தினமணி கதிர்

சாக்லெட்

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் கிளம்பி புறவெளிச் சாலைக்குக் கப்பம் கட்டிவிட்டு ஓடி வந்த நாகர்கோவில் பேருந்து, திருமங்கலம் வந்ததும் 'புஷ்' என்ற சத்தத்துடன் கதவுகளைத் திறந்துகொண்டு நின்றது.

தினமணி செய்திச் சேவை

மேகநாதன்

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் கிளம்பி புறவெளிச் சாலைக்குக் கப்பம் கட்டிவிட்டு ஓடி வந்த நாகர்கோவில் பேருந்து, திருமங்கலம் வந்ததும் 'புஷ்' என்ற சத்தத்துடன் கதவுகளைத் திறந்துகொண்டு நின்றது.

காத்திருந்த பயணியர் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். இளம்பெண் ரம்யாவும் ஏறினாள். மூவர் சீட்டில் இருந்த வயதான தம்பதியர் அவளைக் கண்டதும் நகர்ந்துகொள்ள, மெல்ல 'தேங்க்ஸ்'' எனச் சொல்லிவிட்டு ரம்யா உட்கார்ந்தாள். அந்த வயதான அம்மா ரம்யாவைப் பார்த்தாள்.

பேருந்து நகர்ந்தது. பதினைந்து நிமிடப் பயணத்தில் பேருந்து கள்ளிக்குடியை நெருங்கும்போது, கையில் வைத்திருந்த பைக்குள் இருந்து சாக்லெட் ஒன்றை எடுத்து ரம்யாவிடம் நீட்டினாள்.

'வேண்டாம்மா...'' என மறுத்தாள்.

அவள் வற்புறுத்த, ரம்யா வாங்கிக் கொண்டாள். அதைத் தின்னாமல் ரம்யா கையிலேயே வைத்திருப்பதைக் கவனித்த அந்த அம்மா, 'டயர்டா இருக்கே...சாப்பிடும்மா!'' என்றாள்.

கவரைப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டாள். சாக்லெட்டின் மணமும் ருசியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள். அப்போது அந்த அம்மா சொன்னாள்:

'இவருக்கு திடீர்னு சுகர் குறைஞ்சிடும். அதான் கையில் எப்பவும் சாக்லெட் வச்சிருப்பேன். ஆமா, நீ என்ன வேலை பார்க்கிறே?''

'பேங்கிலே.''

ரம்யா டிக்கெட் வாங்கும்போது அவள் 'விருதுநகர்' என்று கண்டக்டரிடம் சொன்னதை வைத்துத் தெரிந்து

கொண்ட அந்த அம்மா,

'இது பழைய பஸ் ஸ்டாண்ட் போகாதே?''

'பி.ஆர்.சி. டிப்போவில் இறங்கிடுவேன்.''

'வீடு ஸ்டாப்புக்குப் பக்கமா?''

'ஒரு சாக்லெட்டை கொடுத்துவிட்டு இத்தனை கேள்விகள் கேட்கிறதே...' என முகம் சுழித்த ரம்யா சொன்னாள்:

'இல்லே. ஜி.ஹெச். பக்கம்.''

'மினி பஸ்ஸில் போவேயா?''

'அண்ணன் நிப்பார். பைக்கில் போயிடுவோம்.''

நிறுத்தம் வந்தது. ரம்யா எழுந்தாள். கம்பியைப் பிடிக்க கைகள் தடுமாறின. தள்ளாடியபடி இறங்கினாள். கண்கள் இருண்டன. சத்தங்கள் நின்றன. அடுத்த விநாடி மயங்கி தரையில் விழுந்தாள். பதற்றத்துடன் ஓடி வந்த அண்ணன் தூக்கி, ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றான்.

வாடிய புடலங்காய் போலப் படுக்கையில் படுத்துக் கிடந்த ரம்யா மெல்லக் கண் விழித்தாள். அண்ணனும் அம்மாவும் தெரிந்தார்கள். மருத்துவ வாசனை உணர்ந்தாள். இடது கையில் டிரிப் இறங்கிக்கொண்டிருந்தது. தலை வலித்தது. நடந்தவை ஓரளவுக்கு நினைவுக்கு வந்தது.

டாக்டர், அறைக்கு உள்ளே வந்து ரம்யாவின் நாடி பார்த்தார்.

'ரம்யா, வாமிட் சென்சேஷன் இருக்கா?''

'இல்லே டாக்டர். தொண்டை வலிக்குது.''

'சரியாயிடும். ஈவினிங் என்ன சாப்பிட்டே? ஃபுட் பாய்சனிங் ஆயிருக்கு.''

வலது கையால் முகத்தைத் தடவிக் கொண்டு சொன்னாள்.

'சாக்லெட்.''

'சாக்லெட்டா?''

டாக்டரின் முகம் மாறியது.

'அதிலே மயக்க மருந்து கலந்திருக்கு.''

அண்ணன் உடனே நெற்றியைச் சுருக்கினான்.

'இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கு. ஒரு மணி நேரம் கழிச்சு ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் பார்த்துவிட்டு கண்டிஷன் சொல்றேன்.''

டாக்டர் போனதும் அண்ணன் கேட்டான்:

'எந்தக் கடையில் சாக்லெட் வாங்கினே?''

'கடையில் வாங்கலே. பஸ்ஸில் வந்தவங்க கொடுத்தாங்க.''

கோபத்தில் அண்ணன் வெடித்தான்:

'படிச்சிருந்தும் அறிவில்லையே! தெரியாதவங்களிடம் வாங்கலாமா?''

வாடியிருந்த ரம்யாவின் முகம் மேலும் வாடியது. அண்ணன் தொடர்ந்தான்:

'அவங்க எப்படி இருந்தாங்க?''

அழுவது போலான ரம்யா உடைந்த குரலில், 'வயசு அறுபதுக்கு மேலே இருக்கும். வெள்ளைச் சட்டை, காவி வேட்டியில் இருந்தார். அந்த அம்மா சிவப்பு கலர் சாரியில்...'' என்றாள்.

'அவங்களைப் பத்தி ஏதாவது சொன்னாங்களா?''

'இல்லை. என்னைப் பத்தித்தான் விசாரிச்சாங்க.''

திருடர்கள்தான் என்ற தீர்மானத்துக்கு வந்தவன்,

'நல்லவேளை இறங்கிட்டே. இறங்காமல் அவங்களுடன் நீ போயிருந்தால் செயினில் கை வச்சிருப்பாங்க.''

'ஆமாண்ணே... ஆனால், பார்க்க நல்லவங்களாத் தெரிஞ்சாங்க.''

'திருடங்க நம்மை நம்ப வைக்க என்ன வேஷமானாலும் போடுவாங்க.''

அப்போது திடீரென்று ரம்யா குரல் கொடுத்தாள்:

'அண்ணே, அவங்க மாற்றுத் திறனாளி போலத் தெரியுது.''

'எப்படிச் சொல்றே?''

'கன்செஷன் ஃபார்ம் கொடுத்து டிக்கெட் வாங்கினாங்க.''

பரபரப்படைந்த அண்ணன் உடனே கேட்டான்:

'உன்னோட டிக்கெட் இருக்குதா?''

'ம்... ம்...'' என்று ரம்யா தடுமாறினாள்.

அம்மாவின் கையில் இருந்த ரம்யாவின் கைப்பையை வாங்கி அண்ணன் துலாவினான். டிக்கெட் இருந்தது. தேதியும் நேரமும் சரியாக இருந்தன.

'அவங்க எந்த ஊருக்கு டிக்கெட் எடுத்தாங்க தெரியுமா?''

'கவனிக்கலேயேண்ணே.''

'பஸ்ஸில் எப்பவும் அலர்ட்டா இருக்கணும். சரி, இந்த டிக்கெட்டை வச்சு அவங்களைப் பிடிச்சிடலாம். அம்மா, ரம்யாவைப் பார்த்துக்கோங்க.'' என்று கிளம்பியவனை அம்மா தடுத்தாள்.

'நமக்கு எதுக்குப்பா இந்த வம்பு?''

'இல்லேம்மா... விட்டால் இன்னும் எத்தனை பேரை ஏமாத்துவாங்களோ?''

'கோர்ட் கேஸ்னு அலையணுமே, நம்மாலே முடியுமா?''

'செயின் போயிருந்தால் அலைய வேண்டியது வந்திருக்குமே...'' என்றவன் தாய் சொல்லைத் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

பைக்கில் ஏறி பஸ் டிப்போவில் இறங்கி, ஆபீசுக்குள் நுழைந்தான் ரம்யாவின் அண்ணன். கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து மெளஸை நகர்த்திக் கொண்டிருந்தவரிடம் டிக்கெட்டை கொடுத்து நடந்ததைச் சொன்னான். ஆச்சரியப்பட்ட அவர், 'ரயிலில்தான் இப்படி நடக்கும். பஸ்ஸிலும் ஆரம்பிச்சுட்டாங்களா? அவங்களைவிடக் கூடாதுங்க.''

கம்ப்யூட்டரின் பட்டன்களைத் தட்டிவிட்டு அவர் கண்டக்டரின் பெயரைச் சொன்னார்.

'மாரியப்பனா? சூலக்கரையில் இருக்காரே... அவரா?'' கேட்டான்.

'அவர்தான்.''

'என்னுடைய க்ளாஸ்மேட்தான் சார். அவருடைய போன் நம்பர் இருக்கு. நான் கான்டாக்ட் பண்ணிக்கிறேன். தேங்ஸ் சார்!''

வெளியே வந்து அழைத்தான்.

'உங்கள் அழைப்பு ஏற்கப்படவில்லை... சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்'' என்று சொல்லிவிட்டு போன் அமைதியானது. கையை உதறினான்.

'போனை சைலன்டில் போட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருப்பானோ, மிஸ்டு காலைப் பார்த்து அழைப்பதற்குள் அவங்க தப்பிவிடக்கூடாதே!'' என்று நினைத்தான். விரக்தியுடன் போனை பாக்கெட்டில் போட்டபோது அது அதிர்ந்தது.

'அம்மா, சொல்லுங்க.''

'நீ போனதுக்குப் பிறகு ரம்யா இரண்டு தடவை வாந்தி எடுத்துட்டாள். அவங்களைக் கண்டுபிடிச்சது போதும். கிளம்பி வா!''

பதில் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு தங்கையை அழைத்துச் செல்வதற்காக டிப்போ நிறுத்தத்தில் நிறுத்தியிருந்த பைக்கை நெருங்கினான். அப்போது போன் மீண்டும் அதிர்ந்தது.

'டேய் மாப்பிள்ளே, கூப்பிட்டிருந்தே...'' கண்டக்டர் கேட்டார்.

தங்கைக்கு நிகழ்ந்ததைச் சொன்னான்.

'அடடே, நான் கவனிக்கலையே. உனக்கு என்ன தகவல் வேணும்?''

'அவங்க கொடுத்த கன்செஷன் ஃபார்மில் அட்ரஸ் இருக்குதான்னு பார்த்துச் சொல்லு , ப்ளீஸ்.''

பையில் இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்துவிட்டு கண்டக்டர் சொன்னார்:

'அட்ரஸ் இருக்கு.''

பைக் சீட்டை ஓங்கி தட்டிவிட்டு, 'அட்ரஸையும் போட்டோவையும் ஸ்கேன் பண்ணி இந்த நம்பருக்கு அனுப்பு.'' சொல்லிவிட்டு போன் திரையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ஐந்தாவது நிமிடத்தில் திரை மின்னியது.

'வந்திடுச்சு மச்சி. சாத்தூருக்கா டிக்கெட் வாங்கியிருந்தாங்க?''

'ஆமா.''

'தேங்க்ஸ்.''

பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தான் ரம்யாவின் அண்ணன். பதினைந்தே நிமிடங்களில் சாத்தூர் வந்தான். தெரு விளக்குகள் எரியத் தொடங்கின. பேருந்து நிலையம் அருகே இருந்த டீக்கடையில் முகவரி கேட்டான். டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார். அதே ரோட்டில் பைக்கை விரட்டினான்.

சில நிமிடங்களில் முக்கு லாந்தர் கல் திருப்பம் வந்தது. வேகத்தைக் குறைத்தான். இடதுபுறம் சாலை தெரிய, சந்தேகம் வந்தது. அங்கே நின்றுகொண்டிருந்தவரிடம் கேட்டான்.

'நேரே போங்க. கிருஷ்ணன் கோயில் வரும். எதிரே இருக்கும் தெருதான்'' என்று அவர் கையைக் காட்டினார்.

தெரு அகலமாகவே இருந்தது. பைக்கை மெதுவாகச் செலுத்தி வீட்டு நம்பர்களைக் கவனித்துக்கொண்டே சென்றான். கதவுகளில் கருப்பு வட்டங்களுக்குள் வெள்ளை நிற நம்பர்கள் தெரிந்தன. தொடர்ச்சியாக இல்லை. ஆற்றின் கரையில் தெரு முடிய, திரும்பிப் பார்த்தான். வலதுபுறம் இருந்த சிறிய வீட்டின் கதவில் அந்த நம்பர் இருந்தது.

அங்கே பைக்கை நிறுத்தினான். இளம் மஞ்சள் நிற டிஸ்டெம்பரில் அந்தச் சிறிய வீடு பளிச்சென்று இருந்தது. ஆனால் கதவும், அதை ஒட்டி இருந்த ஜன்னலும் பூட்டியிருந்தன. 'எங்கே போயிருப்பாங்க? சாக்லெட் கொடுக்க எந்த ஏமாளியுடன் உட்கார்ந்திருப்பார்களோ?' என்று யோசித்தான்.

அப்போது வெள்ளை வேட்டி, சட்டையில் பெரியவர் வந்து, 'என்ன தம்பி, சாரை பார்க்கணுமா?'' என்றார்.

'இது ராகவன் வீடுதானே?''

'ஆமா.''

வீட்டு நம்பர், பெயர் சரி. மேலும் உறுதி செய்து கொள்ள, 'அவர் ஊனமுள்ளவரா?'' என்று கேட்டான்.

'ஆமா. சுகர் ஜாஸ்தியானதால் முட்டிக்குக் கீழே காலை எடுத்துட்டாங்க.''

பேருந்தில் நடந்ததைச் சொன்னதும் அவருக்கு ரத்தம் சூடேறியது. கத்தினார்.

'என்ன வார்த்தைச் சொல்லிட்டே? லஞ்சம்னு ஒரு பைசா கூட வாங்காத மனுஷன். ஒரு சாதாரண பியூன் கூட கார், பங்களானு வச்சிருக்கும் இந்தக் காலத்தில்,

இந்தச் சின்ன வீடுதான் இவருடைய சொத்து. பஸ்ஸில்தான் பிள்ளைகளைப் பார்க்கப் போவார். மரியாதையா போயிடு!''

சத்தம் கேட்டு எதிர் வீட்டு அம்மா வந்து, 'என்ன ராமசாமி, பிரச்னை?'' என்று கேட்டாள்.

'ராகவன் சாரை பத்தி தப்பா பேசுறான்.''

'இந்தத் தம்பிக்கு இவரைப் பத்தித் தெரிய வாய்ப்பில்லை. தங்கச்சி பாதிக்கப்பட்ட வேகத்தில் கேட்டுட்டார். விடுங்க. இப்போ அவர் ஆஸ்பத்திரியில் இருக்கார்.''

'அவருக்கு என்னாச்சுங்க?'' ராமசாமி கேட்டார்.

'பஸ்ஸில் வரும்போது விருதுநகர் கலெக்டர் ஆபீஸ்கிட்டே மயக்கமாகிட்டார். உடனே ஜி.ஹெச்.-க்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க. கிரிட்டிகல் ஸ்டேஜில் இருக்காராம்... லஷ்மியம்மா போன் பண்ணினாங்க...''

குழப்பத்துடன் நடந்து சென்று பைக்கில் ஏறிக்கொண்டான்.

விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவைத் தேடிக் கண்டுபிடித்தான் ரம்யாவின் அண்ணன். அங்கே கவலையுடன் நின்றுகொண்டும் தரையில் உட்கார்ந்துகொண்டும் மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதான பெண்களின் மீது பார்வையை வீசினான். சிவப்பு சேலையில் பலர் இருந்தார்கள். முதலில் யாரை விசாரிப்பது எனத் தயங்கி, அவர்கள் அருகில் அவன் சென்றபோது கதவைத் திறந்துகொண்டு வந்த இளம் டாக்டர், 'மிஸஸ் ராகவன் யார்?'' கேட்டார்.

கடவுளை வேண்டிக்கொண்டு காத்திருந்த அந்த அம்மா உடனே எழுந்து கண்களைத் துடைத்துவிட்டு அவரை நோக்கி விரைந்தாள். ரம்யாவின் அண்ணன் அவளது முகத்தைப் பார்த்ததும் மனதுக்குள் இருந்த கோபம் குறைந்தது. 'ரம்யாவின் இடத்தில் நான் இருந்திருந்தாலும் இவரிடம் சாக்லெட்டை வாங்கியிருப்பேன்' நினைத்துக்கொண்டான்.

அந்த அம்மா அருகில் வந்ததும் டாக்டர் பேசினார்.

'உங்க கணவருக்குத் திடீர்னு சுகர் லெவல் குறைஞ்சு ஹைப்போக்ளைசீமிக் ஷாக் ஏற்பட்டிருக்குது. உடனே சாக்லெட் அல்லது குளுக்கோஸ் கொடுத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.''

'ஐயோ டாக்டர், சாக்லெட் வச்சிருந்தேன். பஸ்ஸில் வந்த பொண்ணு டயர்டா இருக்குன்னு அவளுக்குக் கொடுத்துட்டேன். பகவானே, என் கணவர்....'' எனக் கதறியவள், அடுத்த விநாடி மயக்கமுற்று தரையில் விழுந்தாள். பாய்ந்து சென்ற ரம்யாவின் அண்ணன் அந்த அம்மாவைத் தூக்கிச் சென்று அதே வார்டின் படுக்கையில் படுக்கவைத்தான். அவசரமாக அங்கே வந்த மருத்துவர் பரிசோதித்துவிட்டு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த செவிலியரிடம் மருந்தின் பெயரைக் கூறி, நரம்பில் செலுத்தச் சொன்னார். அவரை அணுகிய ரம்யாவின் அண்ணன் பதற்றத்துடன், 'இந்த அம்மாவோட ஹஸ்பெண்ட் எப்படி இருக்கார் டாக்டர்?'' என்று கேட்டான்.

அவரை சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் உடனே இன்ஜெக்ஷன் கொடுத்தோம். கோல்டன் ஹவருக்குள் வராமல் இருந்திருந்தால் ஏதாவது விபரீதம்கூட ஆகியிருக்கலாம்'' என்றார்.

'தேங்ஸ் டாக்டர்!'' கைகளைக் குவித்து அவரை வணங்கினான்.

அப்போது அந்த அம்மா கண்களை மெல்லத் திறந்தாள். அவள் அருகே சென்ற மருத்துவர், 'நோ ப்ராப்ளம். அதிர்ச்சியில் உங்களுக்கு மயக்கம் வந்திருக்கு. ஒரு மணி நேரத்தில் நீங்க இரண்டு பேரும் வீட்டுக்குப் போயிடலாம்'' என்றார்.

உடனே ரம்யாவின் அண்ணன் நீண்ட மூச்சு ஒன்றை இழுத்துவிட்டான். அப்போது அவனது போன் அதிர்ந்தது. வெளியே வந்து, 'அம்மா, சொல்லுங்க...'' என்றான்.

'அண்ணே, ரம்யா பேசுறேன். நான் சாப்பிட்ட பிரியாணியால ஃபுட் அலர்ஜியாகி எக்ஸாஸ்ஷன் ஏற்பட்டிருக்கு. சாக்லெட்டால் இல்லை. அவங்களை நீ தேடவேண்டாம். வந்திடு.'' என்றாள்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் போனை காதில் வைத்துக்கொண்டு நின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்பிறப்பில் காண்பேன் இனி...

தமிழுலகில் என்றென்றும்...

சுவடுகள்...

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல்

SCROLL FOR NEXT