தினமணி கதிர்

குறளிசைக்காவியம்

லிடியன் நாதஸ்வரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை மழலை மேதை.

எஸ். சந்திரமெளலி

லிடியன் நாதஸ்வரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை மழலை மேதை. 2005-இல் பிறந்த இவர் தனது 14 ஆவது வயதில் அமெரிக்காவின் புகழ் பெற்ற சி.பி.எஸ். தொலைக்காட்சியின் 'உலகின் மிகச் சிறந்த திறமைசாலி' போட்டியில் பங்கேற்று பத்து லட்சம் டாலர் பரிசு பெற்றவர்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து, இயக்கிய முப்பரிமாண திரைப்படத்தின் இசையமைப்பாளர். 1330 திருக்குறளுக்கு மட்டுமின்றி, அவற்றின் பொருளுரைக்கும் இசை அமைத்து லிடியன் தமிழ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

லிடியனின் அப்பா வர்ஷன் சதிஷ் ஓர் இசையமைப்பாளர். அக்கா அமிர்தவர்ஷணி ஒரு பாடகி. லிடியன் நாதஸ்வரம் நம்மிடம் பேசுகிறார்.

உங்களுடைய இசைத்திறமையை உங்கள் பெற்றோர் எப்போது, எப்படி கண்டறிந்தார்கள்?

என்னுடைய இசைப்பயணம் 2007 ஜனவரி 27 அன்று என் அக்கா அமிர்தவர்ஷிணியின் பிறந்த நாளன்று ஆரம்பித்தது. அன்று அவருக்கு யாரோ ஒருவர் ஒரு சைலஃபோன் இசைக் கருவியை பரிசாகக் கொடுத்திருந்தார்கள். நான் அந்த சைலஃபோன் வாசிக்கும் குச்சியை கையில் எடுத்து, ஒரு புது உடையை பேக் செய்த அட்டைப் பெட்டியில் ஒரு டிரம் பீட் வாசித்தேன்.

அதில் இருந்த லயத்தை முதலில் கவனித்த என் அக்கா, அதை எங்கள் அப்பாவிடம் சொல்ல, அவர்கள் என்னுடைய இசைத்திறமையைக் கண்டறிந்தார்கள். மறுநாளே என்னை ஊக்குவிக்கும் வகையில் அப்பா எனக்கு ஒரு டிரம்ஸ் செட் வாங்கிக் கொடுத்துவிட்டார். நன்றாக டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொண்டு என் மூன்றாவது வயதில் இருந்து அப்பா, அக்காவுடன் இசை நிகழ்ச்சிகளில் வாசிக்கத் துவங்கினேன்.

திருக்குறள் பற்றி முதன் முதலாக எப்போது தெரிந்து கொண்டீர்கள்?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், 2014 கடைசியில் என்று சொல்லலாம். அப்போது எனக்கு ஒன்பது வயசு. என் அக்காவுக்கு 12 வயசு. ஒரு நாள், எங்கள் அப்பா 'நீங்கள் மேடை நிகழ்ச்சிகளில் நிறைய பாடுகிறீர்கள். சினிமா, கமர்ஷியல் மியூசிக் எல்லாம் செய்கிறீர்கள்.

ஆனால், இன்றைய இளைய தலைமுறைக்கு, வருங்கால சந்ததியினருக்குப் பயன்படும்படியாக ஏதாவது ஒரு புதுமையான விஷயத்தை நீங்களே உங்கள் திறமையைப் பயன்படுத்தி சிருஷ்டிக்க வேண்டும்! அதுவும் தமிழில் ஏதாவது செய்யுங்கள்!' என்று சொன்னார்.

அதை ஏற்றுக் கொண்டு 'என்ன செய்யலாம்?' என்று அவரிடமே கேட்டபோது, 'திருக்குறளுக்கு இசை அமையுங்கள்' என்று சொன்னார். அதன் பின்னரே நாங்கள் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் தெரிந்துகொண்டோம். உடனே, திருக்குறளுக்கு இசை அமைக்கும் பணியை என் அக்கா ஆரம்பித்துவிட்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.

திருக்குறளின் முப்பால்களில் அறத்துப் பால், பொருட்பால் இரண்டும் பிரச்னை இல்லை. ஆனால், காமத்துப் பாலுக்கு இசை அமைத்துப் பாடுவதற்கு தக்க வயதும், போதிய மன முதிர்ச்சியும் தேவை; அந்தச் சிறு வயதில் அதைச் செய்தால், அது சர்ச்சைக்குள்ளாகலாம் என்று நினைத்தோம். எனவே, அந்தப் பணியை அப்போது கைவிட்டுவிட்டோம்.

அடுத்து, 2023 செப்டம்பர் 6 அன்று எனக்கு பதினெட்டு வயது ஆகும்வரை காத்திருந்தோம். அதன் பிறகு செப். 8ஆம் தேதி இந்தப் பணியைத் துவக்கினோம். ஆனால் இப்போது ஒரு முக்கியமான மாற்றம் செய்தோம். முன்பு வெறுமனே திருக்குறளுக்கு மட்டுமே இசை அமைத்தோம். ஆனால், இப்போது குறளுக்கும், அதன் பொருளுக்குமாக இசை அமைத்திருக்கிறோம்.

இப்போது, எங்களது வயது முதிர்ச்சி காரணமாக குறளுக்கான பொருளையும் எங்களால் புரிந்து, இசையமைக்க முடிந்தது. நாங்கள் வழக்கமான பள்ளிக்கூடக் கல்விக்குப் போகாமல், வீட்டுக் கல்வி பயின்றோம். ஆனால், எங்களுடைய குறளோவியம் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கூட எளிமையாகப் புரியும் வகையிலும், மனதில் பதியும் வகையிலும் அமைந்துள்ளது என்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

சக்திவாசன் என்பவர்தான் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுக்கு திருக்குறளும், பொருளும் மட்டுமில்லாமல் சில வாழ்வியல் கல்வியையும் சொல்லிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த திருக்குறள் பொருளுரைக்கும் சேர்த்து நாங்கள் இசை அமைத்திருக்கிறோம்.

குறளுக்கு இசை அமைப்பதற்கும், பிற இசையமைப்புகளுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

நான், அக்கா, அப்பா என்று மூன்று பேர் மட்டுமே எல்லா குறளையும் பாட வேண்டாம் என முடிவு செய்து, உலகெங்கும் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான பாடகர்களை ஒருங்கிணைத்து, பாட வைத்து, ஒலிப்பதிவு செய்தது என் அக்கா அமிர்தவர்ஷிணிதான். எல்லா குறளுக்கும், பொருளுக்கும் மெலடி வரிகளுக்கு இசை அமைத்தது அவர்தான்.

குறள்காவியத்தில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, பாட வைத்திருக்கிறோம். எல்லா பாடகர்களுக்கும் உரிய இசைக்கருவிகளை வாசித்ததும், இசைக் கோர்ப்பு செய்ததும் நான்தான். இது உலகப் பொது மறை என்பதால், அப்பாவின் ஆலோசனைப்படி உலகின் பல்வகையான இசையைக் கற்றுக் கொண்டு, இசையில் நான் கற்றுக் கொண்டதையெல்லாம், சுதந்திரமாக இதில் பயன்படுத்தி உள்ளேன்.

ஆனாலும், இசைக்கடலில் எனக்குத் தெரிந்தது ஒரு துளிதான். குறள் இசையமைப்பில் மறக்க முடியாத முக்கிய தருணங்கள், அனுபவங்களை சொல்லுங்கள். 'குறள் காவியம்' பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்த இரண்டு வருட காலத்தில் மொத்தம் சுமார் 15 நாடுகளில் இருந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால், எங்கள் கவனமும், ஈடுபாடும் சிதறக்கூடாது என்பதற்காக அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தப் பணியில் சுமார் ஆயிரம் பாடகர்களை பங்கேற்கச்செய்ய வேண்டி இருந்தது. எங்கள் அப்பா, இந்த இமாலயப் பணியை இரண்டு வருடங்களில், உனக்கு 20 வயதாகும்போது முடிக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். தினமும் சராசரியாக 16 மணி நேரம் நாங்கள் இதற்காக உழைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம்; புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டோம். தினம், தினம் எங்கள் அப்பாவும், அம்மாவும் எங்களை ஊக்குவித்து, இந்தத் திட்டம் சிறப்பாக நிறைவடைய உறுதுணையாக இருந்தார்கள்.

சிறு வயது பாடகர்கள் முதல் பி.சுசீலா, கே.எஸ்.சித்ரா, டி.வி.கோபாலகிருஷ்ணன் போன்ற மிக மூத்த இசைக்கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பலரும் பாடி இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் மலையாளஅஸ்ஸாமி பெற்றோர்களுக்குப் பிறந்த மூன்று வயது குழந்தை சான்வி விஷ்ணு தமிழில் திருக்குறளைப் பாடியதை ஒலிப்பதிவு செய்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.

நல்ல குரல்வளம் இருந்தாலும், திருமணத்துக்குப் பின் பாடாமல் இருந்த சிலர், திருக்குறளைப் பாடி ஒலிப்பதிவு செய்தபோது, 'வாழ்க்கையில் ஒரு முறையாவது பாடல் பாடி, ஒலிப் பதிவு செய்ய வேண்டும்' என்ற ஆசை இன்று நிறைவேறியது என்று மனம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். இது போல நிறைய மறக்க முடியாத அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

நீங்கள் இந்தக் குறள் காவியம் பணியில் ஈடுபட்டபோது உங்களுக்குக் கிடைத்த முக்கியமான ஆலோசனை, அறிவுரை என்ன?

அறிவுரை என்று பார்த்தால், என்னுடைய பெற்றோர் தவிர இன்னொருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால், அது திருவள்ளுவரைத்தான். கடந்த இரண்டு வருடங்களாக எங்களது குறள் காவியப் பயணம் மகிழ்ச்சியானது. மனதுக்கு ஆழ்ந்த திருப்தி அளித்தது. புதிய விஷயங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு திருக்குறளுக்கும்.

அதன் பொருளுக்கும் இசைவடிவம் கொடுத்தபோது, அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து என்ன என்பதை எங்களால் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. வள்ளுவர் ஒவ்வொரு குறளிலும் வாழ்க்கைக்குத் தேவையான எத்தனை கருத்துகளை அளித்திருக்கிறார் என்பதை அறிந்து மிகவும் வியப்படைந்தோம்.

இப்போது 1330 திருக்குறளும் எனக்கு பொருளோடு இசை வடிவிலேயே மனப்பாடம் ஆகிவிட்டது. நான் திருக்குறளின் மூலமாகக் கற்றுக் கொண்ட வாழ்வியல் கருத்துகளை என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழவேண்டும் என விரும்புகிறேன்.

வள்ளுவர் உங்கள் முன் தோன்றினால் அவரிடம் என்ன கேட்பீர்கள்? பேசுவீர்கள்?

சாத்தியமில்லாத கற்பனைக் கேள்வி என்றாலும், ரொம்ப ரொம்ப சுவாரசியமான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய நன்றி. முதலில் நானும், என் குடும்பத்தினரும் அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, அவரது ஆசிர்வாதங்களைப் பெறுவோம். அவரிடம் முழுமையாக சரணாகதி அடைவேன். அவர் முன்னால் என்னால் வாய் திறந்து ஏதும் பேசமுடியுமா என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

அதே சமயம், கற்பனையில் திருவள்ளுவருடனான அந்த சந்திப்பினை நினைத்துப் பார்க்கிறபோது எனக்கு மெய் சிலிர்க்கிறது. அவரை எங்கள் வீட்டுக்கு அழைப்போம்; எங்கள் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அழைப்போம்; எங்கள் அம்மா சமைத்த விருந்தை சாப்பிட அழைப்போம். எங்களுடைய குறள் காவியம் பற்றி அவரது கருத்து கேட்போம்.

ஆனால், நாங்கள் கடந்த இரண்டு வருட காலமாக எங்கள் வீட்டில், எங்கள் ஒலிப்பதிவுக் கூடத்தில் திருவள்ளுவர் உயிர்ப்புடன் இருப்பதாகவே உணர்ந்தோம். சாதாரணமாக வாழ்க்கையில் நடக்க சாத்தியமில்லாத விஷயங்கள் கூட கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்கு நடந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் முறையாக நான் அப்பா, அம்மா, அக்காவுடன் வள்ளுவர் கோட்டத்துக்குப் போனேன்.

அன்று நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்த இரண்டாவது நிமிடம், லேசாக பூ தூவுவது போல தூறல் ஆரம்பித்தது. நாங்கள் வள்ளுவர் கோட்டத்திலிருந்து புறப்பட்ட நேரம் தூறல் நின்று, மீண்டும் வெயில் அடிக்கத் துவங்கியது. இதை வள்ளுவரே எங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து, பரிபூரணமான ஆசி வழங்கினார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறைக்கு தீா்வு? பாகிஸ்தான் அரசு - போராட்டக் குழு ஒப்பந்தம்!

சிஆா்பிஎஃப் முகாம் அருகே இரு வயது குழந்தை சடலமாக மீட்பு

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோன்! காஷ்மீா் எல்லையில் தேடும் பணி தீவிரம்!

பூடான் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு!

விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது: கிருஷ்ணசாமி

SCROLL FOR NEXT