தினமணி கதிர்

நெய்தல் இலக்கிய அலை!

கன்னியாகுமரி பகுதியில் 'நெய்தல் இலக்கிய அலை' உருவாகியுள்ளது.

பிஸ்மி பரிணாமன்

கன்னியாகுமரி பகுதியில் 'நெய்தல் இலக்கிய அலை' உருவாகியுள்ளது. மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து, கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களின் கலாசார வேர்களை நூல்களாக வெளியிடுவதன் மூலம் அடையாளம் காட்டிவருகிறார் எழுத்தாளர் இரையுமன் சாகர்.

தாமிரவருணி ஆறு அரபிக்கடலில் சங்கமிக்கும் இடம்தான், தமிழ்நாட்டின் தெற்கு முனையில் உள்ள மீனவக் கிராமமான 'இரை மண்துறை'. கடல் அலைகள் நிலத்தில் சதா மோதி மோதி நிலத்தை மெல்ல மெல்ல மில்லி மீட்டர் கணக்கில் விழுங்கிக் கொண்டிருக்க, கடலின் மெதுவான, ஆனால் இடைவிடாத நில அபகரிப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் கடலின் மைந்தர்களில் சிலர் தங்கள் ஆற்றாமையைப் போக்கிக்கொள்ள, அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறை எதிர் கொள்ள இருக்கும் அபாயத்தை சற்றே மறக்கச் செய்ய, அவர்கள் எழுதும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் வடிகாலாகின்றன.

எழுத்தாளரும் பதிப்பாளருமான இரையுமன் சாகர் சொல்வது:

'2019 இல், 'கடற்கரை இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை உருவாக்கி, நெய்தல் நில அனுபவங்களை, வலிகளை மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பதிவு செய்ய, நான் புத்தகங்களாக வெளியிடுகிறேன். மீனவ எழுத்தாளர்கள் சிலர் மீன்பிடிக்கப் போகிறவர்கள்.

பெரிய படகுகளில் ஆழ்கடலில் சுமார் 20 முதல் 30 நாள்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில், கடலில் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அலைக்கழியும் படகில் அமர்ந்து சிரமப்பட்டு எழுதுபவர்களும் இருக்கிறார்கள். தினம் காலையில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்களில் சிலர், இரவு நேரங்களில் வீட்டில் எழுதுகின்றனர். வட்டாரச் சொல்லாடல் சிறுகதைகளில், நாவலில் இடம் பெறும். அவை கவிதைகளில் அரிதாக இடம் பெறும்.

இதுவரை 35 நூல்களை வெளியிட்டுள்ளேன். நானும் 5 புத்தகங்கள் எழுதியுள்ளேன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையும், அவர்கள் எழுதும் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது என்பதுதான்.

துபையில் வாழும் மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியின் ஆங்கில நூலான 'ஸீ சைட் நைட்ஸ்' சென்ற மாதம் வெளியிட்டேன். 81 வயதானவர் பல ஆண்டுகளாக எழுதிய கைப்பிரதிகளைப் பார்த்த நான், அதைப் பெற்று ஒவ்வொன்றாக புத்தகமாக வெளியிட்டு வருகிறேன்.

புத்தகங்களை வெளியிடுவதுடன் நிற்காமல், 'கடற்கரை இலக்கிய வட்டம்' சார்பாக கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதவும், ஓவியம் வரையவும், படம் பிடிக்கவும், குறும்படங்கள் தயாரிக்கவும் போட்டிகளை அவ்வப்போது ஏற்பாடு செய்கிறேன். மீனவர்கள் மட்டுமல்ல, இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் படைப்புகளையும் வெளியிட்டு வருகிறேன்.

இளம் மீனவர்களில் சிலர், மீனவச் சமுதாயத்தின் வாழ்க்கை, எதிர்காலம், மீனவர்களைப் போராட வைக்கும் விஷயங்கள் குறித்தும் எழுதுகிறார்கள். மீனவர் வாழ்க்கையின் இன்னும் கவனத்துக்கு வராத துயரங்கள், வலிகள், வேதனைகள், வெற்றிகள் இருக்கின்றன. வடத்திலிருந்து விழும் கடல்நீர்த் துளிகளுக்கும் மீனவன் உடம்பிலிருந்து விழும் வியர்வைத் துளிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

ஒருவகையில் மீனவனும் கடல் மாதிரிதான். இந்த உண்மைகளை நானும் சக எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகிறோம். 'வேளாப் பாடு' என்ற எனது சிறுகதைகளின் தொகுப்பு பலரது கவனங்களைக் கவர்ந்தது. கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை எழுத ஊக்குவித்து வருகிறேன்'' என்கிறார் 54 வயதாகும் இரையுமன் சாகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

அரூா், வந்தவாசி தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை!

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்ட விரோத காவலாகக் கருதக் கூடாது: ஆள்கொணா்வு வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்கு தீா்வு: திருமாவளவன்

SCROLL FOR NEXT