தினமணி கொண்டாட்டம்

நாட்டிய பட்டறை - குருமார்கள் எப்படி கற்றுக்கொடுக்கிறார்கள்...

DIN

கிருஷ்ண கான சபா நாட்டிய கலா மாநாட்டின் மூன்றாவது நாளில் "குரு-கூல்' என்கிற தலைப்பில் மாணவர்-ஆசிரியர் உறவு மற்றும் கற்றுக்கொடுத்தல் குறித்தும், நான்காவது நாளில் நடன விமர்சகர்கள் எவ்வாறு விமர்சிக்கிறார்கள் என்பது குறித்தும், ஐந்தாவது நாளில் நாட்டிய குருமார்கள் குழு நடனங்களை எப்படி அமைக்கிறார்கள் என்பது குறித்தும் குழு-குழுவாக அமர்ந்து விவாதித்தார்கள். அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம் "குரு-கூல்' விவாதத்தில் பிரியதர்ஷினி கோவிந்த், பிராகா பெஸ்ùஸல், ஊர்மிளா சத்யநாராயணன் இந்திரா கடம்பி, ஸ்ரீலதா, ஜெய் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்மிளா சத்யநாராயணன் 
விஞ்ஞானம் இன்று மிகவும் வளர்ந்துள்ள நிலையில் நான் சென்னையில் இருந்தாலும், எனது மாணவி அமெரிக்காவில் இருக்கும் போதும் நாங்கள் இருவரும் "ஸ்கைப்' வழியாகத் தொடர்பு கொள்கிறோம். நடனத்தை ஸ்கைப் மூலம் சொல்லிக் கொடுக்கிறேன். இது எனக்குத் தெரிந்த, மாணவிகளுக்கு மட்டுமே. நான் "ஸ்கைப்' வழியில் பாடம் நடத்த அவர்களுக்கு என்னைத் தெரிந்து இருக்க வேண்டும். எனக்கும் அவர்களை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். 
இவ்வாறு செய்தாலும் நேருக்கு நேர் கற்றுக் கொடுக்கும் முறைக்கு இது ஈடாகாது என்பதை இங்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். அதுமட்டும் அல்ல, "ஸ்கைப்' முறையில் சொல்லிக் கொடுக்கும் போது நேரில் சொல்லிக் கொடுப்பதை, விட நாம் அதிக முயற்சி மேற்கோண்டு சொல்லி கொடுக்க வேண்டி வரலாம். அப்பொழுது நாம் அதிகமாக உழைக்க வேண்டி வருகிறது. அது நம்மை மேலும் மேலும் சோர்வாக ஆக்கி விடுகிறது. ஆனாலும் மனம் மகிழ்ந்தால் போதும் இல்லையா?
பிரியதர்ஷினி கோவிந்த்
நான் குருவாக மாறிய பிறகு எனக்குத் தெரிந்ததை video வாக மாற்றி, நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று தீராத தாகத்துடன் காத்திருக்கும் மாணவ சமுதாயத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து செய்தது தான் அது. நான் குரு-சிஷ்ய பரம்பரையில் ஊறித்திளைத்தவள். இந்த மாதிரி வீடியோ அவர்களின் ஆசைகளுக்கு ஆரம்ப முயற்சியாகத் தான் இருக்குமே ஒழிய, அது அவர்கள் முழுமையாகக் கற்றுக்கொள்ளச் சிறந்த வழியாகாது. சாதனைப் புரிந்த கலைஞர்களின் வீடியோ இன்று நம்மிடம் இல்லை. அவர்கள் எப்படி நடனம் ஆடி இருப்பார்கள் என்று நமக்கு இன்றும் தெரியாது. வாய் வழி கேட்டது மட்டும் தான். சிலபேர்களுக்கு எழுத்து முறையில் இப்படி ஆடி இருப்பார்கள் என்று நாமாகக் கற்பனை செய்து பார்த்தால் தான் உண்டு. கலாநிதி நாராயணன் வீடியோ என்னைப் பொருத்தவரை உன்னதமான படைப்பு என்று சொல்வேன். அவர்கள் எப்படிச் சொல்லிக் கொடுத்தார்கள், அவர்களது முக பாவங்கள், இப்படிப் பலவழிகளில் நமக்குப் பின்னர் வரும் இளம் சந்ததியினருக்குப் படிப்பினையாக இருக்கும். Workshops எனக்குப் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வைக்கிறது. அதே போன்று நடனம் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு நல்லதொரு பாடமாகவும் இருக்கிறது. 
பிராகா பெஸ்ஸெல் 
(Bragha Bessell) 
அபிநயா-என்பது என்னுடைய வேட்கை அல்லது ஆங்கிலத்தில் சொல்வார்களே passion. அதுதான் என்னோட ஆத்ம திருப்தி என்று கூட சொல்லலாம். அபிநயம் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வயது வேண்டும். ஓரளவிற்கு நடனத்தைக் கற்றுத் தேர்ச்சி அடைந்த நிலையில் இதில் நீங்கள் கற்க ஆரம்பித்தால், ஓரளவிற்குப் புரிந்து கொண்டு, இதில் நீங்கள் ஒரு நிலையை அடையலாம். என் குரு கலாநிதி நாராயணன் எனக்கு முறையாகச் சொல்லிக்கொடுத்ததைத்தான் நான் எனது மாணவர்களுக்கும் போதிக்கிறேன். 
முக பாவங்களில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. அதை எல்லாம் நாம் கற்க பல காலம் ஆகும். நானே இன்னும் கற்றுக் கொண்டுதான் வருகிறேன் என்று கூறுவதற்கு எனக்குத் தயக்கமே இல்லை. நான் கற்றுக்கொடுப்பது நான்கு நிலைகள் அல்லது நான்கு விஷயங்களைத்தான். முதலில் பயப்படாதீர்கள். அபிநயம் என்பது முக பாவனைகள் அதாவது expression. பயப்பட்டால் சரியாக வராது. அடுத்து கேள்வி கேட்கணும். மூன்றாவது பதில் தெரியவில்லை என்றால் பல்வேறு ஆன்லைன் சைட்டுக்கு சென்று தேடி கண்டுபிடிக்கணும். கடைசியாக மனப்பாடம் செய்தல். இந்த நான்கும் சரியாகச் செய்தால், ஓரளவிற்கு நீங்கள் அபிநயத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூறலாம். 
ஜெய் கோவிந்த்
என்னிடம் பல்வேறு மாணவர்கள் பாடம் கற்க வருகிறார்கள். அவர்களுக்கு நான் கற்பிக்க அவர்கள் வீட்டிற்கு, அதாவது அவர்களின் மன வீட்டிற்குள் நான் நுழைய வேண்டும். ஒரு முறை என் வகுப்பறைக்குள் நுழையும் போது, எல்லோரும் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வந்தவுடன் என்ன? என்று கேட்டேன். "ஹாரி பாட்டர்' பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார்கள். நான் அவர்களுக்காக எல்லா ஹாரி பாட்டர் புத்தகங்களையும், படித்தும் படம் பார்த்தும் பல விஷயங்களை ரசித்தேன். அதை எப்படியெல்லாம் என் பாட திட்டத்தில் நுழைக்க முடியுமோ அதை முதலில் செய்தேன். அவர்கள் போக்கிலேயே சென்று பாடங்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்களைக் கற்க வைத்தேன். என்னைப் பொருத்தவரை இந்த வழி எனக்குச் சரியாகப்படுகிறது; சிறப்பாகவும் இருக்கிறது என்று சொல்வேன். 
ஸ்ரீலதா 
நான் எப்பொழுதுமே முன்னோக்கி செல்லும் விதமாகவே நடந்து கொள்வேன். ஒரு நடனமணி குருவாக மாறிய பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதை முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கு முற்றிலுமாக மாறிய பிறகு பழையனவற்றை மெருகேற்றிக் கொண்டு, புதிதாக வருவதை வரவேற்று அதையும் நமக்குச் சாதகமாகப் பார்த்து உபயோகித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பிரதினம் தொடங்கியதே, வெறும் நடனத்திற்கு மட்டுமல்ல. நடனமும் ஆட, இசையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர வேண்டும். 
