நாட்டிலேயே முதன்முதலில் திரூர் கிராமத்தில் 1904-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் அருங்காட்சியகமாகியுள்ளது.
நிகழாண்டில் சர்வதேச கூட்டுறவு ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூட்டுறவாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்தச் சங்கத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி கூறியதாவது:
'நாட்டிலேயே முதன்முதலில் 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-இல் 'திரூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்' தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திரூர் கிராமத்தில் இந்தச் சங்கத்தை அமைக்க முக்கிய காரணமானவர் மு.ஆதிநாராயணன்.
கூட்டுறவு நோக்கத்துக்காக விவசாயிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த இவர், கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர், அதை கூட்டுறவு கடன் சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்துள்ளார். இவரது முயற்சியால் 1904 ஆகஸ்ட் 30-இல் அன்றைய நாளில் திரூர் கூட்டுறவு கடன் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சங்கத்தின் பதிவு எண் 1.
பின்னர், 1915-இல் காஞ்சிபுரத்தில் 'செங்கல்பட்டு மாவட்ட வங்கிகளின் ஒன்றியம்' என்ற பெயரில் மத்திய வங்கியினை அமைத்து அதன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் கூட்டுறவு குறித்து பிரசாரம், கல்வி, பயிற்சியை மேற்கொள்வதற்கு சென்னை கூட்டுறவு ஒன்றியத்தை 1914-இல் அமைத்து முதல் முதலாக தலைவர் பதவியும் வகித்துள்ளார்.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்ததும், நாட்டிலேயே முதலாகப் பதிவு செய்யப்பட்ட பதிவு எண் 1-என்ற சிறப்பையும் பெற்ற அந்தச் சங்கத்தின் பழைய கட்டடம் அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்காக, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் ரூ.19 லட்சத்தில் சங்கத்தின் சேதமடைந்த கட்டடமும் சீரமைக்கப்பட்டது.
இதன் முகப்பில் ஒரு சிறிய அமர்வு அரங்கம், கூட்டுறவு இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை, 2025 ஏப்ரல்18-இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தச் சங்கம் தொடங்கப்பட்டு 124 ஆண்டுகளான நிலையில், சிறப்புக் கடனுதவி வழங்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
நாட்டின் கூட்டுறவு இயக்கத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. கூட்டுறவுகளின் பிரதான நோக்கம் கிராமப்புறங்களில் சேவை செய்வதாகும். விவசாய உற்பத்தியை அதிகரிப்பதோடு, சரியான நேரத்தில் கடன்களை வழங்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது'' என்கிறார் தி.சண்முகவள்ளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.