அதிசயமான சூரிய உதயம்
சூரியன் காலையில் இருமுறை உதிக்கும் நகரமாக, ஐரோப்பாவில் உள்ள ருமேனியாவின் 'ரிமேடியா' எனும் நகரம் உள்ளது. தனித்துவமான நிலப்பரப்பாலும், மலைகளின் தன்மையாலும் ஆண்டு முழுவதும் ஜூலை மாதத்தில் மட்டும் இந்த இயற்கை நிகழ்வு நடைபெறுகிறது.
செங்குத்தான சுண்ணாம்புப் பாறைகளுக்கு இடையேயான குறுகிய பள்ளத்தாக்கில், உயரமான சுண்ணாம்புக் குன்றின் அடிவாரத்தில் இந்த நகரம் உள்ளது. விடியற்காலையில் சூரியன் சிறிது நேரம் அடி வானத்துக்கு மேலே தெரியும். பின்னர், சூரியன் நகரும்போது முகடு சூரியனை மறைத்துவிடும். சில நிமிடங்களுக்குப் பின்னர் அது மீண்டும் தோன்றும்போது புதிய உதயம் போன்ற பிரமையை ஏற்படுத்தும்.
'இந்தியாவின் சான்பிரான்சிஸ்கோ'
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவை 'சிலிகான் பள்ளத்தாக்கு நகரம்' என்று அழைப்பர். இங்கு ஆயிரக்கணக்கான கணினி நிறுவனங்கள், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதனுடன் ஒப்பிட்டு, இந்தியாவில் உள்ள பெங்களூரை பேசுகின்றனர்.
பீட பூமியில் அமைந்துள்ள பெங்களூரு கடல் மடத்தில் இருந்து 920 மீட்டர் உயரத்தில் உள்ளது. எப்போதும் இனிமையான, லேசான காலநிலையைக் கொண்டுள்ளது. 'பூங்கா நகரம்' என அழைக்கப்படும் இங்கு லால்பாக், கப்பன் பூங்கா மிகவும் பிரபலமானவை.
1985-ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் மிக வேகமாக வளர்ந்த நகரமாகவும், வளர்ந்து கொண்டு இருக்கும் நகரமாகவும் உள்ளது.
பூக்கோடு ஏரி
அடர்த்தியான வனப் பகுதியின் மையத்தில் உள்ள பூக்கோடு ஏரியில் இருப்பது சுத்தமான நீராகும். கேரளத்தின் வயநாட்டில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும்.
'நாட்டின் மிகச் சிறிய ஏரி' என்று அழைக்கப்படும் இந்த ஏரி, 13 ஏக்கர் பரப்பளவுடையது. ஆழம் 6.5 மீட்டர். நடக்க, பறவைகளைப் பார்க்கச் சிறந்த இடம். படகு சவாரியும் உண்டு. புகைப்படக்காரர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடம்.
கபினி நதியின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான பனமரம் ஆறு இங்கிருந்து உருவாகிறது. வற்றாத நன்னீர் நதியைச் சுற்றி, கோடு வரைந்து பார்த்தோமானால் இந்திய வரை
படத்தைக் காணலாம். நன்னீர் மீன்கள், நீல நீர் அல்லிகள், நீலத் தாமரை எனப் பல ஏரியினுள் உண்டு. சுற்றியுள்ள வனப் பகுதியில் நுழைந்தால் விலங்குகள், பறவைகள், குரங்குகளைக் காணலாம். பெத்தியா பூக்கோடென்சிஸ் என்ற சைப்ரிண்ட் இன மீனை இங்கு மட்டுமே காணலாம். மீன்கள் காட்சியகம், குழந்தைகள் பூங்கா, மூங்கில், தேங்காய் மட்டையிலான கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடை ஆகியவையும் இங்குள்ளன. தெற்கு வயநாடு வனப் பிரிவால் இந்த ஏரி பராமரிக்கப்படுகிறது. வைதிரி நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் ஏரி உள்ளது.
மலரிக்கல் நீர் அல்லி
கேரளத்தின் கோட்டயம் அருகே திருவார்ப்பு பகுதியில் உள்ள 'மலரிக்கல்' எனும் கிராமத்தை 'நீர் அல்லி கிராமம்' என அழைக்கின்றனர். மீனிச்சல், கோடூர் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், இங்குள்ள பழுக்கனிலா ஏரி, 1.62 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த ஏரி முழுவதும் சீசனில் நீர் அல்லியால் பூத்துக் குலுங்கும். அற்புத மலர் காட்சிக்கு இந்தக் கிராமம் பிரபலம்.
இனிப்பு கிலோ ரூ.25 ஆயிரம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 'பீவார்' எனும் நகரில் 'கேவர்' எனும் இனிப்புகள் பிரபலம். மைதா, நெய், பால், குளிர்ந்த நீர் ஆகியவற்றை நன்கு பிசைந்து, நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கப்படும் இந்த இனிப்பானது தேன்கூடு வடிவத்தில் வட்ட வடிவத்தில் இருக்கும். சாதாரண கேவர் ஸ்வீட் விலை கிலோ 1,700 ருபாய் வரையில் இருக்கும்.
பிரஜ் ரசாயன் மித்தன் பந்தன் என்பவரால் தங்க கேவர் தயாரிக்கப்பட்டது. இது அண்மையில் விற்பனைக்கு வந்தது. கோல்டன் கேவர், பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ், ஐஸ் கிரீம், சுவையூட்ட மலாய், குங்குமப் பூ, உலர்ந்த பழக் கீறல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. தங்க வண்ணத்தில் ஜொலிக்கும். இதன் விலை கிலோ ரூ.25 ஆயிரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.