வேல ராமமூர்த்தி 
தினமணி கதிர்

கதாபாத்திரங்களே என்னைத் தேர்வு செய்கின்றன!

தெற்கத்தி மண்ணின் மணத்தோடு எழுதும் எழுத்தாளர் என்று பெயர் பெற்றவர் வேல ராமமூர்த்தி.

தினமணி செய்திச் சேவை

அருள்செல்வன்

தெற்கத்தி மண்ணின் மணத்தோடு எழுதும் எழுத்தாளர் என்று பெயர் பெற்றவர் வேல ராமமூர்த்தி. இவர் எழுதிய குற்றப்பரம்பரை, குருதியாட்டம், பட்டத்து யானை, அரியநாச்சி போன்ற நாவல்களும் சிறுகதைகளும் இந்த வகையில் பேசும் படைப்புகளாகப் புகழ்பெற்றவை. இவர் இப்போது முகம் தெரிந்த நடிகராகி விட்டார். 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவரைச் சந்திப்போம்:

50 படங்களைத் தாண்டி விட்டீர்கள். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த தருணம் பற்றிச் சொல்ல முடியுமா?

நான் முதலில் ராணுவத்திலும், அதன் பிறகு அஞ்சல் துறையிலும் பணியாற்றினேன் . நான் நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக எழுத்துலகில் பரவலாக அறிமுகமாகி இருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு அறிவொளி இயக்கத்தில் தமிழகம் முழுக்க வீதி நாடகங்கள் என்று பயணம் செய்திருக்கிறேன்.

இப்படிப்பட்ட எனக்கு தமிழ்த் திரை உலகில் பாரதிராஜா போன்ற பல இயக்குநர்களுடனும் நல்ல பழக்கம் இருந்தது. ஆனால் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. அது பற்றி நினைக்காமலேயே என் எழுத்துப் பயணம் தொடர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில் விக்ரம் சுகுமாரன் என்னிடம் கதை சொல்ல வேண்டும் என்றார். அவர் பாலுமகேந்திராவின் மாணவர். வெற்றிமாறனுடன் இணைந்து பயணம் செய்தவர். தவிர்க்கப் பார்த்தேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சற்றும் விருப்பம் இல்லாமல்தான் கதை கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையும், அதில் எனது பாத்திரமும் பிடித்திருந்தது. எனவே நான் உடனே அதில் நடிக்கச் சம்மதித்தேன். அதேபோல் படம் வெளியாகி, அந்த வீரத்தேவர் பாத்திரமும் பேசப்பட்டது.

அந்தப் பாத்திரம் பிடிக்காது போயிருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன் என்று தோன்றுகிறது.

ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை பல நாயகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். அவர்களைப் பற்றி?

ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொன்று உண்டு. விவரித்தால் நீளமாகும். குறிப்பாக 'அண்ணாத்த' படத்தில் நடித்த போது ரஜினி சார் என்னிடம் பழகும் விதமும் அந்த எளிமையான குணமும் எனக்கு ஆச்சரியம் தந்தன. மூர்த்தி சார், மூர்த்தி சார் என்று தான் கூப்பிடுவார்.

படப்பிடிப்பு இடைவேளைகளில் என்னைத் தன் அருகே அமர்த்தி வைத்து பல்வேறு விசயங்களைப் பேசுவார். நான் உடலைப் பேணும் விதம் பற்றி விசாரிப்பார். எனது உடற்பயிற்சிகள் பற்றி எல்லாம் கேட்டு அறிந்து கொள்வார். என் தோற்றத்தையும் நடையையும் ரசிப்பார் .

அதேபோல் சசிகுமார் 'கிடாரி' படத்தில் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அதில் அவருக்கு வளர்ப்புத் தந்தையாக நான் நடித்திருப்பேன். பல இடங்களில் தன்னை விட்டு விட்டு என் பாத்திரம் சிறப்பாக வெளிப்படுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தார். இப்படி யாரும் செய்ய மாட்டார்கள்.

இப்படிப்பட்ட அனுபவங்களை மறக்க முடியாது.

பெரும்பாலும் எதிர்மறைப் பாத்திரங்களிலேயே நடிக்கிறீர்களே?

எல்லாம் என்று சொல்ல முடியாது. நல்ல பாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். நான் நடித்த எதிர்மறைப் பாத்திரங்கள் அந்த அளவிற்குப் பேசப்பட்டிருப்பதால் இப்படித் தோன்றுகிறது. பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டிலும் மாறி மாறித்தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நடித்திருக்கும் 50 படங்களில் முதல் ஐந்து என்று எதைச் சொல்வீர்கள்? ஏன்?

'மதயானைக் கூட்டம்' முதல் படம் என்பதாலும், அந்தப் பாத்திரம் பேசப்பட்டதாலும், எனக்கு நல்லதொரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்ததாலும் அந்தப் படம் முக்கியமானதாகக் கருதுகிறேன். சசிகுமார் நாயகன் மற்றும் தயாரிப்பாளராக உருவாக்கிய படம் 'கிடாரி'. இதில் அவர்தான் நாயகன் என்றாலும், என் கொம்பையா பாண்டியன் பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிறைய இடம் கொடுத்திருந்தார்.

அதற்காக நான் கோவணம் கட்டிக் கொண்டு நடிக்க வேண்டும். இயக்குநர் இதை என்னிடம் சொல்வதற்குத் தயங்கினார். அவரது தயக்கத்தைப் புரிந்து கொண்டேன். சிறு வயதில், எங்கள் ஊரில் நடந்த பல கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். கலகம் செய்ய வாகாக, கோவணம் கட்டிக் கொண்டு, கையில் வேல்கம்பு, அரிவாள்களோடு போன என் உறவினர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களை மனதில் வைத்து நடித்தேன்.

அந்தப் பாத்திரமும் பேசப்பட்டது. கார்த்தியுடன் முத்தையா இயக்கத்தில் 'கொம்பன்' படத்தில் நான் நடித்திருந்த துரைப்பாண்டி பாத்திரம் அந்த மண்ணின் மைந்தன் போல இருக்கும்.

'பாயும் புலி' படத்தில் விஷாலின் தந்தையாக நடித்தேன். அதற்குப் பிறகு என்னை விஷால் எங்கு பார்த்தாலும் அப்பா என்றுதான் அழைப்பார்.

விஷாலும் நானும் தந்தை மகனாக உன்னிகிருஷ்ணன் இயக்கிய 'வில்லன்' என்கிற மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறோம். விஜய் சேதுபதி உடன் நடித்த 'சேதுபதி' படமும் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதில் எனது வாத்தியார் பாத்திரம் மிக மோசமான எதிர்மறைக் குணத்துடன் இருக்கும்.

பட வாய்ப்புகளை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

பெரிய நிறுவனம் என்றோ பெரிய நடிகர் என்றோ பெரிய இயக்குநர் என்றோ நான் படங்களைத் தேர்வு செய்வதில்லை. கதை என்ன, குறிப்பாக என் பாத்திரம் என்ன என்றுதான் நான் பார்க்கிறேன். என் பாத்திரத்தை மட்டும் வைத்துத்தான் நான் படத்தைத் தேர்வு செய்கிறேன். மற்றவற்றை நான் பார்ப்பதில்லை.

ஓர் எழுத்தாளராக இருப்பது நடிக்கும் போது எந்த வகையில் உதவுகிறது?

பாத்திரங்களின் இயல்பு பற்றிப் புரிந்து கொள்வதற்கும், அவை பேசும் மொழி பற்றி ஒரு தெளிவு ஏற்படவும் , பாத்திரத்தில் மிகைத் தன்மை வந்து விடாது இருப்பதற்கும், வசனம் பேசும் போது வார்த்தைகள் சிக்கனமாக இருப்பதற்கும் எனக்குள் இருக்கும் எழுத்தாளன் உதவுகிறான்.

ஒரு நடிகனாக என் நடிப்பு சிறந்து விளங்குவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மற்றபடி எழுத்தாளனாக நான் எதிலும் தலையிடுவதில்லை. நடிப்பைப் பொறுத்தவரை இயக்குநரிடம் என்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கும் ஒரு நடிகனாகவே நான் இருப்பேன்.

தமிழ்த் திரைப்படங்கள் பற்றி நீங்கள் ஆதங்கப்பட்டிருந்தீர்களே?

ஆமாம். தமிழ்த் திரைப்படங்கள் தமிழினத்தின் படங்களாக, தமிழ் மண்ணின் இயல்பு கூறும் படங்களாக, தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்களாக வருவதில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். தமிழ் சினிமாவில் வரும் மண், வாழ்க்கை, உடை, உணவு, காதல், பாசம் எதுவுமே தமிழரது இல்லை.

கேரளாவில் பாருங்கள், இன்றும் வேஷ்டி கட்டிக் கொண்டும் முண்டு கட்டிக்கொண்டும் தோன்றுகிறார்கள். அவர்களது பாரம்பரியம் படங்களில் தெரிகிறது. இங்கே நமது பாரம்பரியம் தெரிகிறதா?

லிட்டில் ஜாப்னா படத்தில்

இவ்வளவு செலவுகள் செய்து ஒரு போலியான வாழ்க்கையை, போலியான பிம்பத்தைத் தான் கட்டமைக்கிறார்கள். அவை தமிழரின் படங்களாக இருக்கின்றனவா என்ற வருத்தமான கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

எழுத்தாளராக இருந்ததைவிட நடிகரான பிறகு நீங்கள் பலரையும் போய்ச் சேர்ந்திருக்கிறீர்கள் அல்லவா?

உண்மைதான். நடிகராக நான் அடைந்திருக்கும் புகழ், சேர்ந்திருக்கும் வீச்சை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அது திரைப்பட ஊடகத்தின் ஆற்றல். அதை நான் வெளியில் செல்லும்போதெல்லாம் உணர்கிறேன். காருக்குள் இருந்தாலும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்து இருந்தாலும்கூட கண்டுபிடித்து விடுகிறார்கள். இந்த நிலை நிரந்தரம் இல்லை என்பது தெரியும். இருந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது.

தள்ளி நின்று பார்த்த சினிமா, நேரில் பார்க்கும்போது தோன்றும் சினிமா வேறுபாடு என்ன?

சினிமா தொழில் என்பது வெளியே இருந்து பார்ப்பது வேறு. உள்ளே வந்தபின் உணர்வது வேறு. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. பலரும் நேரம் காலம் இல்லாமல் உழைக்கிறார்கள். ஒரு சின்ன விஷயத்தை சாத்தியப்படுத்துவதற்குக் கூட பலரது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

அந்தக் கூட்டு முயற்சியின் ஆற்றலையும் அதன் விளைவையும் ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் நான் பார்த்து புரிந்து கொள்கிறேன். இந்தப் புரிதல் வெளியே இருந்தபோது இல்லை. உள்ளே வந்த பின் நேரடி அனுபவத்திற்குப் பிறகு வந்திருக்கிறது.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் பலரும் இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார்களே...

வந்திருக்கிறார்கள். அங்கே என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கான இடம் எப்படி இருக்கிறது? எதையெல்லாம் சாதிக்க முடிகிறது என்பதுதான் முக்கியம். எழுத்தாளர்களை இங்கே எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? கேரளாவில் எம்.டி. வாசுதேவன் நாயர் போன்றவர்களுக்குக் கிடைத்த இடம் இங்கே கிடைக்கிறதா என்பதுதான் என் கேள்வி.

திரைப்படத்தில் நடிக்கும்போது 'எதிர்நீச்சல்' என்ற தொலைக்காட்சித் தொடருக்குச் சென்றது ஏன்?

மறைந்த நடிகர் மாரிமுத்து எனது நண்பர்தான். அவர் மறைவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு வரை தென்காசிக்கு அருகில் 'வீராயி மக்கள்' திரைப்படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தோம். அவர் திடீரென்று மறைந்ததால் மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் ஏற்று நடித்த பாத்திரத்தில் அந்த 'எதிர்நீச்சல்' தொடரில் நடிக்க வேண்டி இருந்தது.

அந்தத் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் பேசிய போது நான் தயங்கினேன்.

'நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்பது, என் முடிவும் அல்ல. உங்கள் முடிவும் அல்ல. 25 லட்சம் மக்களின் முடிவு' என்றார்.

'லிட்டில் ஜாஃப்னா' படப்பிடிப்பிற்காக, 38 நாள்கள் பாரீஸ் செல்ல இருப்பதாகக் கூறினேன். இருந்தாலும் அவர் காத்திருந்து அனுசரித்தார். அந்தப் படப்பிடிப்பின் இடைவெளியில் வந்து நடித்துக்கொடுத்து விட்டுச் சென்றேன். எனது பாத்திரத்திற்காக காத்திருந்தார்கள். அதை மதிக்க வேண்டும் அல்லவா?

உங்கள் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகள் எப்படி உள்ளன?

முயற்சிகள் நடக்கின்றன. அவை பற்றிய விவரங்கள் விரைவில் வரும்.

இப்போது நடித்து வரும் படங்கள்?

சூர்யாவின் கருப்பு, விக்னேஸ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம், அர்ஜுனின் தீயவர் குலை நடுங்க, வீரத்தமிழச்சி, யோகி பாபுவுடன் ஆ. கன்னியப்பன், குருவிக்காரன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன். இலங்கையில் இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்படும் 'ராஜ்' படத்திலும் நடித்து வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT