தினமணி கொண்டாட்டம்

திருக்குறள் சகோதரிகள்..

DIN

உலகில் வாசிப்பு பழக்கம் குறைந்து, பெரும்பாலானோர் கைப்பேசியில் மூழ்கிக் கிடைக்கும்போது, 1330 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவித்து, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளனர் சகோதரிகள் அன்பரசி, அஞ்சலிதேவி.

மதுரையை அடுத்த மேலூர் அருகேயுள்ள உறங்கான்பட்டியைச் சேர்ந்த ஆ.சிவராமலிங்கம் - சி. நிர்மலா தம்பதியின் மகள்கள்தான் இவர்கள். உறங்கான்பட்டியில் 'திருக்குறள் சகோதரிகள் வீடு எது' என்று யாரை கேட்டால் போதும், வழியைச் சொல்லிவிடும் அளவுக்குப் பிரபலம்.

பதிமூன்று வயதான அன்பரசி அரசு மேல் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பும், பதினோரு வயதாகும் அஞ்சலிதேவி ஆறாம் வகுப்பிலும் படித்து வருகிறார்.

அவர்களிடம் பேசியபோது:

''சிறு வயது முதலே மூதுரை, நல்வழி, ஆத்திச் சூடி, கந்தர் அனுபூதி, அபிராமி அந்தாதி, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, அபசரரமண மாலை, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பாடல்களை எனது தந்தை சொல்லிக் கொடுத்தார். அருணகிரிநாதர் பாடிய 'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சக்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும்.. என்ற பாடலையும் மனப்பாடமாகப் பிழை இல்லாமல் சொல்லவைத்தார். திருக்குறள், அதன் பொருளையும், அவ்வையாரின் நல்வழி வெண்பாக்களைப் பொருளுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட அளவில் நடத்தும் 1,330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் போட்டியில், மதுரை மாவட்டத்தில் ஐந்து மாணவிகள் கலந்து கொண்டோம். நாங்கள் இருவர்தான் 1,330 திருக்குறள்களைச் சொல்லி முடித்தோம். அனைத்துத் திருக்குறள்களை ஒப்புவிக்க இரண்டரை மணி நேரம் பிடித்தது. நடுவில் தண்ணீர் குடிக்க அனுமதி உண்டு.

இலங்கை ஜெயராஜின் திருக்குறள் உரையை 'யூடியூப்' வாயிலாக, தினமும் கேட்டபோது, 'ஆன்மிகமும் அறமும் இல்லாத கல்வியால் செல்வம் சேரலாம். ஆனால், நிறைவான வாழ்க்கை அமையாது' என்பதை புரிந்து கொண்டோம். இப்படி பல ஆன்மிக நூல்களை மனப்பாடம் செய்தோம்.

கோயில்களில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றது ஊக்கமடைய செய்தது. மேடைகளில் சமயச் சொற்பொழிவு நிகழ்த்த பயிற்சி பெற்று வருகிறோம்'' என்றார்.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

10 படங்களுக்குமேல் நடிப்பேன் என நினைக்கவில்லை: 100-ஆவது பட விழாவில் மனோஜ் பாஜ்பாயி!

ராயன் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT