RakeshkumarB
தினமணி கதிர்

கற்பக விநாயகம் - ரொமிலா தாப்பர்

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காந்தாரா சாப்டர் 1' படத்தில் 'பூதகோலா' காட்சிகள் இடம்பெற்றன.

ராஜிராதா

பூதகோலா...

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காந்தாரா சாப்டர் 1' படத்தில் 'பூதகோலா' காட்சிகள் இடம்பெற்றன. இந்த ஆவி புகுதல் காட்சிகளை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் நிறைய ரீல்ஸ்கள் வந்தன.

'எங்களுடைய மத வழிபாட்டை வைத்து கிண்டலா?' என பல்வேறு கிராமங்களில் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்தப் படத்தைத் தயாரித்து நடித்த ரிஷப் ஷெட்டியோ, 'எனக்கு நம்பிக்கை இருக்கு... நடித்தேன். அதில் யாரும் தலையிடத் தேவை இல்லை'' என்றார்.

'பூதகோலா' குறித்து அறிவோம்: கர்நாடகாவின் தட்சண கன்னடா, உடுப்பி, கேரளத்தின் காசர் கோடு பகுதிகளில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய சமய நாட்டுப்புறக் கலை, நடனம் சார்ந்த தெய்வ வழிபாடு பூதகோலாவாகும்.

'பூத' என்பது 'ஆவி'; 'கோலா' என்பது விளையாட்டு அல்லது நிகழ்ச்சி. கலைஞர்கள் அதற்கான உடைகளில், முகத்தில் வர்ணம் பூசி ஆவிகளை வரவழைத்து தெய்வீக நடனம் ஆடுவதேயாகும். அவர்களில் உடலில் ஆவி புகுந்த நிலையில் தீராத பிரச்னைகளுக்குத் தீர்ப்பும், வருங்காலம் பற்றியும் கூறுவார்கள்.

இது கேரள தெய்வம் கலைவடிவம் சார்ந்தது. மாறுவேடம் போல் தோன்றினாலும் நம்புபவர்களுக்கு அது தெய்வ வாக்கு. நவம்பர் முதல் மே வரை ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறும். அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து, கேள்விகள் கேட்டு பதில் பெறுவர்.

வீடுகளில் வழிபடுவதில்லை: விவசாய நிலம் சார்ந்த தெய்வங்கள், வன தெய்வங்கள், கடல் தெய்வங்கள் உள்ளிட்டவை வீடுகளில் வணங்கப்படுவதில்லை. இயற்கை தெய்வங்களாக பஞ்சுர்லி, குலிகா, மல்லராப்பா ஜுமாதி எனப் பல தெய்வங்கள் உண்டு. வாழ்ந்தவுடன் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி அடைபவர்கள், பழங்குடி பாதுகாவலர்கள், கொரகஜ்ஜா, கொரடப்பு, அன்னப்பா என சில தெய்வங்களும் உண்டு.

மூதாதையர் வழி தெய்வங்களும் உண்டு. இறப்பவர்கள் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தெய்வமாகி விடுவர். அவர்களை அழைத்தால் ஆவி உருவத்தில் புகுந்து தீர்ப்புகளையும் எதிர்காலம் பற்றியும் கூறி, பின்னர் தாமே விலகிச் சென்றுவிடுவர்.

பஞ்சுர்லி: 'பஞ்சுர்லி' என்ற பன்றி தெய்வம், பயிர்களை காட்டுப் பன்றிகளிடமிருந்து காப்பாற்ற வணங்கப்படுவதாகும். கயிலாயத்தில் சிவனின் தோட்டத்தில் ஒரு காட்டுப் பன்றி இருந்தது. அது ஒருநாள் இறந்தது. அதற்கு ஒரு குட்டி இருந்தது.

அதனை பார்வதி பரிதாபப்பட்டு தத்து எடுத்து, வளர்த்தார். அது வளர்ந்ததும் சிவனின் தோட்டத்தை அழிக்க ஆரம்பித்தது. சிவனும் அதைக் கொல்ல எண்ண, பார்வதி அதனைத் தடுத்து, 'நீ ஒரு பாதுகாவலராக தெய்வ அந்தஸ்துடன் வாழ்வாய்'' என பூமிக்கு அனுப்பி வைத்தார். அதுதான் பஞ்சுர்லி. அதாவது தெய்வீக ஆவி. இதை விஷ்ணுவின் 'வராகர்' எனவும் சிலர் கூறுவது உண்டு.

பாபர்யா: மீன் பிடி சமூகத்தினால் வணங்கப்படுவது 'பாபர்யா' என்ற தெய்வம். கல்குடா சிறந்த சிற்பி. மன்னர் கேட்டதால், சில சிலைகளை செய்து கொடுத்தார். அவற்றின் அழகில் மயங்கிய மன்னன் குரூர புத்தி கொண்டு, 'இனி யாருக்கும் சிலை செய்யக் கூடாது' என எண்ணி சிற்பியின் இடது கை, வலது காலை துண்டித்து விட்டார். இதனால் அந்த சிற்பி தற்கொலை செய்து கொண்டார். அதனால் வருந்திய சிற்பியின் சகோதரி சிவனிடம், தங்கள் இருவரையும் தெய்வமாக்கி விடும்படி வேண்டினாள். இருவரையும் தெய்வீக ஆவி பாதுகாவலர்களாக சிவனும் நியமித்தார்.

குலிகா: குலிகா என்றொரு தெய்வம் உண்டு. 'சாம்பலிலிருந்து கல்லை பார்வதி எடுத்து, அதற்கு தெய்வ ஆவி வடிவம் தந்தார்' என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அநீதிக்கு எதிராகப் போராடியவர்களும் தெய்வங்கள்: அநீதிக்கு எதிராகப் போராடி அகால மரணம் அடைந்தவர்கள் தெய்வ அந்தஸ்தை அடைகின்றனர். இந்தத் தெய்வங்கள் தவறு செய்தவர்களை பழிவாங்குகிறது. இல்லையெனில், பக்தர்களைப் பாதுகாக்கிறது. இப்படி சுமார் 500 தெய்வங்கள் துளு மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலாவுவதாக மக்கள் நம்புகின்றனர்.

அடி மட்ட நிலையில்தான் இந்தத் தெய்வங்கள் உள்ளன. பம்பாகர்கள், பரவர்கள் போன்ற பல்வேறு சமூகங்கள் சார்ந்து தனித்தனி தெய்வங்கள் உள்ளன. இவை பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT