முகப்பு
தினமணி கதிர்

வாழைச்சருகிலும் வண்ண ஓவியங்கள்!

'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்' என்பது கண்ணதாசன் எழுதிய திரைப் பாடலில் வரும் வரிகள்.

பகிர்:

சுஜாதா மாலி

'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்' என்பது கண்ணதாசன் எழுதிய திரைப் பாடலில் வரும் வரிகள். அதுபோலத்தான் இலையோ, பூவோ, தாவரத்தில் இருக்கும் வரையோ, இறைவனுக்கு அலங்கரிக்கப்பட்ட நிலையிலோ, உயர்ந்த இடத்தில் இருக்கும்போதோதான் மதிப்பு, மரியாதை. உதிர்ந்த பிறகு எல்லாம் சருகுதான்.

ஆனால், உலர்ந்த சருகினைக்கூட உணர்வு நிறைந்த ஓவியங்களாக்கி உலவச் செய்யலாம் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது! 'லீபியோகிராஃபி' என்கிற விஷயத்தில் இப்படியொரு முயற்சி செய்து, அதில் வெற்றி கண்டுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த அஸ்வின் சத்யசீலன். இருபத்திரண்டு வயதே நிரம்பிய இந்த இளைஞர் சமூகவலைதள கலைஞர்களுள் பிரபலமான முகம். சாதித்தது எப்படி என்பதை அவரே கூறுகிறார்:

Advertisement

Advertisement

'எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பிறகு சூழல் காரணமாக மேற்படிப்புக்கு முயற்சிக்கவில்லை. தவிர, சிறு வயதிலிருந்தே ஓவியங்களின் மீதிருந்த ஆர்வம் வேறெந்த விஷயத்தையும் சிந்திக்க விடவில்லை. நிறைய ஓவியர்களின் நூல்களைப் படித்தும், அறிதிறன்பேசி மூலமாகவும் ஓவியங்கள் தொடர்பான தேடலைத் துவங்கினேன். கரோனா சமயத்தில் விளையாட்டாய்த் தொடங்கிய விஷயம், வருமானம் ஈட்டித் தரும் என்று நினைக்கவே இல்லை.

சாதாரண ஓவியங்களைக்கூட இயற்கையாகக் கிடைக்கும் மூலப்பொருள்களை வைத்து உருவாக்கத்தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர், அதிலேயே வித்தியாசமாக, புது முயற்சியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுக்கத் துவங்கியது. என்னுடைய ஓவியங்களுக்கு எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் இலைகள், பூக்களை உலர்த்திப் பயன்படுத்திக் கொள்வேன்.

இந்தக்கலையில் உலக அளவில் பல ஓவியர்கள் தங்கள் தனித்துவத்தைக் காட்டியுள்ளார்கள். இதில் ஜப்பானியர்களின் பராமரிப்பு முறை பிரமிப்பானவை. தவிர, அருங்காட்சியங்களில் உள்ள தாவர இனங்களைப் பாதுகாக்கும் முறை பற்றியும் நிறைய அறிந்துகொண்டேன். ஏனென்றால், ஒரு படைப்பை உருவாக்கினோம் என்றால், குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளாவது மெருகு குலையாமல் நீடிக்கச் செய்யவேண்டும்.

அம்முறைகளின்படி என்னுடைய தனித்துவமான பாணியை உபயோகப்படுத்தி, ஓவியங்களை உருவாக்கத் துவங்கினேன். அப்துல் கலாம், தோனி, இயற்கைக்காட்சிகள் என நிறைய ஓவியங்களை உருவாக்கினேன். 'லீப்யோ ஆர்ட்' என்கிற அடையாளத்துடன் என்னுடைய மேகிங் வீடியோக்களையும் வலைதளங்களில் பதிவேற்றினேன்.

வைரல் வீடியோ

ஒரு சமயம் என்னுடைய மதுரை மீனாட்சி அம்மன் இலை ஓவிய மேகிங் வீடியோ ரீல்ஸ் வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது. அதனை பார்த்த ஒரு பிரான்ஸ் நாட்டவர் அதே பாணியில் மீனாட்சி திருக்கல்யாணம் ஓவியத்தைத் தயாரிக்கச் சொன்னார். இது எனக்கு எதிர்பாராத பெரிய திருப்புமுனையையும், நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பிறகுதான் இந்திய தெய்வீகச் சின்னங்களைக் கொண்ட இயற்கைப் படைப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு தொடர்ந்து நிறைய தெய்வீக ஓவியங்களை இலையில் தயாரித்து வருகிறேன்.

பொதுவாக அடர்நிற ஷேடுகளுக்கு முற்றல் இலைகளையும், வெளிர்நிற ஷேடுகளுக்கு இளம் இலைகளும் பயன்படுத்துகிறேன். இப்படியே ஷேடுகளின் ஆழத்தினைப் பொறுத்து, இலைகளின் தன்மையையும் தெரிவு செய்யவேண்டும். தங்க நிற நகைகளுக்கு மேரி கோல்ட் பூக்களையும், உடைகளுக்கு ஏற்ற வண்ணத்தில் பூக்களையும் தேர்வு செய்து கொள்வேன். எஞ்சிய காட்சிகளுக்கு விதவிதமான இலைகள்தான். வெயிலில் காய வைக்கும்போது ஒரு நிறம், நிழலில் காய வைக்கும் போது ஒருநிறம், அழுத்தம் செய்யும்போது ஒரு நிறம், அறை வெப்பநிலையில் உலர்த்தும்போது ஒருநிறம் என ஒரே இலையிலேயே ஏகப்பட்ட வித்தியாசங்களைக் கொண்டு வரலாம்.

வாழவைக்கும் வாழை

எனது ஓவியங்களுக்குப் பெரும்பாலும் வாழை இலைகளைத்தான் பயன்படுத்துகிறேன். மற்ற இலைகளைவிட வளைந்து கொடுக்கும் தன்மை அதிகம், கூடுதல் வாழ்நாள், ஏகப்பட்ட நிற வித்தியாசங்கள் என அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சில சமயங்களில் மட்டும் அடர் கருநிறத்தினைக் கொண்டு வருவதற்காக சார்கோலில் நனைத்த இலைகளை 'ஏர் டையிங் ஹேங்கிங்' முறையில் உலர்த்துவது வழக்கம். தவிர பருவ காலத்துக்கேற்ப கிடைத்திடும் இலைகளை உலர்த்தும்போது ஏகப்பட்ட வித்தியாசமுடைய நிறங்கள், மாறுதல்களைப் பெறமுடியும்.

இதனால் என் வீட்டில் வருடம் முழுவதுமே உலர் இலைகளைப் பதப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கும். இந்த இலைகளை பூஞ்சை தாக்காமலிருப்பதற்காக, ஈரப்பதம் இல்லாமல் பாதுகாப்பதுதான் முக்கியம்.

பிறகு இலைகளை தகுந்த வடிவங்களுக்கு ஏற்றவாறு வெட்டும் பணி. இது மிகவும் துல்லியமாகவும் கவனமாகவும் செய்ய வேண்டிய வேலை. ட்ரேசிங் பேப்பர் வைத்து ஸ்கெட்ச் செய்து கொண்டு அதற்கேற்றவாறு வெட்ட வேண்டும். அதன் பிறகு ஆடை அணிகலன்களுக்கு ஏற்றவாறு கைகளால் வடிவமைத்துக் கொண்டே வரவேண்டும். பூ மாலைகள், கிரீடங்கள் போன்ற இடங்களில் மில்லி மீட்டர் அளவுகளில் வெட்ட வேண்டியிருக்கும். இவற்றை நகை வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகிற கருவிகளை வைத்துக்கொண்டு துல்லியமாகக் கைகளால் ஒட்டவேண்டும்.

சவாலான பணி

இப்படிக் கஷ்டப்பட்டு செய்கிற வேலையை சாதாரண பலகையில் செய்துவிட முடியாது. ஏனென்றால், தரமான ஓவியப் பலகை, பேனல்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு அவற்றிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் உமிழ்வினால் அமிலம் படிந்து, நாளடைவில் மங்கலாகிவிடும். இதனால்தான் ஓவியங்களுக்கு அடிப்படையான பேனல், கார்ட் போர்டு இவற்றை தரத்துடன் இருக்கும்படி அமைத்துக் கொள்கிறேன். இதற்கென்று பிரத்தியேகமாக ஆசிட் ஃப்ரீ கேன்வாஸ்கள் பயன்படுத்துவது வழக்கம். மேலும் தரமான கன்சீலர், பிரைமர் ஆகியவற்றைப் பலமுறை கோட்டிங் செய்வதும் அவசியம். அதேபோல் இலைகளையும் பூக்களையும் ஒட்டுவதற்குத் தரமான ஆசிட் ஃப்ரீ, அக்ரிலிக் மீடியம் உள்ள பசைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

இயற்கை சார்ந்த மூலப்பொருள்கள்

ஓவியம் தயாரான பிறகு தரமான அக்ரிலிக் வார்னிஷ் கோட்டிங் செய்துவிடுவேன். அதற்குப் பிறகே கண்ணாடிச் சட்டமிடுதல். முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த மூலப்பொருள் என்பதால் 'ஈகோ ஃப்ரண்ட்லி' தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துவது எனது வழக்கம்.

ஒரு ஓவியத்துக்குச் செய்கிற வேலையைப் போல் மீண்டும் இன்னொரு முறை செய்யஇயலாது. இயற்கையாக இலைகளின் போக்கினை அனுசரித்தே இதனை செய்ய முடியும். எனவே ஒன்றுபோல் இன்னொன்றினை உருவாக்குவது இம்முறையில் சாத்தியமில்லை. எனவே உலகத்திலேயே இது ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒவ்வொரு படைப்பும் தனித்துவமிக்கதாக இருக்கும். எனவே வித்தியாசமாக சாதிக்க நினைக்கும் என் போன்ற கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது நிச்சயம்!' என்கிறார் அஸ்வின் சத்யசீலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.