அபூர்வன்
'விவேகமற்ற வீரம் முட்டாள்தனம் என்பதை அறிவதே வீரத்தின் முதல்படி. கராத்தே கற்பது யாரிடமும் சண்டை போடுவதற்கோ, தாக்குவதற்கோ அல்ல. ஆபத்து வரும்போதோ, சக மனிதன் தாக்கப்படும்போதோ, பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போதோ பயன்படுத்தலாம்.
அப்படிப்பட்ட பக்குவம் வந்தவர்களுக்கே நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும். கராத்தே பயிற்சி தொடங்குவதற்கு முன்பும் பின்பும் மனதை ஒருநிலைப்படுத்தவும் சமநிலைப்படுத்தவும் தியானப் பயிற்சி கற்றுத் தரப்படும். இந்த விஷயத்தில் மதத்தைவிடவும் சற்று குறைந்த வாழ்வுமுறையாக இந்த வீரக்கலையானது பார்க்கப்படுகிறது.
முழுமையாக கராத்தே கற்றவன் அடக்கமாக இருப்பான். மனதில் உச்சபட்ச பரவசம் என்பது அந்த அமைதியில்தான் உள்ளது. பஞ்சபூத தத்துவங்கள் கராத்தேவிலும் உண்டு' என்கிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மாஸ்டர் ஹன்ஷி எஸ். ரத்னம்.
சிலம்பம், களரி, கராத்தே, கொபுடோ, யோகா போன்ற வீரக்கலைகளை மாணவர்களுக்குக் கற்றுத் தரும் மாஸ்டர் ரத்னத்திடம் பேசியபோது:
'எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவாடானை அருகேயுள்ள மேலரும்பூர் கிராமம். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பும் அஞ்சல்வழிக் கல்வி முறையில் முடித்தேன். அர்ஜென்டினா பல்கலைக்கழகத்தில் கராத்தேவில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
என் அப்பா சுவக்கியிடம் சிலம்பம் கற்றேன். மேலும் சில விஷயங்களை முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆசான் தேவராஜிடமும் கற்றேன். திருச்சூர் நாராயணன் நாயரிடமும், அவரது ஆசான் கேசவ நாயரிடமும் களரியைக் கற்றேன்.
வர்மக் கலை
அதன்பின்னர், வர்மக்கலையை திருவனந்தபுரம் நாராயணன் குட்டி, தங்கப்ப ஆசான், எர்ணாகுளம் சுகுமாரன் குருக்கள் போன்றவரிடம் விரிவாகக் கற்றேன்.
'படுவர்மம் 12', 'தொடுவர்மம் 96' என்று அதை வகைப்படுத்துவார்கள். 'படுவர்மம்' என்பது அதிவேகமாகச் செயல்படக் கூடியது. 'தொடுவர்மம்' என்பது மிதமான சாதாரண நிலையிலானது. 'வர்மக்கூறு'வானது அடிபடுதலைக் குறிக்கும்.
மனித உடலில் 108 வர்மப் புள்ளிகள் உள்ளன. அந்த இடத்தைத் தட்டினால் தாக்குண்டவர் மயக்கம் அடைவது முதல் மரணம் வரை நிலைகள் உண்டு. வர்மத் தாக்குதலுக்கு ஆளானவர்களை மீட்பதற்கு உள்ள முறைதான் அடங்கல்.
12 வர்மத்துக்கும் ஒரு வர்மத்துக்கு 9 தட்டு என்ற வகையில் 108 மீட்பு முறைகள் உள்ளன. இப்படி 108 வர்மத்துக்கும் வெவ்வேறு வகைகள் உள்ளன. விவரிக்க ஆரம்பித்தால், அது நீளமாகச் செல்லும். வர்மப் புள்ளிகள் தாக்கப்பட்டவர்களுக்கு ஒளடதம், தாரவழிச்சல், நர்சியம், தலைக்கு தப்பளம் என்று நான்கு முறைகளில் மருந்துகள் அளிக்கப்படுவதுண்டு.
அதாவது, 'ஒளடதம்' என்றால் வாய் வழியே கொடுத்தலாகும். 'தாரவழிச்சல்' என்பது கண்ணில் மருந்திடுவதாகும். 'நர்சியம்' என்பது மூக்கின் வழியாக, தலைக்கு தப்பளம் என்பது, தலையில் தைலம் தேய்த்து ஒற்றடம் தருவதாகும். மீட்பதற்கான கால அலகுகள் மூன்றே முக்கால், ஐந்தே முக்கால், எட்டே முக்கால் என்று நாழிகைகள் என்று கணக்கு உண்டு. தாக்கப்பட்டவர்களது உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகள் மூலம் எந்தவிதமான வர்மத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும்.
யோகா
மதுரை ராமலிங்கத்திடமும், பின்னர் ராம்தேவ் பாபாவிடமும் யோகா, முத்திரையைக் கற்றேன். யோகா என்பது மனம் சம்பந்தப்பட்டதாகும். யோகாசனம் என்பது உடல் சம்பந்தப்பட்டதாகும். உடலை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் என்று ஐவகையாகப் பிரிக்கின்றனர். அவற்றைப் பெரும் பிரிவாக, புறத்தோற்றத்தை 'ஸ்தூல சரீரம்' என்றும், அகத்தோற்றத்தை 'சூட்சும சரீரம்' என்றும் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.
புறத்தோற்ற உடல் அழியக் கூடியது. சூட்சும சரீரம் அழியாதது. 12 வர்மங்களுக்கும் 12 ராசிகளுக்கும் தொடர்புகள் உண்டு. தொடுவர்மம் 96-க்கும் 96 தத்துவங்களுக்கும் தொடர்பு உண்டு. இப்படி யோகத்துக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு உண்டு.
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இணைவதை நோக்கமாகக் கொண்டது. உடல் ஆரோக்கியமாக வாழ உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது தான் யோகத்தின் நோக்கம்.
கராத்தே
இந்தியாவில் தோன்றிய கராத்தே, சீனாவுக்குச் சென்று, அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்றது. சில வடிவங்கள் மாற்றப்பட்டு இந்தியாவுக்கு மீண்டும் வந்தது.
ஜப்பானில் ஒக்கினாவா தீவு மக்கள் இந்தக் கலையைக் கற்றதால், அதிக காலம் வாழ்கின்றனர். நான் கராத்தேவை கற்றது இலங்கையில் உள்ள காமினி சொய்சாவிடம்தான். பின்னர், ஜப்பானில் உள்ள சுகரோ நாக சாட்டோவிடம் , அவரது 96 வயது வரை கற்றேன்.
அவரது மறைவுக்குப் பிறகு அவரது சீடர் ஹன்ஷி கியூ கிபோவிடமும் கற்றேன். எந்தக் கலையையும் முழுமையாகக் கற்க முடியாது. அதன் ஆழம் சென்றுகொண்டே இருக்கும். எனக்கு 78 வயதாகிறது. ஆனாலும் நான் 55 ஆண்டு காலமாக கராத்தேவை கற்று வரும் மாணவன்.
நான் 1976 முதல் மாணவர்களுக்கு கராத்தே பயிற்றுவிக்கிறேன். கராத்தேயில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நிற பெல்ட் உண்டு. முதலில் வெள்ளையில் தொடங்கி மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், பர்ப்பிள், பிரவுன், இறுதியில் கறுப்பு என எட்டுத் தர நிலைகள் உள்ளன. என் மாணவர்கள் பலர் மாஸ்டர்களாக விளங்குகிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
கராத்தே போட்டியில் பங்கேற்க, 1993-இல் லாஸ் வேகாஸ் சென்றேன். ஜப்பானுக்கு 15 முறையும், அமெரிக்காவுக்கு 16 முறையும், ஆஸ்திரேலியா ரஷ்யாவுக்கு ஆறு முறையும் சென்றுள்ளேன். செர்பியா பெல் கிரேடுக்கும் சென்று வந்திருக்கிறேன். பல்வேறு நாடுகளில் நடந்த கராத்தே போட்டிகளுக்கும் மாநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறேன்.
கராத்தே அமைப்பின் சர்வதேசத் துணைத் தலைவராக இருக்கிறேன்.
ஒருமுறை தில்லிக்கு நான் சென்ற விமானத்தில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது என் கையில் ஜப்பான் மொழி புத்தகம் இருந்தது. இது
குறித்து என்னிடம் விசாரித்தார். அப்போது நான் அதே புத்தகத்தில் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.
தேக்குவான்டோ-கொபுடோ
கொரிய வீரக் கலையான தேக்குவான்டோவை பாஸ்டின் வீக்லிவிடம் ஐந்தாண்டு கற்றேன். அதன்பின்னர், ஜப்பானின் வீரக் கலையான கொபுடோ கற்றேன். இது பல்வேறு
ஆயுதங்களைப் பயன்படுத்தும் தற்காப்புக் கலையாகும்.
இந்த முறையில் 'நுன்சா கு' என்பது இரண்டு கோல்களை சங்கிலியால் இணைக்கப்பட்ட ஆயுதமாகும். 'சாய்' என்பது திரிசூல வடிவிலான ஆயுதமாகும். 'காமா' என்பது அரிவாள் போன்ற ஆயுதம். 'எய்கு' என்பது படகுத் துடுப்பு போன்றதாகும். 'டோன்பா' என்பது கவை போன்ற ஓர் ஆயுதம்.
இந்தப் பொருள்கள் எல்லாம் தினசரி வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் வடிவிலேயே இருக்கும். அவற்றைக் கொண்டே எதிரிகளைத் தாக்குவதற்கும் தற்காப்பு செய்து கொள்வதற்கும் பயன்படுத்தும் முறையே 'கொபுடோ' ஆகும். அதாவது விவசாயத்தில் ஈடுபடும்போது வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கு அந்த விவசாயக் கருவிகளையே ஆயுதங்களாக மாற்றி எதிர் கொள்ளும் முறையாகும்.
குடும்பத்தினர்
எல்.ஐ.சி.யில் நான் பணியாற்றினேன். என் மனைவி ராணி. எனக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். இவர்களில் மூன்று பேர் கராத்தே தீவிரமாக கற்றுக் கொண்டு என்னுடன் பல போட்டிகளுக்கு வந்துள்ளனர். மூத்த மகன் பெஞ்சமின் சேகர் கராத்தே பயிற்சிக்காக அமெரிக்காவில் 8 ஆண்டுகள் தங்கி இருந்தார். அவர் 2001-இல் நடைபெற்ற கட்டா, கொபுடோ என இரண்டு போட்டிகளில் வென்று தங்கப்பதக்கமும் பெற்றார். எனது மகள் வயிற்றுப் பேத்தி மருத்துவம் படித்து வந்தாலும், கராத்தே கற்று கருப்புப் பட்டயம் வாங்கி இருக்கிறாள்' என்கிறார் ஹன்ஷி எஸ். ரத்னம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.