FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கண்ணைக் கவரும் சுவர் ஓவியங்கள்!

'சுவர் ஓவியங்கள் மக்களிடம் விரைவில் சென்று சேர்கின்றன. பெரிய அளவில் அவற்றை வரையவும் முடிகிறது.

20 ஜூன் 2026, 8:40 pm IST
பகிர்:

'சுவர் ஓவியங்கள் மக்களிடம் விரைவில் சென்று சேர்கின்றன. பெரிய அளவில் அவற்றை வரையவும் முடிகிறது. எனவே சுவர் ஓவியங்களில் அதிக கவனம் செலுத்துகிறேன். என்னுடைய படைப்புகளில் 2022ல் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரைந்த ஓவியங்கள், சென்னை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் சுவர்களில் வரைந்த ஓவியங்கள், சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் வரைந்த ஓவியங்கள் புகழ் பெற்றவை' என்கிறார் இளம் ஓவியர் பரத் முருகானந்தம்.

புதுச்சேரி மண்ணின் மைந்தர். சுவர் ஓவியங்கள் தவிர, திரை ஓவியங்கள், பலகை ஓவியங்கள் எனப் பலவற்றிலும் முத்திரை பதித்து வருபவர். நுண்கலைப் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு ஓவியக் குழு ஒன்றை உருவாக்கி, தனித்துவமான பாதையில் இயங்கி வருபவர்.

அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'என் சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள ரெட்டியார் பாளையம். தந்தை இல்லை. ஒரு தம்பி, பைன் ஆர்ட்ஸ் படித்து வேலை பார்த்து வருகிறார். தங்கை எம்.எஸ்.ஸி. சைக்காலஜி படித்து வருகிறார். தாய், பாட்டி, அத்தை, மாமா அரவணைப்பிலும், சித்தப்பாவின் ஆதரவிலும் வளர்ந்தேன்.

என் சித்தப்பா முத்து கிருஷ்ணன் தொழில்முறை ஓவியர். திரை அரங்குகளுக்கு பெரிய பெரிய பேனர்களை வரைந்து தருவார். அவரைப் பார்த்து எனக்கு ஓவியத்தின் மீது சிறுவயதிலேயே நாட்டம் ஏற்பட்டது. தொழில் நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டேன்.

அதை மேலும் மேம்படுத்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர்ந்து ஓவியத்துக்கான இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். அதன் பிறகு சுவர்கள், கேன்வாஸ் எனப் பலவற்றிலும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். கணினியின் உதவியின்றி கையால் வரைவதில்தான் எனக்கு அதிக விருப்பம்.

முதல்வர் ஓவியம்

புதுச்சேரியில் வெளிநாட்டவர்கள் வசித்த ஒயிட் டவுன் பகுதியில் என் குழுவினருடன் இணைந்து 30 அடி உயர குத்துவிளக்கு ஓவியம், அங்குள்ள ரோமன் ரோலண்ட் வீதியில் கேம்பா நிறுவனத்துக்காக நடிகர் அஜித்குமாரின் பிரமாண்ட சுவர் ஓவியம், என் வீட்டருகே நடிகர் சூர்யாவின் சுவர் ஓவியம் எனப் பலவற்றை வரைந்துள்ளேன்.

இப்போது தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளார். ஜனநாயகன் பட வெளியீட்டுக்காக எங்கள் தெருவில் உள்ள சுவரில் அவரது பல்வேறு தோற்றங்களை ஓவியமாக வரைந்தேன். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவர் முதல்வராகப் பதவி ஏற்ற பின், அதையும் ஓவியமாக வரையுமாறு ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அதையும் வரைந்துள்ளேன். இணையம் மூலம் இடத்தைக் கண்டுபிடித்து, வெளியூர்களில் இருந்தும், மலேசியா சிங்கப்பூர், துபை போன்ற வெளிநாடுகளில் இருந்தும்கூட ரசிகர்கள் வருகிறார்கள். இந்த ஓவியத்தின் முன் நின்று நின்று படமும் எடுத்தும் செல்கிறார்கள். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

உயிரோட்டமான ஓவியம்

குப்பைகள் மிகுந்த இடத்தில் சுவரில் ஓவியம் வரைந்தால் அதை நிறையப் பேர் பார்ப்பார்கள். அந்த இடம் நிச்சயமாக தூய்மையாக இருக்கும். இது நான் கண்ட அனுபவம். என் ஓவியங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டமாக உள்ளது என்று பலர் பாராட்டுகிறார்கள். இதை என் ஓவியத்தின் தனித்துவமாகக் கருதுகிறேன்.

இந்தத் துறைக்கு வர பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். முதலில் அவர்களுக்கு இதில் ஆர்வம் இருக்கவேண்டும். தீராத காதல் இருக்க வேண்டும். ஓவியப் பயிற்சிக்கென பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் பல இடங்களில் உள்ளன. இதை முறையாகப் பயிலவேண்டும்.

தொழில் முறை நிபுணர்களுடன் கலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். மனம் சளைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தால், நம்மை நல்ல நிலைக்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். இந்தத் தொழிலை மனப்பூர்வமாக நேசித்துச் செய்தால் நிச்சயம் கை கொடுக்கும்.

என்னுடைய வெற்றியில் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றவர்கள் பலரது பங்களிப்பு உண்டு. என்னுடைய வருவாயில் ஒரு பகுதியை என்னுடைய ஜூனியர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றேன். மகிழ்ச்சியாக இருக்கின்றோம்' என்கிறார் ஓவியர் பரத் முருகானந்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments