தினமணி கொண்டாட்டம்

கவித்துவம் பிறந்தது கங்கைக்கரையினிலே!

DIN

சின்னசாமி சுப்ரமணிய அய்யருக்கும், லெட்சுமி அம்மாளுக்கும் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் எட்டயபுரத்தில் சுப்பையா என்ற ஒரு வீர மகவு பிறந்தது. அன்றைய நிலையில் ஏதோ வந்த வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தது அந்த குடும்பம். வாழ்க்கை ஒரே சீராகச்சென்றால் எப்படி? ஐந்து வயது பாலபருவத்தில் சுப்பையா தன் தாயை இழந்ததால்; குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. 1897-ஆம் ஆண்டு செல்லம்மாள் என்ற  மாதரசியை, இவர் தந்தை மணம் செய்து வைத்தார்.  அதே 1897-ஆம் ஆண்டு;சுப்பையாவின்  தந்தையும் மறைந்தார்.

துக்கம் விசாரிக்க வந்த அவரது தாய் மாமா  கேதார்நாத் சிவனின் அழைப்பின் பேரில் அவருடன் சுப்பையா வாரணாசி சென்றார். அங்கு ஹனுமான் காட் என்ற இடத்தில் தற்போதுள்ள சங்கர மடத்திற்கு எதிரில் சிவமடம் என்ற ஒரு நிர்வாகத்தில் அவரது மாமா வாழ்ந்து வந்தார். கற்றலின் மீதுள்ள காதலால் மாமாவின் அறிவுறுத்தலின் பேரில், டாக்டர் மதன் மோகன் மாளவியாவினால் தோற்றுவிக்கப்பட்ட பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில்; ஏற்கெனவே 8 -ஆம் வகுப்பு வரை படித்திருந்த பாரதி, 11-ஆவது வகுப்பு வரை அங்கு படித்தார். இங்கு பல மொழிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவரது விருப்பப் பாடமாக சம்ஸ்கிருதம் இருந்தது.

அவருக்கு பன்மொழி வித்தகர்கள் பலரது பழக்கம் இங்கு தான் ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் அரபிக் ஆகிய மொழிகளில் படிக்கவும், பேசவும் தெரிந்து கொண்டார். ஒரு சீக்கிய நண்பரின் பழக்கத்தால் தலைப்பாகை கட்டுவதை ஆரம்பித்தார். பல மொழிகளைக் கற்றதன் தாக்கமே, "யாமறிந்த மொழிதனிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று ஆணித்தரமாக பாரதி என்ற சுப்பையா பாடினார். பாரதி, ஹனுமான் காட் படித்துறையில் அமர்ந்து கொண்டு கங்கையையும் அங்கு எரிக்கப்படும் பிணங்களையும் கண்டு வியந்து தன்னை அறியாமல் முதன்முதலில் பாடல்கள் புனையத் தொடங்கியுள்ளார். 

அவர் வாரணாசியில் வசித்த அந்த வீட்டில் அவரது மாமா வழி உறவினர்  பேராசிரியர் கே.வி. கிருஷ்ணன்  தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். தென்னகத்திலிருந்து வரும் யாத்திரிகர்கள் பாரதி வாழ்ந்த வீட்டை ஆவலாய் பார்க்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார். 1898 முதல் 1901 வரை காசியில் வாழ்ந்து பின் எட்டயபுரம் திரும்பி;  சமஸ்தானத்தின் கவியாக சேர்ந்தார். பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அவரது வீரமிகு சுதந்திரப்பாடல்கள் இதற்குப்பின் தான் மடைதிறந்த வெள்ளம்போல் வந்தது. 

வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி அவரது நினைவு நாள் வருகிறது. இவரைப் போன்ற பலரது தியாகத்தில் நாம் பெற்ற சுதந்திரக் காற்றின் மகிமையைத் தெரிந்து அவர்களது புகழினை போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT