தண்ணீரை உறிஞ்சும் கான்கிரீட் சாலை!
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வெள்ளக் காடாக்கியது. லேசாக மழை பெய்தாலே முழுங்கால் அளவு தண்ணீர் தேங்கிவிடும் சாலைகளில் இப்போது தோள் உயரத்துக்கு வெள்ள நீர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வெள்ளக் காடாக்கியது. லேசாக மழை பெய்தாலே முழுங்கால் அளவு தண்ணீர் தேங்கிவிடும் சாலைகளில் இப்போது தோள் உயரத்துக்கு வெள்ள நீர்.
குண்டும் குழியுமான மழை வெள்ளம் தேங்கிய சாலைகளில் நடப்பதற்கு, வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு தடுமாறியவர்கள் ஏராளம்.
பல ஊர்களுக்குச் செல்லக் கூடிய சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. பல ஊர்கள் தீவுகளாகி விட்டன.
மழை வெள்ளம் வடிந்த பின்பு சாலைகள் சாலைகளாக இல்லாமல் மேடும் பள்ளமுமாகப் போய்விட்டன. இந்தச் சாலைகளைச் சரி செய்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று யாருக்கும் தெரியாது.
இதற்கு என்ன காரணம்? என்று யாரைக் கேட்டாலும் சாலைகள் சரியில்லை. சாலைகளை நன்றாகப் போடவில்லை என்றுதான் சொல்வார்கள்.
ஆனால் இங்கிலாந்தில் உள்ள பஅதஙஅஇ என்ற கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம் புதிய வகையிலான கான்கிரீட் கலவை ஒன்றைத் தயாரித்து உள்ளது. இந்தக் கலவையைக் கொண்டு போடப்படும் சாலைகளில் எவ்வளவு தண்ணீரை ஊற்றினாலும் நிற்காது.
வியப்பாக இருக்கிறதா?
ஆம். ஒரு நிமிடத்தில் சுமார் 3330 லிட்டர் தண்ணீரை இந்தச் சாலை உறிஞ்சிவிடுகிறது. அப்படியென்ன இந்தக் கான்கிரீட்டில் என்கிறீர்களா?
தண்ணீரை உறிஞ்சக் கூடிய இந்தக் கான்கிரீட் சாலையின் அடிப்பகுதியில் பெரிய கூழாங்கற்கள், உடைந்த சல்லிகள் வடிவிலான கான்கிரீட் துண்டுகள் நிறையப் போடப்பட்டுள்ளன.
சாலையில் தண்ணீரைக் கொட்டியதுமே அது சர்ரென்று கீழ் நோக்கி உறிஞ்சப்பட்டு, இடைவெளி அதிகமுள்ள கூழாங்கற்கள் வடிவிலான கான்கிரீட் பகுதிக்குச் சென்றுவிடுகிறது. அதாவது ஒரு நிமிடத்தில் சுமார் 3330 லிட்டர் தண்ணீர் சாலையின் அடிப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. அதனால் சாலையில் தண்ணீர் தேங்குவதில்லை.
அதெல்லாம் சரி... அப்படிச் சாலையின் அடிப்பகுதிக்குச் சென்ற தண்ணீர் சாலைக்கு அடியில்தானே தேங்கும்? ஒரு பத்து நிமிடம் மழை பெய்தால் அப்புறம், வழக்கமான கதையாக சாலையில் நீர் தேங்கிவிடுமே? என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி நியாயமானது.
அப்படித் தண்ணீர் தேங்கிவிடாமல் தடுக்க, சாலையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிட்ட தண்ணீரைச் சாக்கடையில் அல்லது நீர் செல்லும் கால்வாய்களில் கலக்குமாறு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சாக்கடை வசதி, கால்வாய் வசதி இருந்தால் சாலையில் எதற்குத் தண்ணீர் தேங்கப் போகிறது? தானாகவே கால்வாய் வழியாக கடலுக்குச் சென்றுவிடுமே? என்ற அடுத்த கேள்விக்கு
இந்தக் கான்கிரீட் கலவையை உருவாக்கியவர்கள் சொல்கிறார்கள்:
""நடைபாதையில், சைக்கிள் செல்லும் பாதைகளில், கார் நிறுத்துமிடங்களில், பெட்ரோல் பங்க்குகளில் எல்லாம் சாதாரணமாகத் தண்ணீர் தேங்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் எல்லாவற்றிலும் நேரடியாகச் சாக்கடை இணைப்பைக் கொடுத்துவிட முடியாது. இந்தக் கான்கிரீட் சாலைகள் அப்படிப்பட்ட பகுதிகளில் மிகவும் பயன்படுகின்றன'' என்கிறார்கள்.