நேரத்தை வீணடிக்காதே என்றார்கள்... மானவ் சுதரின் கடினமான கிரிக்கெட் பயணம்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள இளம் வீரர் மானவ் சுதரின் கடினமான கிரிக்கெட் பயணம் குறித்து...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இளம் வீரர் மானவ் சுதர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நியூ சண்டீகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
மானவ் சுதரின் கிரிக்கெட் பயணம்
Advertisement
Advertisement
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் 23 வயதாகும் இளம் வீரர் மானவ் சுதர் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு கடினமான சூழலை கடந்து வந்துள்ளார்.
தன்னுடைய கடினமான கிரிக்கெட் பயணம் தொடர்பாக மானவ் சுதர் பேசியதாவது: கிரிக்கெட் எப்போதும் என்னுடைய குடும்பத்தில் மிகப் பெரிய அங்கம் வகித்து வருகிறது. என்னுடைய அப்பாவுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். என்னுடைய வீட்டில் உள்ள அனைவரும் கிரிக்கெட் பார்ப்பார்கள். சிறு வயதில் நானும் அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பேன். அதன் பின், தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்.
10 அல்லது 11 வயதில் கிரிக்கெட் அகாடெமியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சியாளர்கள் தீரஜ் மற்றும் வினோத் அவர்களிடம் பயிற்சி பெற்றேன். அவர்கள் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். ராஜஸ்தான் அணிக்காக 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடியது மிகுந்த ஊக்கமளித்தது. அங்கிருந்து என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது.
இந்தியா போன்ற மிக அதிக அளவிலான மக்கள் தொகை கொண்ட நாட்டில் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுவது ஒருபோதும் எளிது கிடையாது. சில இடங்களுக்காக மிகவும் திறமை வாய்ந்த பல வீரர்கள் போட்டியிடுகிறார்கள். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் நிறைய சவால்களை சந்தித்தேன். படிப்பில் கவனம் செலுத்துமாறு நிறைய பேர் என்னிடம் கூறினார்கள். உன்னுடைய எதிர்காலம் கிரிக்கெட்டில் இல்லை எனவும், நேரத்தை வீணடிக்காதே எனவும் கூறினார்கள். ஆனால், அதற்கு நான் கவனம் கொடுக்கவில்லை. கடினமாக உழைத்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டேன். இந்தியா ஏ அணிக்காகவும் நன்றாக செயல்பட்டேன். எப்போது வேண்டுமானாலும் இந்திய அணியிலிருந்து அழைப்பு வரும் எனத் தெரியும். அதற்காக பொறுமையாக காத்திருந்தேன் என்றார்.
பந்துவீச்சில் அசத்திய மானவ் சுதர்
இடதுகை பந்துவீச்சாளரான மானவ் சுதர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 2022-23 ரஞ்சி கோப்பையில் அவர் 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2025-26 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் வெறும் மூன்று போட்டிகளில் அவர் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதுவரை 29 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள மானவ் சுதர் 129 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கடந்த 2024 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த சீசனில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். 2025 சீசனில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் நான்கு போட்டிகளில் அவர் விளையாடினார்.