மணிசேஷன்
யாகங்கள், பூஜைகளுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயார் செய்து பக்குவப்படுத்தும் பணியை திருக்கோவிலூர்' மடப்பட்டு சாலையில் உள்ள டி.கொளத்தூர் கிராம மக்கள் மேற்கொள்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் இவை அனுப்பிவைக்கப்படுகின்றன.
கிராமத்தின் உள்ளே நுழைந்தால், தெருக்கள், சாலைகள் எங்கும் தர்ப்பைப் புல்லைக் காய வைத்தல், ஹோமத்துக்குத் தேவையான சமித்துகள் காய வைத்தல் என பூஜைப் பொருள்களே காணப்படுகின்றன. இவற்றைக் காய வைத்தல், நறுக்குதல், பாக்கெட் போடுதல் என்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஓவ்வோர் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்கின்றனர்.
இந்தக் கிராமத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்குப் புலம் பெயர்ந்த வைதீகர் ஒருவர், இங்கிருந்து அவ்வப்போது தர்ப்பை, சமித்து ஆகியவற்றை ஊருக்கு வந்து சேகரிப்பார். அதற்கான தேவை சென்னையில் அதிகம் இருக்கவே உள்ளூர் விவசாயிகளை இதற்குப் பயன்படுத்தி உள்ளார். அதன் பிறகு இது தொழிலாக மாறி, இன்று கிராமம் முழுவதும் நடைபெறுகிறது.
அரசு, ஆல், புரசு, நாயுருவி, அத்தி, கருங்காலி, வன்னி , எருக்கு உள்ளிட்ட பல்வேறு சமித்துகளைச் சேகரிப்பதற்காக இந்தக் கிராம மக்கள் வெளியூர்களுக்கும் சென்று தங்கியிருந்து கொண்டு வருகிறார்கள். பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில்தான் இவை கொண்டு வரப்படுகின்றன.
தற்போது 'விசுவாமித்ரம்' எனும் தர்ப்பை புல்லை சில விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.