முகப்பு
தினமணி கதிர்

எனக்கான நினைவுகள்...

அலுவலகம். கதிரேசனாகிய நான் செல்போன் ஒலித்ததைக் கேட்டதும் எடுத்தேன். எதிர் முனையில் நண்பன் சுந்தர்.

பகிர்:

கே.ஆனந்தன்

அலுவலகம். கதிரேசனாகிய நான் செல்போன் ஒலித்ததைக் கேட்டதும் எடுத்தேன். எதிர் முனையில் நண்பன் சுந்தர்.

'சொல்லுடா... எப்படி இருக்க? எங்க ஒரு வாரமா போனை காணோம்? காலையிலேயே போன் பண்ணிட்டிருக்க?'

Advertisement

'வேற எதுக்கு? நம்ம ஊர் திருவிழாவுக்கு உன்னைக் கூப்பிடத்தான். அஞ்சு வருஷமாவே நீ வரல. இந்த வருஷம் கண்டிப்பா நீ வர்ற. வராட்டி சென்னைக்கே வந்து உன்னை தூக்கிட்டு வந்திடுவேன்.'

அவன் சொன்னதும் சிரித்துவிட்டேன் நான்.

'நம்ம ஊரு மூணு நாள் அம்மன் திருவிழாதான? கண்டிப்பா குடும்பத்தோட வந்துடறேன். சரிப்பா, இப்ப நான் வச்சுடறேன். தலைக்கு மேல வேலை இருக்கு...' சொன்னவன் லைனை கட் செய்தேன்.

நானும் சுந்தரும் கிராமத்தில் ஒன்றாவதிலிருந்து காலேஜ் வரை ஒன்றாகப் படித்தவர்கள். அடித்த லூட்டி முதல் சுற்றிய இடங்கள் வரை இணை பிரியாத தோழர்கள்.

எங்கள் ஊர் அம்மன் திருவிழா ரொம்ப விசேஷம். மூன்று நாள் திருவிழா. அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கிராமங்களிலும் இருந்து வந்து கலந்துகொள்வார்கள்.

அந்த திருவிழாவுக்குத்தான் அழைக்கிறான். ஐந்து வருடங்களாக ஆபீசில் வேலை, ஆடிட்டிங் எனப் போக முடியவில்லை. இந்த வருடம் கண்டிப்பாகப் போக வேண்டும் என முடிவு செய்து வேலையில் ஆழ்ந்தேன்.

இரவு வீட்டுக்குப் போய் கவிதாவிடம் சுந்தர் போன் செய்த விஷயம் சொல்லிவிட்டு, 'இந்த வருஷம் கண்டிப்பா திருவிழாவுக்குப் போறோம் கவிதா. அஞ்சு வருஷமாவே போகலை' என்றேன்.

'ஆமாங்க... எனக்கும் கொஞ்ச நாள் எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லாருக்கும்னு தோணுது...'

உடை மாற்றிக் கொண்டு வந்த நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டே, 'என்ன டின்னருக்கு?' என்றேன்.

'இட்லி, கடலைச் சட்னி, சாம்பார்...' என்றவாறே தட்டில் இட்லிகளை வைத்தாள்.

கவிதா இட்லி என்றதும் எங்கள் ஊரில் சிறிய வயதில் நான் சாப்பிட்ட ஆறுமுகம் கடை இட்லி ஞாபகம் வந்து வாயில் எச்சில் ஊறியது.

இட்லி என்றால் அதுதான் இட்லி. சுவை அவ்வளவு அபாரமாக இருக்கும்.

'என்ன யோசனை? சாப்டுங்க...' கவிதாவின் குரல் கேட்டு இட்லிகளை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு எழுந்தேன்.

சாப்பிட்டுவிட்டு கட்டிலில் போய் படுத்தவனுக்கு முப்பது வருடம் முன்பு ஆறுமுகம் கடையில் சாப்பிட்ட இட்லி சுவை ஞாபகம் வந்தது.

அதை நினைத்ததும் முப்பது வருடங்களுக்குப் பிறகும் அந்த சுவை இன்னும் நாக்கில் இனித்தது.

அவரை ஊரில் யாரும் ஆறுமுகம் எனப் பெயர் சொல்லி அழைத்துப் பார்த்ததில்லை. எல்லாருக்கும் அவர் அண்ணன்தான்.

அப்போதெல்லாம் கிராமங்களில் எங்கள் வீடுகளில் தினசரி இட்லி இல்லை. தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்ற பண்டிகை நாள்களில்தான் அல்லது யாராவது விருந்தினர் வரவேண்டும்.

இட்லி சுடும் நாட்களில் எப்போது விடியும் என்று இட்லி சாப்பிட இரவெல்லாம் தூங்காத நாள்களும் உண்டு.

அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் எங்களுக்கு அண்ணன் இட்லிக் கடைதான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்.

அவரின் கடை இட்லி அவ்வளவு மெதுவாக மல்லிகைப் பூ மாதிரி இருக்கும்.

குண்டு குண்டான இட்லி அரிசி, கறுப்பு உளுந்து போட்டு உரலில்தான் ஆட்டுவார். அடுத்த நாள் சுடும்போது பழுப்பு நிறத்தில் கும்மென்று இருக்கும்.

அதற்கு கடலைச்சட்னி. கடலை, தேங்காய், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கையிலேதான் ஆட்டிப் பரிமாறுவார்கள்.

ஒரு இட்லி ஐம்பது பைசா. நாலு இட்லி இரண்டு ரூபாய். ஆனால், அதற்கே அப்போது கையில் பணமிருக்காது.

எப்போதாவது அம்மாவுக்கு உடம்பு முடியாதபோதோ, இல்லை எங்காவது ஊருக்குப் போகும்போதோ ஆறுமுகம் கடையில் இட்லி வாங்கும் அதிர்ஷ்டம் இருக்கும்.

ஆல, புங்கம், வேப்பமரம் எனப் பல மரங்கள் சுற்றி இருக்க, நடுவில் ஒரு கீற்றுக் கொட்டகை. அதில்தான் அவரின் இட்லிக் கடை. அந்நேரத்துக்கே ஏழெட்டுப் பேர் நின்றிருப்பார்கள்.

வாழை இலை போட்டு அதன் மேல் இட்லி வைத்து அதன் மேல் சட்னி ஊற்றுவார். இட்லிகளை அதில் முக்கி எடுத்துச் சாப்பிடும்போது அதன் வாசனையும், சுவையும் சேர்ந்து ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல அவ்வளவு சுகமாய் இருக்கும்.

எங்கள் ஊரில் பெரிய ஆலமரம் உண்டு. பெரிதென்றால் ரொம்பப் பெரியது. பத்து ஆள் சேர்ந்து கட்டிப் பிடிக்க வேண்டும். 'ஐந்நூறு வருஷத்துக்கு மேல வயசு இருக்கும்டா...' என்றார் ஊர் பெருசு ஒருவர்.

அதனை ஒட்டியபடியே பெரிய ஏரி ஒன்றும்இருக்கும். அப்போதெல்லாம் அதில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.

லீவு நாட்களில் என் நண்பர்கள் ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். எங்களுக்குள் போட்டி நடக்கும் யார் மறுகரையை முதலில் போய் தொடுவதென.

அப்பா, அம்மா இருந்தபோது மாதம் ஒருமுறை ஊருக்குப் போனவன், இருவரும் இறந்த பின் ஊருக்குப் போவது அருகிப் போனது. அதுவும் இந்த ஐந்து வருடங்கள் சுத்தமாகவே இல்லை.

'என்ன... சிந்தனை பலமா இருக்கு?' கவிதாவின் குரல் கேட்டு பழைய ஞாபகத்தில் இருந்து நிஜ உலகுக்கு வந்தேன்.

'ஊர் ஞாபகம் கவிதா. எங்க ஊர் ஆலமரம் , ஃப்ரென்ட்ஸ், ஏரி, முக்கியமா ஆறுமுகம் கடை இட்லி...' சொல்லி முடிக்கும் முன்பே காதைப் பொத்திக் கொண்டாள்.

'ஆயிரம் முறை இட்லி பெருமையைச் சொல்லிட்டிங்க. கேட்டு காதுல ரத்தம் வருது...'

'இருக்கறதுதான சொன்னேன். மரம் சூழ இயற்கைக் காத்தோட அந்த இட்லியும், மணமா இருக்கற சட்னியும் சாப்பிடணும். சொர்க்கம். ஊருக்குப் போனதும் மொதல்ல அங்கதான் சாப்டணும்...'

'சாப்டலாம்... இப்ப தூங்குங்க.'

அடுத்த நாள் சுந்தருக்கு போன் செய்து, திருவிழாவுக்குக் குடும்பத்தோடு வருவதாய்ச் சொன்னேன். அவனுக்கு ஏக சந்தோஷம்.

'ஆறுமுகம் அண்ணன் கடை இருக்குதானே?'

'ம்... மூணு வருஷம் முன்னால அவர் இறந்துட்டாரில்ல. அவருக்குப் பின்னால அவர் மகன்தான் நடத்தி வர்றான். நீதான் வந்து அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சே. வந்தாதான ஊர் நிலவரம்லாம் தெரியும்?' என்றான் சுந்தர்.

நாளை திருவிழா. இன்று மாலையே காரில் கிளம்பினோம். விடிய விடிய ஊர் போய்ச் சேர்ந்து விடலாம்.

'அந்த ஆலமரத்தையும், விழுதுகளையும் ரசிக்க வேண்டும். நாள் முழுதும் அதன் நிழலில் உட்கார்ந்து அதன் காற்றின் குளுமையை தாய் மடியாய் அனுபவிக்க வேண்டும். ஏரியில் நீச்சலடிக்க வேண்டும்.' நினைக்கவே உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆக்சிலேட்டரை வேகமாய் அழுத்தினேன்.

காலை ஆறு மணி. எங்களுக்காய் ஊரின் பஸ் ஸ்டான்டில் காத்திருந்த சுந்தர் காரில் ஏறிக் கொண்டான். ஐந்து வருட ஊரின் மாற்றம் பளீரென என் முகத்தில் அறைந்தது. சிறுமியாய் இருந்தவள் பருவ வயதை எட்டியது போல ஊர் வளர்ந்திருந்தது. ரோடின் ஓரமிருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு ஊர் மொட்டையடிக்கப்பட்டு இரு வழி சாலையாக்கப்பட்டிருந்தது.

'நம்ம ஆலமரம் வழியா போயிடலாமா சுந்தர்? அதைப் பார்க்க ஆசையா இருக்கு...' நான் கேட்க சிரித்தான்.

'ஊருக்குள்ள ரோடு போட்டாங்க. அப்போ அத வெட்டிட்டாங்க...'

அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தேன். உள்ளுக்குள் ஏதோ அறுந்தது. ஏமாற்றமும், ஏதோ இனம் புரியாத வேதனை அழுத்த ஆரம்பிக்க அதற்குள் ஆலமரம் இருந்த இடம் வந்திருக்க காரை நிறுத்தினேன்.

பார்க்கவே மனம் கனமானது. மரம் இருந்த இடத்தில் ரோடு இருக்க ஊரை சுற்றி ஜெராக்ஸ் கடை, செல்போன் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ஸ்டேஷனரி கடைகள் என முளைத்திருந்தது.

அவ்வளவு பெரிய ஏரி சுருங்கிப் போய் வாழ்ந்து கெட்டவனை போல் காட்சி அளிக்க, அதைச் சுற்றியும் கடைகளும் புதிதாய் சில அபார்ட்மென்ட்கள். நெற் கதிர்களும், சோளமும், வேர்க்கடலையும் செழித்திருந்த வயல்கள் இப்போது ஃப்ளாட்டுகளாய். போக்குவரத்தும் அதிகமாகி இருந்தது.

'ஊர் நல்ல டெவலப்பாயிடுச்சு கதிரேசா. முன்ன பஞ்சாயத்தா இருந்தது இப்ப பேரூராட்சி. பார்க்குற இல்லே. நிலத்தோட மதிப்பும் இப்ப அதிகம். சென்ட் லட்ச ரூபாய்...' சுந்தர் சொன்னான் பெருமையாய்.

சுந்தர் வீடு வந்திருந்தது. வாங்கி வந்திருந்ததைக் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு குளித்து ரெடியானேன். சுந்தரையும் அழைத்துக் கொண்டு எங்கு போகிறோம் எனச் சொல்லாமல் ஆறுமுகம் இட்லிக் கடை நோக்கி நடந்தேன். சொன்னால் விட மாட்டான்.

கடையைநெருங்கியவன் அதிர்ந்து போய் நின்றேன். மரமெல்லாம் வெட்டப்பட்டு ஃப்ளாட்டாகி இருந்தது. முன்பு சில்லென காற்று வீசிய இடத்தில் இப்போது என் மனதை போலவே வெயில்.

கடைக்குள் நுழைந்தோம், 'காலைல இங்க எதுக்குடா?' என்ற சுந்தரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தவனை வரவேற்றது 'ஆறுமுகம் ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்' என்னும் போர்டு.

இட்லிக்கும், சட்னிக்கும் ஆட்டின உரலும் ஆட்டுக்கல்லும் வெளியே குப்பையோடு குப்பையாய் இருந்தது.

மனதில் யாரோ ஆசிட் ஊற்றியது போன்ற உணர்வு.

'வாங்க, நல்லாருக்கீங்களா?

பார்த்து ரொம்ப நாளாச்சு. திருவிழாவுக்கு வந்தீங்களா?' வரவேற்றான் ஆறுமுகம் மகன் கணேசன்.

'நல்லாருக்கேம்பா. என்னது ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டலா மாறி இருக்கு? அப்பா இருந்தப்ப இருந்த அந்த இட்லி, சட்னி...' முடிக்கவில்லை நான்.

'அட அதுக்கெல்லாம் இப்ப எங்கண்ணே டைம் இருக்கு? இப்ப அதை யாரும் விரும்பறதும் இல்ல. பரோட்டா, அதுலயே கொத்து பரோட்டா, நூல் பரோட்டா, இலை பரோட்டா, எக் ரைஸ், ஃப்ரைட் ரைஸ், பனீர் மசாலா ஐட்டங்கள்தான். இட்லி கேக்கறவங்களுக்கு இதோ கிரைண்டர்ல அரைச்ச மாவு இருக்கு. அதுவும் சுட்டு வச்சிருக்கோம். சாப்டுங்கண்ணே. பசங்களுக்கும் வாங்கிட்டுப் போங்க...'

அவனை இரண்டு நொடி உற்றுப் பார்த்தவன் சொன்னேன்.

'வேணாம்பா. சின்ன வயசுல உன் அப்பா கையால சாப்பிட்ட இட்லி, சட்னியோட மணமும், டேஸ்ட்டும் இன்னும் இருக்கு. அது காலத்துக்கும் இருக்கும். எனக்கு அது போதும். இந்த பரோட்டா சாப்பிட்டு அதைக் கெடுத்துக்க விரும்பல. வரேன்...' சொன்னவன் சுந்தரை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

'அடுத்ததா எங்க போறோம்பா?' சுந்தர் கேட்டான்.

'வீட்டுக்குப் போகலாம், சுந்தர்.'

'என்னப்பா இது? ரொம்ப வருஷத்துக்குப் பின்னால வந்திருக்கே. இது நாம வளர்ந்த ஊர். ஒண்ணா சுத்துன ஊர். ஒரு ரவுண்டு அடிச்சு எப்படி இருக்குனு பார்க்க வேணாமா?'

'இல்லடா. பார்த்த வரைக்கும் போதும். வா போகலாம்...'

'அட்லீஸ்ட் நீ பொறந்து வளர்ந்து உன் வீடு இருந்த தெருவையாச்சும் பார்த்துட்டு வரலாமே கதிரேசா?'

அவன் கேட்டதும் அவனை சில நொடிகள் உற்றுப் பார்த்த நான் சொன்னேன், 'சுந்தர்... நான் பார்க்க ஆசைப்பட்ட ஊர் இல்லை இது. தோப்பும், துரவுமா, நல்ல காத்தோட, வெள்ளந்தி மனுஷங்க வாழ்ந்த அந்த ஊரைத்தான் நான் பார்க்க, மீண்டும் சில நாள் அதுல வாழ ஆசைப்பட்டேன். எந்த ஊருமே பழைய மாதிரி அப்படியே இருக்காது. மாற்றம், வளர்ச்சி எல்லாம் இருக்கும். அது யதார்த்தம். அது புத்திக்குத் தெரியுது. ஆனா பாழாப் போன மனசுக்குத் தெரிய மாட்டேங்குதே...

நான் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த தெருவும் கண்டிப்பா மாறி இருக்கும். அங்க இருந்த பெரிய பெரிய மரங்கள் இருக்காது. நாம நீச்சல் அடிச்சு குளிச்ச, மீன் புடிச்சு சாப்பிட்ட ஏரியோ, எந்தக் காலத்துலயும் வத்தாத கிணறோ, நாம கடலையும், கிழங்கும் திருடி வறுத்து சாப்பிட்ட வயலோ, நாம நுங்கு பறிச்சு சாப்பிட்ட பனை மரமோ, இளநீர் வெட்டி தின்ன தென்னை மரமோ இருக்காது. மனசு சரியில்லாட்டி சுத்தி வருவமே நெல் வயல். கண்டிப்பா அது ஃப்ளாட்டாதான் மாறி இருக்கும்.

ஆனா அதெல்லாம் என் மனசுலயும், நினைவுகளிலும் அப்படியே மாறாம இருக்கு. எனக்கு அது போதும். அங்க போய் வெறும் கட்டடங்களையும் பாழாகி நிக்கற ஏரியையும், இல்லாத கிணத்தையும் பார்த்து வேதனைப்படறதுக்கு என் நினைவுகள்ல இருக்கற பழைய தெருவை நினைச்சு சந்தோஷப்பட்டுக்கறேன். அது என் நினைவுகள்ல எப்பவும் மாறாம அப்படியே இருக்கட்டும். வா வீட்டுக்குப் போகலாம்...'

சொன்னவன் சுந்தர் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.