூண்டி, கப வாதங்களின் சீற்றத்தை அடக்கும் தன்மையுடைய இந்த மோரில், இரவு முழுவதும் கடுக்காய் ஒன்றை ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, அந்த மோரையும் பருகிவிட அமுதத்திற்குத் துல்லியமாகும்.
மேற்குறிப்பிட்ட மோரின் குணங்களுடன் கடுக்காயின் குணங்களாகிய துவர்ப்பு, புளிப்பு, மிதமான இனிப்பு, ருசி, லேசு, வறட்சி, சூடான வீரியம், சீரண இறுதியில் இனிப்பு ஆகியவை வயிற்றில் சேர்க்கப்படும்போது, ஆமபசனம் எனும் மப்பு நிலை, வழுவழுப்புடன் கூடிய மந்த நிலையானது செரித்து, வயிறு சுத்தமான நிலையை உருவாக்குகிறது. செரிமானக் கோளாறு, ருசியின்மை, கிராணி, சோகை, தோல் உபாதைகளுக்குச் சிறந்த தீர்வாகப் பயனளிக்கும்.
'தக்ரம் ஹரீதக்யா யுக்தம் ஸர்வ ரோக நிவாரணம்' எனும் ஸூஸ்ருதரின் கூற்றையும் நாம் புறம் தள்ளலாகாது. நவீன மருத்துவ நோக்கில் மோர்க் கடுக்காய், குடலில் உள்ள ப்ரோ பயாடிக் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும். காலை உணவிற்கு முன் ஊறிய கடுக்காயை (கொட்டை நீக்கியது) மென்று சாப்பிட்டு, மோரை 100 - 150 மி.லி. அளவில் 15-30 நாள்கள் வரை உட்கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கு, பித்தம் அதிகம் உள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதனைத் தனியாக உட்கொள்ள வேண்டாம்.
இன்று மக்கள் மத்தியில் ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மப்புநிலை (அரை செரிமானப் பொருள்) சோர்வு, தோல் நோய்கள் போன்றவை பரவலாகக் காணப்படுகின்றன. இத்தகைய பிரச்னைகளுக்கு இயற்கையான வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மருந்து ஒன்று உண்டு என்று சொன்னால், அது மோரில் ஊற வைத்த கடுக்காய் மட்டுமே.
இதனால் சீரான செரிமானம் ஏற்பட்டு, மலம் சீராகச் செல்வதுடன் உடல் சோம்பல் நீங்கி, புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு, இரைப்பை அழற்சி, சிறிய அளவில் அடிக்கடி வாயுவுடன் வெளியேறும் மலம் போன்ற உபாதைகளுக்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறது.
காபியையே காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு விரும்பி அருந்துபவர்கள் பலர். அவர்களுக்கு கடுக்காய் மற்றும் மோரை வெறும் வயிற்றில் சாப்பிடவும் என்று கூறியதும் முகத்தில் வேதனை பரவுவதைப் பார்க்க
முடிகிறது. அதனால் அவர்கள் மாலையில் ஏழு மணிக்கு இந்த மோரில் ஊறிய கடுக்காயைச் சாப்பிடலாம். ஆனாலும் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பல நல்ல பயன்கள் கிடைக்காமல் போனாலும், இதை ஒரு நாளில் ஒருவேளையாவது சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நலமே.
உடலில் நீர்க்கட்டு உள்ளவர்கள், வயிற்றில் நீர் சேர்ந்து வெளியேறாமல் தங்கி நிற்கும் நிலை, உள்மூலம், வெளிமூலம் உள்ளவர்கள் உண்ட உணவு சரிவர செரிக்காமல் அப்படியே மலத்தில் வெளியேறும் உபாதை, சிறுநீர்த்தடை, வயிற்றில் வாயு பந்து போல் கட்டி நிற்கும் உபாதை, மண்ணீரல் வீக்கம், இடு விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சோகை நோயினால் அவதியுறுபவர்கள், இந்த மோர்க்கடுக்காய் உபயோகத்தினால் பயனடைவார்கள். கடுக்காயின் தனிப்பட்ட குணங்களாகிய புத்தியைத் தூண்டி விடுதல், இளமையைத் தக்க வைத்தல், சர்க்கரை உபாதையைக் கட்டுப்படுத்தல், இதய நோய்த் தாக்கலை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற நன்மைகளையும் பெறலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.