தினமணி கொண்டாட்டம்

"சாயாவனம்'- வயது ஐம்பது!

த. சித்தார்த்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1968-இல் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி(தீரர் சத்தியமூர்த்தியின் மகள்) யின் வாசகர் வட்டம் சா. கந்தசாமியின் "சாயாவனம்' நாவலை வெளியிட்டு, இந்த 2018-இல் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து 
வைக்கிறது. 
""இந்த நாவலை எழுதும்போது எனக்கு 25 வயதுகூட ஆகியிருக்கவில்லை. மயிலாடுதுறையிலிருந்து அம்மாவின் ஊர் காவேரிப் பூம்பட்டினத்துக்கு செல்லும்போது கடக்கும் ஊர்தான் சாயாவனம். அங்கே வனத்துக்குள் அழகான கோயில் இருக்கிறது. சுவாமியின் பெயர் சாயாவனேசுவரர். அம்பாள் பெயர் குயிலினும் இனிய நன்மொழி நங்கை! 10-ஆம் நூற்றாண்டை அடுத்து அந்தக் கோயில் ராஜராஜனால் செப்பனிடப்பட்டிருக்கிறது. காவேரிக்கரையை ஒட்டி பாதை செல்கிறது!'' என்று நினைவு கூரும் கந்தசாமி, ""இதை நான் நாவலாக எழுத வேண்டும் என்று திட்டமிடவே இல்லை. கதையாக எழுதக் கூடாது என்றே நினைத்தேன். ஆனால் அந்தப் பகுதி வாழ்க்கை பற்றி எழுத வேண்டும் என்றே தீர்மானமாக இருந்தேன்!'' என்கிறார். 
"சாயாவனம்' அடிப்படையில் புலம்பெயர்ந்த நபர் மீண்டும் திரும்பி வந்து, காட்டை அழித்துக் கரும்பு ஆலை அமைக்கத் திட்டமிடுவதுதான் கதை. தன் மாமன் "பீமன் மாதிரி இருப்பார்' என்று தாய் சொல்லக் கேட்டிருக்கிறார் கந்தசாமி. அவர்தான் சிவனாண்டி தேவர். சாயாவனம் ஓர் ஐயருக்குச் சொந்தமானது. அதை வாங்கிவிடுகிறார். நாவலில் அவர் பெயர் சிதம்பரம். டேவிட் சிதம்பரமாக மாறித் திரும்பி வந்தவர். கையில் பணம், புதிய அறிவு, தொழில் நுட்ப ஈடுபாடு என்று தீவிரமாக இருப்பவர். அதுவோ நெல் விளையும் பூமி. இவரோ எல்லோரும் கரும்பு பயிரிட வலியுறுத்துகிறார்! 
""எனக்கு சோஷியாலஜி எனப்படும் சமூகவியலில்தான் ஈடுபாடு இருந்தது. அதனால் பி.எஸ். பாலிகா எழுதிய தஞ்சாவூர் ஆவணங்கள் பற்றிப் படித்தேன். ஹெமிங்வே எழுதிய மாவட்ட கையேட்டை ஆராய்ந்தேன். அந்தக் காலத்தில் மக்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்தது என்று நாவல் எழுதுவதற்கு முன்னால் படித்துத் தெரிந்துகொண்டேன். சாதிகள் பற்றி எட்கர் தர்ஸ்டன் எழுதிய நூலையும் படித்தேன். அதில் கள்ளர்கள் வாழ்க்கை பற்றி விவரமாக இருந்தது. அறிவு உள்ளவன், சுய நம்பிக்கை உள்ளவன், பணம் கையில் இருக்கிறவன், அந்த இடத்தை வாங்கியும் அழிக்க முடியவில்லை!'' என்று மேலே தொடர்கிறார் கந்தசாமி. நாவல் நடக்கும் காலம், எதுவும் குறிப்பிடப்படாவிட்டாலும், சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்கு பாரதியாரும், வ.உ.சி.யும் செல்லுவதைக் குறிப்பிடுகிறார். அதாவது 1900-களின் தொடக்கத்தில். ""அப்போதெல்லாம் இப்போது போல சுற்றுச்சூழல் பற்றி யாரும் பேசக்கூட ஆரம்பிக்கவில்லை!'' என்கிறார் கந்தசாமி. சொல்லுவதைவிட, சொல்லாததுதான் முக்கியம் என்பது கந்தசாமியின் வாதம். படிக்கும்போது வாசகர்களாகவே முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து.
1965-இல் எழுதினாலும், அதை மூட்டை கட்டி வைத்துவிட்டாராம். இரண்டு வருடங்கள் கழித்து எடுத்துப் பார்த்து, வெட்டி எறிய வேண்டிய பகுதிகளைக் கத்தரித்து, படிக்கும்படியாக 200 சொச்ச பக்கங்களில் முடித்துவிட்டார். 
கந்தசாமி ஒரு நாளைக்கு 10 பக்கம் எழுதினாராம். ஸ்வான் பேனாவில் பச்சை மை நிரப்பி எழுதுவாராம். ""எனக்கு அந்த வர்ணம் மிகவும் பிடிக்கும்'' என்கிறார். ""மூன்றாவது முறையாகத் திருத்தங்கள் செய்துவிட்டு லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குச் சென்றேன். "குண்டூசி' கோபால் தான் அங்கே இருந்தார். நாவலை வாங்கி வைத்துகொண்டார். அவருக்கு என்னைத் தெரியாது'' என்கிறார். 
மாவட்ட நூலகக் கட்டடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேச வந்திருந்தார் கந்தசாமி. இளம் எழுத்தாளர்களின் நல்ல நாவல்கள் இருந்தால் தம்மிடம் தெரிவிக்கும்படி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கவே, கந்தசாமியுடன் பணிபுரிந்த மா.ராஜாராம் 
("கல்கி' யில் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்) கந்தசாமியின் நாவல் பற்றி முன்பே தெரிவித்திருந்தார். ""தற்போதைக்கு உங்கள் நாவலை பிரசுரம் செய்வதாக முடிவு செய்துவிட்டேன்!'' என்று லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அப்போது தெரிவித்தாராம். நாவலின் தலைப்புக்கு அங்கீகாரம் வழங்கியவர் கிருஷ்ணமூர்த்தி. 
பல பதிப்பாளர்கள் இந்த நாவலைப் பதிப்பித்திருப்பதும், அசோகமித்திரன் "கணையாழி'யில் இந்த நாவலைப் பற்றி உயர்வாக எழுதியிருப்பதும், ஆங்கிலத்தில் வசந்த சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டதும் சா. கந்தசாமிக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி தந்த விஷயங்கள். தேசிய புத்தக டிரஸ்ட் இந்த நூலுக்கு "மாஸ்டர்பீஸ் ஆஃப் இன்டியன் லிட்ரேச்சரில்' இடம் கொடுத்ததும், தில்லியில் ஓர் இலக்கியக் கூட்டதில் தி.ஜானகிராமன், என்.எஸ். ஜெகந்நாதன், தேசிய புத்தக டிரஸ்ட் ரங்காசாரி ஆகியோர் பாராட்டியதும் சா. கந்தசாமியின் நினைவில் இன்றும் பதிந்துபோனவை. அதிலும் என்.எஸ். ஜெகந்நாதன், சா. கந்தசாமிக்கு பாஷை என்னும் வரப்பிரசாதம் முழுமையாகக் கிடைத்திருப்பதைக் குறிப்பிட்டாராம்.
சா. கந்தசாமிக்குத் திருமணமானபோது, அவரையும் அவரது மனைவியையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி. பின்னர் அவரே வீட்டுக்கு வந்து தம்பதியையும் வாழ்த்தினாராம். 
கந்தசாமி, 1940-இல் சாந்தப்ப தேவருக்கு மகனாகப் பிறந்தவர். இவரது "விசாரணை கமிஷன்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. ஆறு நாவல்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர். ""நான் தினமும் எழுதுகிறேன். காமா பேனாவில்தான் எழுதுகிறேன்!'' என்கிறார் 
மயிலாடுதுறைக்காரரான சா. கந்தசாமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT