தினமணி கொண்டாட்டம்

செயலி உருவாக்கிய பிளஸ் 2 மாணவர்

க. தங்கராஜா

இது கணினி தொழில்நுட்பத்தின் காலம். செயற்கை நுண்ணறிவுடன் மனிதர்களைப் போலவே பகுத்தாயும் கணினிகள் கைக்குள் வந்துவிட்டன.

இணையமும் செல்லிடப்பேசிகளும் மனிதர்களை கட்டியாளத் தொடங்கிவிட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடம்பர பொருளாக இருந்த செல்லிடப்பேசிகள் தற்போது அத்தியாவசியப் பொருளாகிவிட்டன. சாலை வசதி சென்றடையாத குக்கிராமங்களைக் கூட ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் சென்றடைந்துவிட்டன.

அன்றாட வாழ்க்கையில் பெரும்பகுதி நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் செல்லிடப்பேசிகளில் உள்ள மென்பொருள் நிரல்களான செயலிகள், மனித வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன என்றே கூறலாம். இதனால் கணினி உலகம் இப்போது செயலிகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. முகநூல், மெசஞ்சர், இன்ஸ்ட்ராகிராம், கட்செவி அஞ்சல் என அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் தொடங்கி, செய்திகள், பொழுதுபோக்கு, அளவளாவுவது, தொழில்கள், வியாபாரம், சமையல் முதலான கலைகளைக் கற்பது, கரோனா தடுப்பு வரையிலான எல்லாவற்றிலும் செயலிகளின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டில் இருக்கும் நிலையில், தொழில்நுட்பப் பணியாளர்களில் "ஆப் டெவலப்பர்கள்' எனப்படும் செயலி வடிவமைப்பாளர்களுக்கு இப்போது மவுசு அதிகரித்துள்ளது. லட்சங்களில் ஊதியம் கொடுக்கும் பணி என்பதால் செயலி வடிவமைப்பு மீது ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இளம் வயது முதலே கணினி மீதான பற்றினால் பிளஸ் 2 பயிலும்போதே செயலி வடிவமைப்பாளராகியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த சஞ்சய்குமார். கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் - பாண்டி பிரியா தம்பதியரின் மகனான இவர், உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 கணினி பயன்பாட்டியல் பயின்றுவருகிறார்.

மோட்டார் பம்ப் தொழிலில் ஈடுபட்டிருக்கும் செந்தில்குமார், தனது மகனின் கணினி ஆர்வத்தை அறிந்து அவருக்கு மடிக்கணினி வாங்கிக்கொடுத்துள்ளார். இணையதளங்களில் தொடர்ந்து செயலி உருவாக்கம் குறித்து படித்து வந்த சஞ்சய்குமார் தனது முதல் முயற்சியில் உருவாக்கியிருப்பது செக்யூர் மெசஞ்சர் எனப்படும் கட்செவி அஞ்சலைப் போன்ற ஒரு செயலியை.

தனது படைப்பு குறித்து சஞ்சய்குமாரிடம் பேசினோம்:

""சிறு வயது முதலே கணினி, செல்லிடப்பேசி மீது எனக்கு ஆர்வம் அதிகம். தொடர்ந்து செயலி உருவாக்கம் குறித்து கணினியில் படித்து வந்த எனக்கு கரோனா பொது முடக்க விடுமுறைக்காலம் செயலி உருவாக்கத்துக்கான வாய்ப்பை வழங்கியது. கட்செவி அஞ்சல் எனப்படும் வாட்ஸ் ஆப் பயன்பாடு அபரிமிதமாக இருக்கும் நிலையில், அதைப் போன்றே ஆனால் யாராலும் தகவலைத் திருட முடியாத பாதுகாப்பான செயலியை உருவாக்க முடிவு செய்தேன்.

அதன்படி ஒருவருடனோ, பலருடனோ பேசிக் கொள்வது, விடியோ அழைப்பு செய்வது, ஃபைல்கள், திரைப்படங்கள், பாடல்களை பரிமாறிக்கொள்வது என பல்வேறு வசதி கொண்ட செயலியை உருவாக்கினேன். தற்போது எனது செயலியை ஃப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் எனது செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். வி.பி.என் இல்லாமலேயே வெளிநாட்டில் இருப்பவர்களுடன் பேசிக் கொள்ள முடியும் என்பதுடன் நாளொன்றுக்கு ஒருமுறை வெரிபிகேஷன் கோட் இருந்தால் மட்டுமே இந்த செயலியைப் பயன்படுத்த முடியும் என்பதும் இதன் சிறப்பம்சங்கள். இதை ஹேக் செய்வது கடினம் என்பதால் பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டு செயலிகள் பாதுகாப்பு விஷயத்தில் நம்பகத்தன்மை இல்லாதவை என்பதால் உள்நாட்டு செயலிகள் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. எனது திறமையைக் கண்டு கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இப்போதே வேலைவாய்ப்பு தேடி வந்துள்ளது. அடுத்த திட்டமாக ஜூம் செயலியைப் போல எளிமையான, கூடுதல் நபர்கள் பங்கேற்கக் கூடிய செயலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்.

கரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால் மாணவ-மாணவிகள் ஆன்லைனில் கல்வி கற்க வசதியாக இந்த புதிய செயலியை மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். எனது ஆன்லைன் கல்விக்கு இடையே அடுத்த கண்டுபிடிப்புக்கான பணியையும் தொடர்ந்து வருகிறேன்'' என்கிறார் சஞ்சய்குமார்.

படம்: வீ.பேச்சிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT