முகப்பு
இளைஞர்மணி

"தீம்' போட்டோகிராபி!

ஒர் இளம் வயது ஆண் சைக்கிள் ஓட்ட, பின் அமர்ந்து செல்லும் இளம்பெண். சுண்ணாம்பு அடிக்கப்படாத காரை உதிர்ந்த கிராமத்து வீட்டின் முன்பு குழந்தைகளுடன் சிரித்து விளையாடும் பெண். ஊட்டி மலையில் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் இளம் ஆணும், பெண்ணும். கிதார் வாசிக்கும் பெண்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

ஒர் இளம் வயது ஆண் சைக்கிள் ஓட்ட, பின் அமர்ந்து செல்லும் இளம்பெண். சுண்ணாம்பு அடிக்கப்படாத காரை உதிர்ந்த கிராமத்து வீட்டின் முன்பு குழந்தைகளுடன் சிரித்து விளையாடும் பெண். ஊட்டி மலையில் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் இளம் ஆணும், பெண்ணும். கிதார் வாசிக்கும் பெண். இவற்றைப் பார்க்கும் யாரும் இது ஏதோ ஒரு திரைப்படக் காட்சித் தொகுப்பு என்றுதான் நினைப்பார்கள். ஆனால், இது ஒரு திருமண ஆல்பம்.

நகரத்து மணமக்கள் கிராமத்துத் தெருக்களுக்குப் போனது எப்படி? ஊட்டி மலைச்சாரலில் உலா வந்தது எப்படி? என்றெல்லாம் கேட்கலாம். ஏதாவது கிராபிக்ஸ் வேலையோ என்று கூட நினைக்கலாம். ஆனால், உண்மையில் நடந்ததைத்தான் படம் பிடித்து ஆல்பம் ஆக்கியிருக்கிறார் ஒருவர்.

சென்னை பொழிச்சலூரில் "ழ' போட்டோகிராபி என்ற பெயரில் ஸ்டுடியோ வைத்திருக்கும் பாரதிதாசன் தான் இந்த வித்தியாசமான முயற்சிகளின் சொந்தக்காரர்.

""செல்போன்களில் புகைப்படம் எடுக்கும் வசதி வந்துவிட்ட பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் நிறையப் புகைப்படக் கலைஞர்கள் உருவாகிவிட்டனர். புகைப்படம் எடுப்பது சாதாரணமாகிவிட்ட சூழ்நிலையில், புகைப்படக் கலைஞர்கள் தொழிலில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும். அந்த எண்ணத்தில் உருவானதுதான் "தீம்' போட்டோகிராபி'' என்கிறார் பாரதிதாசன்.

பாரதிதாசன் படித்தது பிரிண்டிங் அண்ட் மீடியா என்ஜினியரிங். ஆங்கிலப் பத்திரிகை நிறுவனமொன்றில் புரொடக்ஷன் சூப்பர்வைஸர் வேலை. கை நிறையச் சம்பளம். இருந்தும் புகைப்படக்கலையில் இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டார்.

""புகைப்படத் தொழிலில் சிறப்பாக செயல்பட ஒருவர் நினைத்தால் முதலில் அந்தத் தொழிலை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்தே புகைப்படக் கலையில் எனக்கு ஆர்வம் இருந்தது. பலவிதமான கேமராக்களில் படம் எடுத்து அனுபவரீதியாக நான் பயிற்சி பெற்றிருந்தாலும், முறையாகப் புகைப்படக்கலையைக் கற்றுக் கொண்டேன். "அட்வான்ஸ்டு டிஎஸ்எல்ஆர் போட்டோ கிராபி கோர்ûஸ' ஆம்பிஷன்ஸ் புகைப்பட பயிற்சி நிலையத்தில் முறையாகப் பயின்றேன்.

திருமணம் என்றால் வழக்கமாக திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் எடுப்பார்கள். அதையே கிரியேட்டிவாக புகைப்படம் எடுக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். அப்போதுதான் மணமக்களுக்குப் பிடித்த மாதிரி, ஏதாவது "தீம்' ஒன்றைத் தேர்ந்தெடுத்து புகைப்படம் எடுத்தால் என்ன என்று தோன்றியது. உதாரணமாக கிராமத்துப் பின்னணியில், கிராமத்து மணமக்களைப் போல, நகர்ப்புறத்தின் நவநாகரிக மணமக்கள் தோற்றமளிக்க விரும்புகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும். இது கிராமத்து "தீம்'. இதைப் போல ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்குச் சென்று படம் எடுப்பது, மிகவும் ஆடம்பரமான பின்னணியில் படம் எடுப்பது என பல "தீம்' களை உருவாக்கி, திருமணத்துக்குப் புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன்.

இதை என்னுடன் மணிப்பாலில் கல்லூரியில் படித்த பத்மினியிடம் பகிர்ந்து கொண்டேன். அவருடைய திருமணம் திருப்பதியில் நடந்தது. எனது "தீம்' ஐடியாவுக்கு முதன்முதலில் உயிர் கொடுத்தவர் அவர்தான்'' என்கிறார் பாரதிதாசன்.

தாலி கட்டும்போது மூன்று முடிச்சுப் போடுவதை, அதுவும் மணமகளின் கழுத்தின் பின்புறத்தில் - மிகவும் குளோஸ்-அப் இல் புகைப்படம் எடுத்திருந்தார் பாரதிதாசன்.

""புகைப்படம் எடுக்கும் கலையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், புகைப்படம் எடுப்பதற்கு முன்பு எதையும் திட்டமிட வேண்டும். தாலி கட்டுவதைக் குளோஸ்- அப் எடுக்க வேண்டும் என்றால், திடீரென்று ஓடிச் சென்று மணமக்களின் பின்புறமிருந்து புகைப்படம் எடுத்துவிட முடியாது. எனவே முன்னதாகவே அதற்கு எல்லாரிடமும் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும். புகைப்படம் எடுப்பதற்கு முன்பு எப்படி எடுக்கப் போகிறோம் என்று சினிமா ஸ்கிரிப்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு நிகழ்ச்சியும் விடுபட்டுப் போகாது.

"தீம்' போட்டோகிராபியைப் பொறுத்தவரை, மணமகன், மணமகள் இருவரிடமும் நன்கு பேசி, இருவரின் விருப்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். கிராமத்து "தீம்' என்றால், மணமகன்,மணமகள் உடைகள், அணியும் நகைகள், செருப்பு போன்றவை எல்லாம் கிராமத்து மனிதர்கள் அணிவதைப் போல இருக்க வேண்டும். எனவே திட்டமிடுதல் மிகவும் முக்கியம்'' என்கிறார். அவருடைய புகைப்பட நிலையத்தின் பெயர் "ழ' போட்டோ கிராபி. வித்தியாசமான பெயருக்கு என்ன காரணமாம்?

""புகைப்படத் தொழில் என்றில்லை எந்தத் தொழிலும் நிறையப் போட்டிகள். போட்டியில் நாம் தனியாகத் தெரிய வேண்டும். அதற்கு வித்தியாசமான பெயர் வைப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் எல்லாரும் திரும்பிப் பார்ப்பார்கள்.

அப்புறம் புகைப்படக் கலையில் எந்தத் துறையில் புகைப்படம் எடுக்கப் போகிறோமோ, அந்தத் துறை சார்ந்து எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பைத் தயார் செய்ய வேண்டும். அதைப் பார்த்துவிட்டுத்தான் நமக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். அதற்கடுத்து ஒருவர் மட்டுமே இந்த "தீம்' போட்டோகிராபியைச் செய்துவிட முடியாது. புகைப்படம் எடுப்பதில் நல்ல திறமையுள்ள ஒரு சிலரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உயர்தரமுடைய நல்ல கேமிரா, லென்ஸ்கள் எல்லாம் வேண்டும். குறைந்தது ரூ.4 லட்சம் இதற்காகவே தேவைப்படும்'' என்கிறார் பாரதிதாசன்.

பாரதிதாசன் திருமணத்துக்கு மட்டும் போட்டோ எடுப்பதில்லை. இன்டஸ்டிரியல் போட்டோ கிராபி, கார்ப்பரேட் போட்டோகிராபி, ஸ்ட்ரீட் போட்டோகிராபி, உணவு போட்டோகிராபி, கிட்ஸ் போட்டோகிராபி, மாடலிங் போட்டோகிராபி என எல்லாவிதமான போட்டோக்களையும் எடுக்கிறார். கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்த இவருடைய புகைப்பட ஆல்பத்துக்காக 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்ட்ரீட் போட்டோகிராபிக்கான சர்வதேச விருது இவருக்குக் கிடைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →