கழுதை தேய்ந்து நாடகத்தில்... 
தினமணி கதிர்

உயிர்பெற்று வந்த கதாபாத்திரங்கள்!

எழுத்தாளர் சிவசங்கரி எழுதியவற்றில் 'கழுதை தேய்ந்து', 'தலைவர் வருகிறார்', 'சண்டை', 'ஆயா', 'தெய்வம் நின்று கொல்லும்', 'தெப்பக்குளம்' ஆகிய ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நாடகமாக்கி, சென்னை நாரத கான சபாவில் 'கோமல் தியேட்டர்ஸ்' நாடகக் குழுவினர் மேடையேற்றினர்.

ஜி.மீனாட்சி

எழுத்தாளர் சிவசங்கரி எழுதியவற்றில் 'கழுதை தேய்ந்து', 'தலைவர் வருகிறார்', 'சண்டை', 'ஆயா', 'தெய்வம் நின்று கொல்லும்', 'தெப்பக்குளம்' ஆகிய ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நாடகமாக்கி, சென்னை நாரத கான சபாவில் 'கோமல் தியேட்டர்ஸ்' நாடகக் குழுவினர் மேடையேற்றினர்.

இந்நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கோமல் தியேட்டர்ஸ் நிர்வாகி தாரிணி கோமல் பேசும்போது, 'சிவசங்கரியின் 83-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆறு சிறுகதைகளை நாடகமாக்கிப் பரிசாக வழங்குகிறேன். இந்த வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி'' என்றார்.

பின்னர், சிவசங்கரியின் கலை இலக்கியப் பணிகளை விளக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

'எழுத்தாளரின் சிறுகதையை நாடகமாக்கும்போது, சிற்சில சேதாரங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது' என்பார்கள். ஆனால், இந்த ஆறு நாடகங்களும் அச்சில் படித்ததைப் போலவே அதன் மூலத்தன்மை மாறாமல் இருந்தன. நடிகர், நடிகைகளின் அளப்பரிய பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

இயற்கைக் காட்சிகள், நவீன வீடுகள், விஸ்தாரமான மைதானம் எனப் பின்னணிக் காட்சிகளை தத்ரூபமாகக் காட்ட எல்.இ.டி. டிசைனில் புதுமைகளைப் புகுத்திய தொழில்நுட்பக் கலைஞர் தியாகராஜனை பலரும் பாராட்டினர். உறுத்தாத பின்னணி இசையை வழங்கிய விஸ்வா ஜெய், ஒப்பனைக் கலைஞர் பெரம்பூர் குமார், ஒளிப்பதிவாளர் சேட்டா ரவி என அனைவரின் திறமையும் பளிச்சிட்டன. சிறப்பான கலைஞர்கள் அமைந்திருப்பதே கோமல் தியேட்டர்ஸ் நாடகக் குழுவுக்கு வரப்பிரசாதம்தான்.

நாடகங்கள் முடிந்து அரங்கைவிட்டு வெளியே வந்தபோது, சிவசங்கரியின் கதாபாத்திரங்கள் உயிர் பெற்று மேடையில் தோன்றி 110 நிமிடங்களுக்கு ரசிகர்களிடையே வாழ்ந்தது போன்ற நிறைவு மனதை வியாபித்திருந்தது.

முதலில் மேடையேறிய 'கழுதை தேய்ந்து' நாடகம் நடுத்தர வர்க்கத்தினரின் மனதை வெகு அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியது. துன்பப்படுபவர்களுக்கு பண உதவி செய்ய மனம் இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் நெருக்குதல்கள் அந்த உதவியைச் செய்ய விடாமல் எப்படித் தடுக்கின்றன என்பதை மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் சொல்லிய விதம் அருமை. சகஸ்ரநாமம், வித்யாலட்சுமியின் நடிப்பு வெகு இயல்பு.

தெய்வம் நாடகத்தில்...

'தலைவர் வருகிறார்' நாடகத்தில், அரசியல்வாதியின் வருகையால் ஏற்படும் பரபரப்பையும், அதனால் ஏற்படும் பண விரயத்தையும் விலாவாரியாக விவரித்தது. கடைசியில் திட்டமிட்டபடி அரசியல்வாதி வராமல்போக, அதிலும் ஒரு நன்மை கிடைத்ததை எண்ணி மகிழ்கிறாள் கதாநாயகி. அனுராதா கண்ணனின் அசத்தலான நடிப்பும், வித்யாலட்சுமியின் துடுக்கும் ரசிக்கும்படி இருந்தன.

'சண்டை' நாடகத்தில் உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காகச் சண்டையிட்டுக் கொண்டு விவாகரத்து வரை செல்லும் இந்தக் கால இளம் தம்பதிகளைப் படம் பிடித்துக் காட்டியது. சித்தார்த்தும், கிருத்திகா சுரஜித்தும் இளம் தம்பதிகளாகவே வாழ்ந்திருந்தார்கள்.

'தெய்வம் நின்று கொல்லும்' நாடகம் பெரும் பாரத்தை ஏற்றி வைத்து விடுகிறது. கதாநாயகன் விக்னேஷ் செல்லப்பனின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. பணத்தில் புரள்வதால், வாழ்க்கையில் தடம் மாறிப் போகும் இளைஞர்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். கதை நடை

பெறுவதாகக் காட்டப்படும் ஏற்காடு எஸ்டேட், விசாலமான வீடு என வெவ்வேறு காட்சிகளுக்கேற்ப மாறும் பேக்ரவுண்ட் எல்.இ.டி. டிசைன், டிஜிட்டல் திரைக்காட்சிகள் அசத்தின.

தலைவர் வருகிறார் நாடகத்தில்...

'ஆயா' நாடகத்தில் நடித்த நாஞ்சில் ரேவதியின் நடிப்பு தத்ரூபம்தான். வட்டார வழக்கில் பேசுவதும், உரலில் லாகவமாக வெற்றிலையை இடித்து வாயில் போட்டுக் கொள்வதும் என கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்து காட்டியிருந்தார் ரேவதி. கண் இமைக்கும் நொடியில் வெவ்வேறு ஆடைகளுக்கு மாறி மேடையில் தோன்றி, பார்வையாளர்களை ஆச்சரிப்பட வைத்தார். பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரத்துக்கு வெகு பொருத்தமாகப் பொருந்திப் போயிருந்தார் காவ்யா.

'தெப்பக்குளம்' நாடகமானது சுற்றுச்சூழலைப் பராமரிக்கத் தவறிவிட்டதை விளக்கியது. கல்பனாவாக நடித்த கிருத்திகா சுரஜித்தின் இயல்பான நடிப்பு வியக்க வைத்தது. 'குழந்தைப் பருவத்தில் பார்த்த காட்சிகளை இப்போது பார்க்க ஆசைப்பட்டால், அவை எப்படிப்பட்ட ஏமாற்றத்தைத் தரும்' என்பதை கிருத்திகாவின் தேடலில் அறியும்போது, உண்மை முகத்தில் அறைவது போல் இருப்பதை தவிர்க்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT