தினமணி கதிர்

பேல்பூரி

முன்பக்கம் நின்னா பின்பக்கம் போகச்சொல்றீங்க... பின்பக்கம் நின்னா முன்னாடி போகச்சொல்றீங்க... நாங்க எங்கேதான் போறது?

இணையதளச் செய்திப் பிரிவு

கண்டது

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்...)

'ஆறு தேசம்''

-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.

(விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்... )

'மல்லி''

- உமா கணேசன், நமசிவாயபுரம்.

(தஞ்சை - புதுக்கோட்டை பாதையில் உள்ள ஊரின் பெயர்கள்...)

'இச்சடி, எரிச்சி.''

-சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கேட்டது

(பட்டுக்கோட்டை - வேதாரண்யம் அரசுப்பேருந்தில் பயணியும் நடத்துநரும்...)

'முன்பக்கம் நின்னா பின்பக்கம் போகச்சொல்றீங்க... பின்பக்கம் நின்னா முன்னாடி போகச்சொல்றீங்க... நாங்க எங்கேதான் போறது?''

'நடுவுல இடம் இருக்கு... அங்கே போய் நில்லுங்க!''

-ப.விஸ்வநாதன், அறந்தாங்கி.

(மதுரை கூடல்நகர் காய்கறிக்கடையில் கடைக்காரரும் பெண்மணியும்...)

'என்னப்பா, காய்கறி விலையெல்லாம் ரொம்ப அதிகமா சொல்றே?''

'பண்டிகை வருதே... அதான் விலை ஏறுது!''

'பண்டிகைக்குத்தான் இன்னும் பத்துநாள் இருக்கே... முன்னயெல்லாம் முதல்நாள்தானே விலை ஏறும்?''

'இப்ப எல்லா வீட்டுயேயும் பிரிஜ் இருக்கு... பத்துநாள் முன்னே வாங்கி வைச்சிக்கிறாங்க... அதான் விலை ஏறுது!''

-நா. குழந்தைவேலு, மதுரை.

(தேவகோட்டை பேருந்து நிலையத்தில் மொபைலை பார்த்தபடி தந்தையும் மகனும் பேசிக்கொண்டது...)

'யாருடா இது?''

'நீங்கதாம்பா... டை அடிக்கலைன்னா எப்படி இருப்பீங்கன்னு ஏ.ஐ-ல போட்டுப் பார்த்தேன்!''

-கரு.பாலகிருஷ்ணன், தேவகோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!

'பிறர் பாராட்டவில்லை என்பதற்காக,

உங்கள் நல்ல குணங்களைக் கைவிடாதீர்கள்!''

-த.நாகராஜன், சிவகாசி.

மைக்ரோ கதை

'ஏங்க நேத்து கோயிலுக்குப் போனீங்களா?''

'ஆமாம்... அதுக்கென்ன இப்போ?''

'அங்க ஒரு பொண்ணைக் கூட்டிப் போனீங்களாமே?''

'ஆமாம்... அதனால என்னவாம்?''

'அந்தப் பொண்ணுக்கு நெத்தியில பொட்டு வச்சிருக்கீங்க!''

'ஆமாம்!''

'ஆமாவா... என்ன தைரியம் இருந்தா, கோயில்ல ஒரு பொண்ணுக்கு பொட்டு வச்சேன்னு என்கிட்டயே சொல்வீங்க... ஒருநாளாவது என் நெத்தியில பொட்டு வச்சிருக்கீங்களா?''

'லூசு... வச்சதனாலதான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.''

'அப்படி இருக்கும்போது வேற ஒரு பொண்ணுக்கு எப்படி பொட்டு வப்பீங்க?''

'ஏய்... பக்கத்து வீட்டு அஞ்சு வயசுப்பொண்ணுடி அது... வாய மூடறீயா?''

-வசீகரன், சென்னை.

எஸ்.எம்.எஸ்.

'பொறுமை என்பது

திட்டமிட்ட அறிவியல் காத்திருப்பு.''

-சாத்தை மயில், நெல்லை.

அப்படீங்களா!

தகவல் பரிமாற்றத்தில் முன்னணியில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியில், நவீனத் தொழில்நுட்பமாக, குழுவாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் சேவை தொடங்கப்பட உள்ளது.

இணையவழியில் தொலைபேசியில் ஒருவர் மட்டுமே அழைப்பை மேற்கொள்ளும் வசதியை மட்டும் வாட்ஸ்ஆப் இதுவரையில் வழங்கி வருகிறது.

விடியோ அழைப்பில் பலர் இணைந்து பேசும் சேவை முன்பே தொடங்கப்பட்டாலும், குழு தொலைபேசி அழைப்பு தொடங்கப்படவில்லை.

வாட்ஸ்ஆப் வெப்பில் இணைந்திருந்தாலே குழு தொலைபேசி அழைப்பில் பங்கேற்கலாம். குறைந்தது 8 முதல் 16 பேர் வரையிலும், அதிகபட்சமாக 32 பேர் வரையிலும் இந்த சேவையில் இணைய வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரூப் சாட்களின் லிங்குகளைப் பிறருக்கு பகிர்ந்து குழு தொலைபேசியில் சேர அழைப்பு விடுக்கும் சேவையும் அறிமுகமாக உள்ளது.

மேலும், குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பை மேற்கொள்ள நேரத்தைக் குறிப்பிட்டு வைத்துச் செயல்படுத்தும் சேவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாக்லெட்

கோலிவுட் ஸ்டூடியோ!

எப்பிறப்பில் காண்பேன் இனி...

தமிழுலகில் என்றென்றும்...

சுவடுகள்...

SCROLL FOR NEXT