தினமணி கதிர்

உலகின் உயரமான தம்பதி!

சீனாவைச் சேர்ந்த சன்மிங்மிங் உலகத்தின் மிக உயரமான மனிதர்.

எஸ். சந்திரமெளலி

சீனாவைச் சேர்ந்த சன்மிங்மிங் உலகத்தின் மிக உயரமான மனிதர். கூடைப்பந்து ஆட்டக்காரர். அவரது உயரம் 7 அடி, 9 அங்குலம். அவரது மனைவி சூயானின் உயரம் 6 அடி, 2 அங்குலம். சூயான் கைப்பந்து வீராங்கனை. இவர்கள் உலகின் மிக உயரமான தம்பதி என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர்கள். இவர்களின் கதை மிகவும் சுவாரசியமானது.

சீனாவின் ஹர்பின் என்ற சிறிய நகரத்தில் பிறந்தவர் சன்மிங்மிங். 1983இல் பிறந்த இவர் ஆண்டுக்கு ஆண்டு மளமளவென்று வளர்ந்து கொண்டிருந்தார். காரணம், அக்ரோமேகலி என்ற ஹார்மோன் தொடர்பான நோயின் பாதிப்பு. நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி அதிக அளவில் உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால்தான் இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது.

மிங்மிங் தனது பதினைந்தாவது வயதில் பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ஏழு அடி உயரத்துக்கு வளர்ந்து விட்டார். இத்தனை உயரமானவர்களுக்கு ஏற்ற விளையாட்டு கூடைப்பந்துதான் என்பதால், சன்மிங்மிங் கூடைப்பந்து ஆடத் துவங்கினார். சூயானுக்கும் இதே பிட்யூட்டரி பிரச்னைதான். அதனால்தான்ஆறடி வளர்ச்சி.

தன் இருபத்து மூன்று வயதில் மிகச்சிறந்த கூடைப்பந்து வீரராக விளங்கியதால், அவரை பிரபல அமெரிக்கக் கூடைப்பந்து அணிகள் தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டன.

அதனைத் தொடர்ந்து மெக்சிகோ, ஜப்பான் அணிகளிலும் இடம் பிடித்து ஆடி விட்டு, 2009இல் சீனா திரும்பினார். பெய்ஜிங்டக்ஸ் என்ற அணிக்காக ஆடி, பேரும் புகழும் பெற்றார்.

தொடக்கக்காலம் முதலே சீன மக்களின் கூடைப்பந்து ஹீரோவாகத் திகழ்ந்த சன்மிங்மிங்கிற்கு 2005இல் பிட்யூட்டரி சுரப்பியில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்ய ஒருலட்சம் டாலர் செலவாகும் என்று டாக்டர்கள் கூறிய போது, அவர் மிரண்டு போனார்.

காரணம், அவருக்கு அவ்வளவு பெரிய ஆபரேஷன் செய்து கொள்ள உதவும் வகையில் பண வசதியும் இல்லை; இன்சூரன்ஸ் பாதுகாப்பும் இல்லை. அப்போது, இவர் பொது மக்களிடம் ஆபரேஷன் செய்து கொள்ள பண உதவி கோரினார். நன்கொடைகள் குவிய, அவரது ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சீனாவில் உயரமானவர்கள் கிளப் என்று ஒரு சங்கம் உள்ளது. அதில் அங்கேசன்மிங்மிங், சூயான் இருவரும் உறுப்பினர்கள். அங்கேதான் இருவரும் சந்தித்து, ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். நாளடைவில் காதல் மலர, இவர்களின் காதலை இரு தரப்பு பெற்றோரும் ரசிக்கவில்லை. ஆனால், இவர்கள் காதலில் உயரம் மட்டுமல்லாமல் ஆழமும் இருந்ததால், இருவரும் 2013 ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த உயரமான தம்பதிக்கு ஜுஞ்ஜுன் என்று ஒரு மகன் இருக்கிறான்.

ரஷ்ஹவர் 3 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் மிங்மிங் நடித்திருக்கிறார்.

கூடைப்பந்து விளையாட்டில் இருந்து மிங்மிங்கும், கைப்பந்து விளையாட்டில் இருந்து சூயானும் ஓய்வு பெற்று விட்டார்கள். மக்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வினை சமூக ஊடகங்களின் மூலமாக ஏற்படுத்தும் பணியில் இருவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடம், உயரம் ஒரு பிரச்னையா?' என்று கேட்டால், ம்... பிரச்னைதான். காரில், ரயிலில், விமானத்தில் பயணம் செய்யும் போது அசெளகரியமாகத்தான் இருக்கும். ஓட்டல் அறைகளில் எங்கள் உயரத்துக்கேற்ற கட்டில் கிடைக்காது. ஆனால், இப்போது எல்லாம் பழகி விட்டது; நோ பிராப்ளம்ஸ்!' என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT