முகப்பு
இளைஞர்மணி

மருத்துவ துறையில் அதிக வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவத் துறையில் அதிக அளவில் புதிய பணியிடங்கள் உருவாகியிருப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:48 PM
பகிர்:

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவத் துறையில் அதிக அளவில் புதிய பணியிடங்கள் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக விருந்தோம்பல் துறையில் அதிக அளவில் புதிய பணியிடங்கள் உருவாகியுள்ளன. பிரபல மனிதவள நிறுவனமான "மா ஃபா' நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கல்வி நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவம் உள்ளிட்ட 11 துறைகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

Advertisement

ஏப்ரல் - ஜூன் மாதம் வரை நடத்திய ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டது. இதில் மருத்துவத் துறையிலும், அதற்கு அடுத்தபடியாக விருந்தோம்பல் துறையிலும் அதிக அளவில் காலிப் பணியிடங்கள் கொட்டிக்கிடப்பது தெரியவந்துள்ளது.

நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் குறித்த விவரம்:

மருத்துவம்: இந்தியாவில் மருத்துவம் மற்றும் அது தொடர்பான துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் 23 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா மீண்டிருப்பது, மருத்துவத் துறையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

அதிக அளவில் தனியார் மருத்துவமனைகள், அதிநவீன மருத்துவமனைகள் என வேகமாக வளர்ந்து வரும் இத்துறையில், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க உள்ளன.

துறையின் வளர்ச்சி காரணமாக பணியிடங்களின் எண்ணிக்கை 4.77 சதவீதம் கூடுதலாக உள்ளது. அதாவது 1.61 லட்சம் புதிய பணியிடங்கள் இத்துறையில் உருவாக உள்ளன.

விருந்தோம்பல் துறை

உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய விருந்தோம்பல் துறை, 2009 டிசம்பர் மாதம் முதல் எழுச்சி கண்டுள்ளது. மீண்டும் முன்பைப்போல இத்துறை வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-11 மத்திய பட்ஜெட்டில் இத்துறை முதலீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகை, இத்துறை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளித்துள்ளது. இத்துறையில் இப்போது 80 ஆயிரம் புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை

குடிசைப் பகுதி மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தியிருப்பது மற்றும் பல்வேறு திட்டங்களின் காரணமாக 2010-11-ம் ஆண்டு கட்டுமானத் துறை வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வீடு மற்றும் நிலத்தின் மீது முதலீடு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் இத்துறைகளில் 61 ஆயிரம் புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுதொடர்பான துறை

தகவல் தொழில்நுட்பத் துறையை பொருத்தவரை சர்வதேச அளவில் மட்டும் அல்லாமல் உள்ளூரிலும் தேவை அதிகரித்து வருவதால், இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

2010-ம் ஆண்டுக்குள் இத்துறை 15.5 சதவீத வளர்ச்சி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இத்துறையில் 41,200 கூடுதல் பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

கல்வித் துறை

உலகிலேயே அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும் 13.5 கோடி குழந்தைகள் படிக்கின்றனர்.

இத்தனை கோடி இளைஞர்களுக்கு உயர் கல்வியை அளிக்க, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களின் தேவை

அதிகரித்திருப்பதோடு, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் காரணமாக இத்துறையில் அதிக அளவில் பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இப்போது இத்துறையில் 39,400 புதிய பணியிடங்கள் உருவாகியுள்ளன.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா மீண்டு வரும் நேரத்தில், விளம்பரத்துக்காக பல்வேறு துறைகள் செலவிடுவதும் அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை 13 சதவீத வளர்ச்சி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்துறையில் இப்போது 39 ஆயிரம் கூடுதல் பணியிடங்கள் உருவாகும் என தெரிகிறது.

இதுபோல் இயந்திர பாகங்கள் அல்லாத உற்பத்தித் துறையில் 26,600 கூடுதல் பணியிடங்களும், மருந்து தயாரிப்புத் துறையில் 12 ஆயிரம் கூடுதல் பணியிடங்களும், எரிசக்தித் துறையில் 10,100 கூடுதல் பணியிடங்களும், இயந்திர பாகங்கள் உற்பத்தித் துறையில் 8,400 கூடுதல் பணியிடங்களும் இப்போது உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் "மா ஃபா' நிறுவன ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.