தினமணி கொண்டாட்டம்

 என்றும் இருப்பவர்கள்! 17 - சா. கந்தசாமி

DIN

ஏ.கே. ராமானுஜன்
 கடைத்தெரு ஓரமாக
 நடந்து செல்லும் போது
 மூடிய கடையின்
 கண்ணாடியில் என் முகமே
 ஓர் அந்நியன் முகமாவது கண்டு
 திடுக்கிட்டேன்
 முகத்துக்குக் கீழே
 கையொப்பம்- என் தந்தையுடையது
 -ஏ.கே.ராமானுஜன் ஆங்கில மொழி கவிதை
 1970-ஆம் ஆண்டு. தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிதைகள் எழுதுவதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். நீல-பத்மநாபன் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு "தலைமுறைகள்' என்ற நாவல் எழுதி புதிய தடம் பதித்தார். டி.செல்வராஜ் "மலரும் சருகும்' வெளிவந்து, முற்போக்கு எழுத்தாளர்கள் சித்தாந்தம் தாண்டியும் நாவல் எழுதுவார்கள் என்பதை நிலை நாட்டினார். சா.கந்தசாமி "சாயாவனம்' வெளிவந்து கதையில்லாதக் கதையெழுதலாம் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்தார். லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் "வாசகர் வட்டம்' நேரடியாக எழுதப்பட்ட" அம்மா வந்தாள்', "மாய தாகம்' ," வேள்வித் தீ', "சமுதாய வீதி', "மணலும் புனலும்' என்ற தமிழ் நாவல்களை வெயிட்டிருந்தது.
 சென்னை நகரத்தின் சில பகுதிகளில் இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. சென்னை மத்திய நூலகம் கருத்தரங்குகள் நடத்த அரங்குகள் கொடுத்து உதவியது. சித்தாந்த ரீதியில் வேறுபட்டிருந்தவர்கள் தங்கள் அளவில், தங்களின் கருத்துகளைச் சொல்லும் படைப்புகளை அறிமுகப்படுத்த இதர படைப்புகளை விமர்சனம் செய்து அழிக்கக் கூட்டங்கள் நடத்தி வந்தார்கள்.
 இவ்வகைக் கூட்டங்கள் சிலவற்றில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பெயரெடுத்திருந்த கைலாசபதி, சிவத்தம்பி எல்லாம் பேசினார்கள். பிற்போக்கு இலக்கியத்தை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதன் கோர முகத்தை- சமூக விரோத சித்தாந்தங்கள் கொண்டிருப்பதை மக்கள் அறிய செய்ய வேண்டும். முற்போக்கு இலக்கியத்தைப் படிக்கவும், பாராட்டவும் செய்ய வேண்டும் என்று பேசி வந்தார்கள்.
 இலக்கியம் தான் உண்டு. அதில் முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம் என்பதெல்லாம் கிடையாது. எல்லா காலத்திலும் இலக்கியம் என்பது மக்களுக்கானதாகவே, மக்கள் பிரச்னைகளைப் பேசக்கூடியதாகவே இருக்கிறது. அது தான் இலக்கிய சரித்திரம் என்று சிலர் சொல்லாமல் செயல்பட்டுக் கொண்டு வந்தார்கள். அதில் இலக்கியச் சங்கத்தினர் முன்னே இருந்தார்கள்.

"எழுத்து' என்னும் சிற்றேட்டின் ஆசிரியராக இருந்த சி.சு.செல்லப்பாவும், "தீபம்' இதழை நடத்தி வந்த லட்சிய எழுத்தாளர் நா. பார்த்தசாரதியும் இணைந்து "பவா' என்ற பெயரில் இலக்கியக் கருத்தரங்குகள் நடத்தி வந்தார்கள். அவர்களின் கருத்தரங்குகள் "தீபம்' அலுவலகத்தின் மொட்டை மாடியில் நடைபெற்றது. அண்ணா சாலையை அடுத்துள்ள எல்லீஸ் சாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஐம்பது, அறுபது பேர்கள் கலந்து கொண்டார்கள். அதுவே பெரிய கூட்டம் தான் . பல கூட்டங்களில் நானும், என் நண்பருமான நா.கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டோம்.
 இலக்கியக் கூட்டங்களில் தமிழர்களே தமிழ்ப்படைப்புகள் பற்றிப் பேசுவார்கள். இலக்கியவாதிகள், பேராசிரியர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், அவர் நடத்திய கூட்டங்களில் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் ஓரளவு தமிழ் இலக்கியம் பற்றி அறிந்தவர்கள், தங்கள் தாய்மொழி இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றி உரையாற்றினார்கள். அது ஒரு புது முயற்சியாக இருந்தது. அதனால் கவனம் பெற்றது.
 சென்னை தியாகராயநகரில் வசித்து வந்த தெலுங்கு கவியும், சினிமா பாடலாசிரியருமான ஆருத்ரா ஒரு முறை சொற்பொழிவாற்றினார். அவர் தமிழில் இருந்து கலிங்கத்துப்பரணி "கடைதிறப்பினோ' என்ற காதல் கவிதைகளை மொழி பெயர்த்து இருந்தார். தன் தெலுங்கு மொழி பெயர்ப்பைப் படித்துக் காட்டினார். தெலுங்கு மொழியில் நவீன நல்ல இலக்கியம் எழுதப்படுவது குறைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
 இன்னொரு கூட்டத்தில் மலையாள எழுத்தாளரும் "சம்ஷா' காலாண்டு இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியருமான எம்.கோவிந்தன் பேசினார். அவர் மலையாள எழுத்தாளர். சென்னையில் வாழ்ந்து கொண்டு மலையாள இலக்கியம் முழுவதையும் பாதிக்கக்கூடிய சித்தாந்தவாதியாகவும் இருந்தார். தமிழில் ஒரு சிறுகதை கூட எழுதியிருப்பதாகச் சொன்னார். இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தவர். "மலையாள மொழி படைப்புக்களை விட தமிழ்ப் படைப்புக்கள் தரமாக உள்ளன. ஆனால், வெகுஜன படைப்புகளால் தமிழின் சிறந்த படைப்புகள் அறியப்படாமல் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
 கிரீஷ் கர்னாட் என்பவர் கன்னட நாடகாசிரியர். இளைஞர். இங்கிலாந்து போய் ஆங்கிலம் படித்துவிட்டு வந்து கன்னட மொழியான தாய் மொழியில் நாடகங்கள் எழுதி கொண்டிருந்தார். அவர் நாடகங்கள், புராண இதிகாசங்கள், நாடோடிக் கதைகளிலிருந்து உருவாக்கப்பட்டவை. அவற்றில் நவீனத்துவத்தை ஏற்றி வைத்திருந்தார். சென்னையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸில் பணியாற்றி வந்தார். கர்நாடகாவில் அவர் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
 ஒரு முறை ஏ.கே. ராமானுஜன் "பவா' இலக்கியக் கருத்தரங்கில் உரையாற்றினார். கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பேராசிரியர்கள் சிலர் கூட வந்திருந்தார்கள். பெரும்பாலும் கல்லூரி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளமாட்டார்கள். அவர்களின் பணி என்பது பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே முடங்கிப் போய்விட்டிருந்தது.
 ஏ.கே. ராமானுஜன் சங்க இலக்கியம் பற்றிப் பேசினார். "அது உயர்தரமானது. சர்வதேச தன்மை கொண்டது. சமயம் சார்ந்தது இல்லை. வாழ்க்கையை வாழ்க்கையாகவே சொல்கிறது' என்று குறிப்பிட்டார்.
 அவரது உரை தமிழ்ச் சங்க இலக்கியத்தைச் சர்வதேச இலக்கியம் என்று நிறுவுவதால் பலருக்கு நிறைவளித்தது. உரையின் முடிவில், "தமிழர்கள் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி ஓர் உச்சத்தை அடைந்து இருக்கிறார்கள். அந்த உச்சத்தை எட்டும் படியாக ஒன்றும் எழுதப்படவில்லை. இப்படிச் சொல்வது சங்க இலக்கியத்தின் தொன்மை, மேன்மையைச் சொல்வது என்பதில்லை. அந்த உச்சத்தை அடைய வேண்டும் என்பது தான்' என்று குறிப்பிட்டார். சில பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், "தமிழில் சங்க இலக்கியத்திற்குப் பிறகு ஒன்றுமே எழுதப்படவில்லை என்று சொல்கிறீர்களா?' என்று கேட்டார்கள்.
 "நான் அப்படிச் சொல்லவில்லை. நிறையக் காப்பியங்கள் கவிதைகள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். எழுதிக் கொண்டும் வருகிறார்கள். ஆனால் சங்க இலக்கியம் மேலேயே இருக்கிறது'' என்றார்.
 நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரும் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.
 ஏ.கே.ராமானுஜன் மைசூரில் பிறந்தவர். அவர் தாய் மொழி தமிழ். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்ததால் கன்னடம் கற்றுக்கொண்டார். தெலுங்கும் அறிவார். மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்தார். மதுரையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அமெரிக்கா சென்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
 அவர் தன்னளவில் கவிஞர். புதுக்கவிதைகள் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். கன்னட மொழியில் ஒரே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கதையின் பெயர்" அண்ணய்யன மானவ சாஸ்திர' அது கன்னட மொழியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் உட்பட சில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் உளவியல் எவ்வாறு எல்லாம் வேலை செய்கிறது என்பதை எல்லோர்க்கும் பொதுவாகச் சொல்லும் கதை.
 ஏ.கே.ராமானுஜன் அறுபதாண்டுகளுக்கு முன்பாகவே நாடோடிக்கதைகள், பாடல்கள் திரட்டப்பட வேண்டுமென்றும், அவை ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். அதோடு அவற்றைச் சேகரிக்கவும் செய்தார். தமிழகத்திலும் கர்நாடகாவிலும், நாடோடிக்கதைகள், கதைப்பாடல்கள் பற்றி பிரக்ஞை ஏற்பட அவர் ஒரு காரணமாக இருந்தார். "நவீன இலக்கியத்தின் வேர்கள் அவற்றில் உள்ளன. எனவே அவை திரட்டப்படவும், படிக்கப்படவும் வேண்டும்' என்றார்.
 "தீபம்' கூட்டத்தில் அவரைச் சந்தித்து சிறிது நேரம் பேச முடிந்தது. "சாயாவனம்' படித்திருப்பதாகவும், தனக்குப் பிடித்திருப்பதாகவும் கூறினார். பின்னர் ஏ.கே. ராமானுஜனை நான்கைந்து முறைகள் மைசூரில், சி.டி.நரசிம்மையா த்வன்யாலோகாவிலும், நடுவண் அரசின் இந்திய மொழிகள் நிறுவனத்தில், அதன் முதல் தலைவர் டி.பி.பட்நாயக் அறையில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். சில நேரம் அவரோடு நடைப்பயிற்சி
 யிலும் நடந்திருக்கிறேன்.
 ஒரு முறை தமிழ்ச் சங்க இலக்கியம் பற்றி குறிப்பாக அதன் ஐந்திணை அகப்பாடல்கள் பற்றி பேச்சு வந்தது. அவர் "ஐந்திணைப் பாடல்கள் வாழ்க்கை அடிப்படையில் எழுதப்பட்டவை. எப்படி வாழ்க்கை இருந்ததோ அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. அவை கற்பனை இல்லை. அசலானவை'' என்றார்.
 "தொல்காப்பியர் தன் நூற்பாக்களில் சொன்ன இலக்கணத்தின் படி புலவர்கள் ஒன்று கூடி தீர்மானித்துக்கொண்டு பாடப்பட்டது போலவே இருக்கிறது'' என்றேன்.
 அவர் உடனடியாக மறுத்தார். அவர் ""வாழ்க்கையை வாழ்ந்த விதமாகச் சொல்கிறது'' என்றார்.
 அதோடு சங்கப்பாடல்கள் முழுவதும் நன்றாக மேலான தரத்திற்காக ஒரு சொல் மிகாமலும், ஒரு சொல் குறைவுபடாமல் எழுதப்பட்டிருக்கின்றன.
 "இதனை எடிட்டிங் என்றால் யார் செய்து இருப்பார்கள். ஒரு எடிட்டருக்கு ஐவகை நிலம், ஒழுக்கம் பற்றி முழுவதும் தெரிந்து இருக்குமா?'' என்று கேட்டேன்.
 "சங்க காலத்தில் கவிஞர்களே, புலவர்களாக இருந்தார்கள். புலவர்களே கவிஞர்களுமாக இருந்தார்கள். "தொல்காப்பியம்' இலக்கண விதிகளை மட்டும் தான் கூறியது. கவித்துவம் என்பது கவிஞர்களால் சிருஷ்டிக்கப்பட்டது. அதன் காரணத்தில் தான் சிருஷ்டி இத்தனை காலமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறது'' என்றார்.
 அவருக்கு மொழி பெயர்ப்பில் பேரர்வம் இருந்தது. எனவே சங்கப்பாடல்களில் இருந்த அகப்பாடல்கள் சிலவற்றையும், அகப்பாடல்களில் இருந்து சிலவற்றையும் மொழி பெயர்த்து அமெரிக்காவில் வெளியிட்டார். நம்மாழ்வார் பாடல்கள், திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டார். மொழி பெயர்ப்புக்காக உயர்ந்த பரிசுகளும் பெற்றார்.
 யு.ஆர் அனந்தமூர்த்தியின் நாவலான "சம்ஸ்காரா' நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அது நாவலாசிரியரான அனந்தமூர்த்தியை இந்திய எழுத்தாளர் என்று அறிய வைத்தது. ராமானுஜன் மொழி பெயர்ப்பு, அனந்தமூர்த்தி கன்னட மொழியில் எழுதியிருப்பதை விட சிறப்பாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுதின.
 அவர் சென்னைக்கு வந்த போது "வெள்ளைக்காரன் கதை' என்று வானமாமலை பதிப்பித்த நூலை வாங்கி அமெரிக்காவிற்கு அனுப்பச் சொன்னார். அதற்குப் பணமும் கொடுத்தார்.
 ஒருமுறை மைசூரில் அவரிடம் ""மொழி பெயர்ப்புக்கு எப்படி நூல்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
 "என் படிப்பில் இருந்து தான். எவையெல்லாம் சிறந்தப் படைப்புகள் என்று படுகிறதோ; எதனை ஓரளவிற்காவது மூலத்தின் வனப்புக் குறையாது மொழி பெயர்க்க முடியுமென்று
 படுகிறதோ, அதனைத்தான் மொழி பெயர்க்கிறேன். என் மொழி பெயர்ப்பில் மற்றொருவர் சிபாரிசு என்பது குறைவு. இரண்டாவது அம்சம் காலம் என்பது ஒன்று இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது என்பதால் சிறப்போ குறையோ கிடையாது. அது எல்லா காலத்திற்கும் ஏற்றது என்று படும் போது, மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறேன்''என்றார்.
 நண்பர் யு.ஆர். அனந்தமூர்த்தி, "பாரதியாரை மகாகவி என்று கொண்டாடுகிறீர்கள். அவர்தான் தமிழின் நவீன கவியென்றும் சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால், நான் ஆங்கில மொழி பெயர்ப்பில் சில கவிதைகளைப் படித்தேன். நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக இல்லை'' என்றார்.
 அவருக்கு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் புதுக்கவிஞர்கள், நாடோடிக்கதை, பாடல் திரட்டுவோர் என்று பலரிடமும் நல்ல மதிப்பு இருந்தது. அவர் 1973-ஆம் ஆண்டில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார். ஆனால், சிங்கள அரசு, கொழும்பு விமான நிலையத்தில் அவரைத் தடுத்து நிறுத்தி நியூயார்க் நகருக்கே திருப்பி அனுப்பிவிட்டது.
 ஒரு முறை மைசூரில் நடைப்பயிற்சியின் போது அசோகமித்திரன் கதைகள் பற்றி பேச்சு வந்தது. "அவர் நன்றாகத்தான் எழுதுகிறார்; ஆனால், முதல் வரியில் இருந்து கடைசி வரி வரையில் ஒரே நேர்க்கோட்டில் எழுதுகிறார். மனந்தான் எழுத்து. மனம் எப்பொழுதும் இழுத்துப் பிடித்த இரும்பு கம்பி போல விரைப்பாக இருப்பது இல்லை. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அது படைப்பை இன்னும் மேலே கொண்டு போகும்'' என்றேன்.
 "அதனை அசோகமித்திரனிடம் சொன்னீர்களா?''
 " இல்லை. அது சொல்லக்கூடியதாகப்படவில்லை. அவருக்கு இலக்கியம் பற்றி நிறையவே தெரியும். தானாக அறிந்து கொண்டு எழுதும் வரையில் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்'' என்றேன்.
 "நீங்கள் எழுத வேண்டும்'' என்றார்.
 நான் எழுதவில்லை.
 1973-ஆம் ஆண்டில் "பத்மஸ்ரீ' விருது பெற்றார். சென்னைக்கு வந்த போது என்னையும், அசோகமித்திரனையும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான குகன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
 வெகுநேரம் நவீன இந்தியப் படைப்புகளின் தரம் பற்றியும், நாடோடிப் பாடல்கள், கதைகள், புத்திலக்கியத்தில் பங்கு பெற்றிருப்பது பற்றியும் பேசினார். நவீன தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பொன்றை ஆங்கில மொழி பெயர்ப்பில் கொண்டு வர இருப்பதாகச் சொன்னார். அதற்கான ஆயத்தப் பணிகளில் தன் மாணவர்களோடு சேர்ந்து ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
 1983-ஆம் ஆண்டில் அவருக்கு "மெக் ஆர்தர் அறக்கட்டளை' இலக்கிய ஆய்வுகள் மேற்கொள்ள நிதி வழங்கியது. அவர் நல்ல ஆசிரியர் என்றும் சிறந்த ஆராய்ச்சியாளர் என்றும் பெயரெடுத்திருந்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள் ஆறு மாதங்கள் அவரிடம் படித்தவர்களில் சிலரை பெங்களூரிலும் சென்னையிலும் சந்தித்தேன். அவர்கள் ஏ.கே. ராமானுஜரிடம் படித்த மாணவர் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள்.
 1993-ஆம் ஆண்டில் தன் அறுபத்து நான்காவது வயதில் நியூயார்கில் காலமானார். கர்நாடக சட்டப் பேரவையில் அவருக்கு அஞ்சலி எழுதப்பட்டது. அவரது உற்ற நண்பராக இருந்த யு.ஆர்.அனந்தமூர்த்தி, "தனியொருவராகவே இருந்து கொண்டு தன் செயற்பாட்டின் வழியாகத் தமிழ் செம்மொழி என்று நிலை நாட்டினார்' என்று அஞ்சலி குறிப்பில் தெரிவித்தார். மரணத்திற்குப் பிறகு ஆங்கிலத்தில் அவரின் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
 1999-ஆம் ஆண்டில் அதற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
 (அடுத்த இதழில்
 ஓவியர் ஏ.பி. சந்தானராஜ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT