ஒன்றாகப் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல, 1980 முதல் 1990 வரையான காலகட்டங்களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து கொள்கின்றனர்.
கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 80 -களில் கோலோச்சிய நட்சத்திரங்களின் ரீயூனியன் நடந்தேறியது. ஆர்ப்பாட்ட கொண்டாட்டமாக இல்லாமல் அன்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
சென்னையில், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி மாலை நடைபெற்ற இந்நிகழ்வை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஒருங்கிணைத்தனர். இந்த இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளைச் சேர்ந்த 31 நடிகர் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.
அன்பு, நட்பு மற்றும் ஒற்றுமை நிறைந்த இந்த சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் தொடங்கிய ரீயூனியன் காலை வரை நடைபெற்றது. பின்னர் அனைவரும் அடுத்த வருடம் ஒன்று கூடுவோம் எனும் உறுதியோடும் நீங்கா நினைவுகளோடும் விடைபெற்றனர்.
இது குறித்து பேசிய ஏற்பாட்டாளர்கள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி, 'இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் அமைந்தது'' என்றனர்.
பாடல் ஹிட் குறித்து ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், ஆயுஷ்மான் குர்ரானாவும் 'தாமா' என்ற புதிய படத்தில் நடிக்கின்றனர். ஆதித்யா சர்போத்தார் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் 'நுவ்வு நா சொந்தமா' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடல் படமாக்கப்பட்டது குறித்து நடிகை ராஷ்மிகா தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், 'இந்தப் பாடலை உருவாக்க எடுத்த முடிவு இயக்குநரும், தயாரிப்பாளரும் எதிர்பாராதது.
இந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடத்தில் சுமார் 12 நாள் படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், பாடல் படமாக்கப்படவில்லை. கடைசி நாளில், அங்குள்ள அழகான இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அங்கு ஒரு பாடலை படமாக்கினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்தார்.
அந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு சுமார் 3 முதல் 4 நாட்கள் ஒத்திகை பார்த்து பாடல் படமாக்கப்பட்டது. பாடல் முடிந்ததும், எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. காரணம், பாடல் அவ்வளவு அழகாக வந்திருந்தது.
திட்டமிட்டதைவிட அற்புதமாக இருந்தது. இந்தப் பாடலில் பங்கேற்ற நடன கலைஞர்கள், நடன இயக்குநர், படத்தின் இயக்குநர், உடை வடிவமைப்பாளர் என அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவில் அக்ஷரா ரெட்டி!
2021- ஆம் ஆண்டு விஜய் டிவியில் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் 'ரைட்' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு நடிகையாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷரா ரெட்டியிடம் பேட்டி கண்டபோது பல்வேறு ருசிகர விஷயங்களைக் கூறினார்.
'பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று 87 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களைக் கற்றுத் தந்தது. கமலுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவில் ஒன்று. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன். அதற்கு முன்னதாக பிக் பாஸில் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது அவர் அனைவருக்குமான ஒரு அறிவுரையைச் சொன்னார். குறிப்பாக, அந்த அறிவுரை எனக்கு மனதில் பசுமையாக பதிந்துவிட்டது. 'உன்னுடைய வாழ்க்கையின் ஸ்கிரிப்ட்டை நீதான் எழுதுகிறாய்.
உன் வாழ்வில் நாளைக்கு என்ன நடக்க வேண்டும் என்பதைக்கூட நீதான் முடிவு செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டார். அந்த அறிவுரை எனக்கு வாழ்நாள் அறிவுரையாக அமைந்துவிட்டது. அதைப் பின்பற்றி என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். என் வாழ்வில் நாளை என்ன நடக்க வேண்டும் என்பதையும் நான்தான் முடிவு செய்கிறேன்.
எனது தந்தை சுதாகர் ரெட்டி ஐஐடி படிப்பை முடித்தவர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் புல்லட் ப்ரூப் பாதுகாப்புக்கான அத்தனை தொழில்நுட்ப அம்சங்களையும் அவர்தான் செய்து கொடுத்தார். எனது தாய் கெளரி சுதாகர் ரெட்டி. என் வாழ்வில் எல்லாவுமாக இருந்தார். நான் நடிகையாக வர வேண்டும் என்பது அவரது எண்ணம்.
சிறுவயதிலேயே அந்த எண்ணத்தை எனக்கு அவர் விதைத்தார். என் மனதிலும் அந்த ஆசை பதிந்துவிட்டது. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மார்ஷல் ஆர்ட்ஸ், மற்றும் பாக்சிங் பயிற்சி பெற்றிருக்கிறேன். சினிமாவில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடியாக ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
மேலும் வில்வித்தை பயிற்சியும் பெற்றுக் கொண்டு வருகிறேன். பைக் ஓட்டுவேன். குதிரை ஏற்றம் தெரியும். மேலும் சிறு வயதிலிருந்து சங்கீதம் பயின்று வந்திருக்கிறேன். பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. பிரபலப் பாடகி ஸ்ரேயா கோஷலை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகை'' எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.