நாட்டிய சாஸ்திரத்தை படித்துத் தெரிந்து கொள்ள, அதைச் சரியாக பின்பற்ற இப்படிப் பல்வேறு வழிகளில் குருவும், சிஷ்யரும் பிராக்டிகல் மட்டும் அல்ல தியரியும் முழுமையாகத் தெரிந்து கொண்டு அதை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையில் தான், நாங்கள் குரு சிஷ்ய பரம்பரையில் மிகவும் கட்டுப்பாடாக இருக்கிறோம். 
மாணவ மாணவிகள் எதைத் தெரிந்து கொள்வதாக இருந்தாலும் அது குருமூலமாகத்தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். எங்கள் நிறுவனம் குருவுக்கும் சரி, சிஷ்யருக்கும் சரி, எது தேவையோ அதைச் சொல்லிக் கொடுக்க வழி வகைச் செய்து, அதை வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ள உதவியாக அதை நான் வீடியோ எடுத்து வைத்து விடுகிறோம். 
மாணவிகளுக்கு எங்கள் நிறுவனம் நடத்தும் oral, written, practical, பிறகு தங்கள் எடுத்துகொண்ட project இல் VIVA ஆகியவை நடத்தி அவர்களைத் தாங்கள் செய்யும் வேலையில் நம்பிக்கை வைக்கும் அளவிற்குச் செய்கிறோம். இது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி விடுகிறது. Catch them young என்ற வாக்கியத்திற்கேற்ப எங்கள் நிறுவனம் "பிரயத்தனம்' தமிழ் நாட்டில்ஆறு இடங்களில் இருக்கிறது. 

இந்திரா கடம்பி 
எங்கள் விஷயத்தில் நாங்கள் பல்வேறு விதமான workshopகளை நடத்தியுள்ளோம். அபிநயாவிற்கு என்று பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்த workshop  ஐந்து முதல் 7 நாட்கள் வரை நடக்கும். சில ஒர்க்ஷாப்புகள் மாதக்கணக்கிலும் நடப்பது உண்டு. இதன் மூலம் மாணவிகள் தாங்கள் அறிந்ததை மெருகேற்றி கொள்ளவும், புதிதாகத் தெரிந்து கொள்ளவும் இந்த workshop வழிவகைச் செய்கிறது என்று சொல்லலாம். இவை எல்லாமே residential workshop என்று சொல்லலாம். எந்த நேரமும் மாணவிகள் என்னிடம் கேள்வி கேட்கலாம், நான் நாள் முழுவதும் அவர்களுடேனேயே இருப்பேன். இதில் நான் 6 மாணவிகளைதான் சேர்த்துக் கொள்வேன்.
அப்பொழுதுதான் அவர்களுக்கு என்னால் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடியும். காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் இது, இரவு ஏழுமணி வரைக்கும் கூடப் போவதுண்டு. காலையில் யோகாவுடன் ஆரம்பிக்கும். ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்ற முறையில் பல்வேறு விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இதனால், அவர்களின் மனசு விசாலமடைகிறது. தெரிந்ததைப் பிழைன்றி தெரிந்து கொள்ள ஏதுவாகிறது. கற்றதை மேடையில் அப்படியே செய்ய நான் சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்கள் கற்றதை, அவர்களது திறனுக்கு ஏற்றவாறு மாற்றி, அல்லது புதியவைகளைச் சேர்த்துச் செய்ய அவர்களை ஊக்குவிப்போன். இந்த residential நடனப்பள்ளி இதற்கெல்லாம் அவர்களுக்குத் துணை நிற்கிறது.
தொகுப்பு: 
எஸ்.ஆர். அசோக்குமார்
படங்கள்: யோகா
அடுத்த இதழில்;
1.நடனமாட கலைஞரைத் 
தேர்வு செய்யும் விதம்.
2.நாட்டிய விமர்சனம் எவ்வாறு எழுதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT