கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனிங்கில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
கணினித் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ள பகுதி கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனிங் ஆகும். கணினி வரைகலை என்ற சொல்லப்படும் இந்தத் துறையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.
கணினித் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ள பகுதி கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனிங் ஆகும். கணினி வரைகலை என்ற சொல்லப்படும் இந்தத் துறையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமல்லாது, வெüõநாடுகளிலும் வேலை வாய்ப்பும், வெளிநாடுகளுக்காக இங்கிருந்தே வேலைகளைச் செய்து கொடுக்கும் வாய்ப்பும் தற்போது பெருகி வருகிறது.
அச்சு, புகைப்படம், பதாகைகள் உருவாக்கம், விளம்பரம், புத்தகப்பதிப்பு - போன்ற பல்வேறு துறைகளுக்கு அடிப்படையாக விளங்குவது கணினி வரைகலையாகும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் கணினி தொழிநுட்பத்தில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி அச்சுத்துறையை புரட்டிப் போட்டது.
கணினிப் பயிற்சி என்பது பல்வேறு நிலைகளில், தரத்தில், தன்மைகளில் உள்ளதாக வடிவெடுத்துவிட்டது. எல்லா கணினிப் பயிற்சிகளும் ஒன்றுபோல கிடையாது. அந்த வகையில் கணினி வரைகலை என்பதைப் பழகுவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்பன இரண்டு மட்டுமே - 1. அடிமனதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், 2. ஆங்கில தட்டச்சுப் பயிற்சி. கல்வித் தகுதி என்பது தடை அல்ல. குறிப்பாக தற்போது கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தவர்கள் முழுமையாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் இந்தப் பகுதி மாறியும் வருகிறது. இதுவரை காகிதத்தில் எழுதுவது, வரைவது போன்ற வேலைகளைச் செய்து வந்தோம். அவற்றை கணினி வழியாக செய்வதே கணினி வரைகலை என்பதாகும். இதற்கான மென்பொருட்கள் நிறைய வந்துவிட்டன.
அடிப்படையாகக் குறைந்தது மூன்று மென்பொருட்களை பழகினால் போதும். பக்க வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளை (லேஅவுட்) செய்வதற்காக இன்டிசைன், படங்கள் வரைவதற்காக இல்லஸ்ட்ரேட்டர், புகைப்படங்களை சரிசெய்வது உள்ளிட்ட பல பணிகளுக்காக போட்டோஷாப் - இந்த மூன்று மென்பொருட்களில் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் வேலை உறுதி என்று கூறலாம்.
அச்சகங்கள், இதழ்கள், நாளிதழ்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கணினி வரைகலை வடிவமைப்பு, ஸ்டூடியோக்களில் புகைப்படப் புனரமைப்பு உள்ளிட்ட பல பணிகள், பதாகைகள் உருவாக்கத்தில் வடிவமைப்பு, இதழ்கள் உள்ளிட்டவற்றிற்கு விளம்பரங்கள் வடிவமைப்பது, உருவாக்குவது, புத்தகங்களுக்கான அட்டைப்படம் முதல் அனைத்தும் வடிவமைத்து உருவாக்குதல் என்று பல்வேறு பணிகள் செய்வதற்கு ஏராளமான கணினி வரைகலைஞர்கள் தேவைப்படுகின்றனர்.
மேலும் திருப்பூர் போன்ற நகரங்களில் வளர்ந்த நிலையில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்புகளில் கணினி வரைகலைஞர்களின் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. டெக்ஸ்டைல் டிசைனிங் பகுதியின் அடிப்படையாக நிறைய மென்பொருட்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. குறிப்பாக டி ஷர்ட் போன்றவற்றின் மேல் அச்சிடத் தேவையான படங்கள் இல்லஸ்ட்ரேட்டர் என்ற மென்பொருள் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் செயல்பட தகுதிவாய்ந்த, திறமையான கணினி வரைகலைஞர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். அத்துடன் தற்போது மிகப் பெரிய அளவில் பரவி வரும் மின்னூல் உருவாக்கம் (இ-புக் பப்ளிஷிங்), மின் விண்ணப்பங்கள் உருவாக்கம் போன்ற பல பகுதிகளுக்கு இவையே அடிப்படையாகும்.
மேலே சொன்ன துறைகளுக்கு அடுத்தபடியாக கணினி வரைகலைஞர்களின் தேவை அதிகமாக உள்ள பகுதி, வலைதளப் பக்க வடிவமைப்புப் பகுதியாகும். வெப் டிசைனிங் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதியில் சுயதொழில் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடைகாரர் கூட தற்போது ஒரு வலைதளப்பக்கம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அந்த வலைதளப்பக்கத்தை வடிவமைப்பது, ஆண்டு முழுவதும் பராமரிப்பது, இற்றைப்படுத்துவது (UPDATE) போன்ற பணிகளைச் செய்து கொடுக்க நிறைய நிறுவனங்கள் தோன்றி வருகின்றன.
இவற்றைப் பழகுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் கணினி பயிற்சிப் பள்ளிகளில் மிகுந்த கவனம் தேவை. எல்லா கணினி பயிற்றுநர்களாலும் இந்த மென்பொருட்களைச் சொல்லிக் கொடுக்க முடியாது. துறைசார்ந்த பட்டறிவுமிக்க பயிற்றுநர்கள் உள்ள பயிலகங்களில் மட்டுமே சேர்ந்து இந்த மென்பொருட்களைப் பயில வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பைத் தொடர முடியாதவர்கள் இந்தக் கணினி வரைகலையில் பயிற்சி எடுத்து உடனடியாக வேலை வாய்ப்பைப் பெறலாம். அல்லது பட்டம் பெற்ற பிறகும் இந்தப் பகுதிக்கு வரலாம்.
இது எவ்வளவு நபர்கள் வந்தாலும், அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வேலை கிடைக்கக்கூடிய துறையாக மாறியுள்ளது.