அரசுப் பணியை எளிதில் வெல்லலாம்!
என்னதான் தனியார் துறையில் சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், இளைஞர்களிடையே அரசுப் பணி குறித்த மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. அதனால்தான் 1,000 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டால், லட்சக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பிக்கின்றனர்.
என்னதான் தனியார் துறையில் சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், இளைஞர்களிடையே அரசுப் பணி குறித்த மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. அதனால்தான் 1,000 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டால், லட்சக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பிக்கின்றனர்.
இப்படி விண்ணப்பிப்பவர்களில் எத்தனை பேர் கடினமாக உழைத்து தேர்வில் தேறி, அரசுப் பணி பெறுகின்றனர் என்பது வேறு விஷயம். ஆனால், கடும் போட்டி நிலவி வருவது என்னவோ உண்மை.
இந்தப் போட்டியைச் சமாளித்து வேலை பெறுவதென்பது மிகவும் எளிதான பணியே என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற மிகப்பெரிய புத்திசாலியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. சராசரியான புத்திசாலித்தனமுடைய - கடின உழைப்பாளியாக இருந்தாலே போதுமானது. மத்திய அரசுப் பணி, வங்கிப் பணி தவிர்த்து, தமிழக அரசில் பணி பெறுவது மிகவும் எளிது. மத்திய அரசுப் பணி, வங்கிப் பணிக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி அறிவும், நல்ல கணித அறிவும் தேவை. ஆனால் தமிழக அரசில் வேலை பெற நல்ல தமிழறிவும், சராசரி மனிதனுக்குத் தேவையான பொது அறிவும் இருந்தால் மட்டுமே போதும்.
ஏனெனில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 1 தேர்வைத் தவிர, ஏனைய குரூப் 2, 3, 4, வி.ஏ.ஓ. போன்றத் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் பெரிதாக ஒன்றும் மாற்றமிருக்காது. ஏதேனும் ஒரு தேர்வுக்காக நாம் தயாரிப்பது, மற்றொரு தேர்வுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் வேண்டாம்.
இந்தத் தேர்வுகளை எடுத்துக் கொண்டால், நாம் எதையும் புதிதாகப் படிக்கப் போவதில்லை. சிறுவயதில் நாம் பள்ளியில் படித்த அதே பள்ளிப் பாடங்களை, அதாவது 6ஆம் வகுப்பில் படித்ததில் தொடங்கி, பிளஸ் 2, டிகிரி என இதுவரை நாம் படித்தவற்றைத்தான், மீண்டும் ஒருமுறை படித்து தேர்வெழுதப் போகிறோம். புதிதாக ஏதையும் நாம் கற்கப் போவதில்லை.
முன்பு ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்குப் போக, தேர்ச்சிக்காகப் படித்ததை, இன்று வாழ்க்கைக்காகப் படிக்கப் போகிறோம். இந்தத் தேர்வுகளில் வெல்ல தன்னம்பிக்கையும், கடின உழைப்பும்தான் முக்கியமே தவிர, எவ்வளவு நாள் படித்தோம், எவ்வளவு நேரம் படித்தோம் என்பதல்ல. முக்கியமாக நாம் தினமும் படித்ததை வாரம் ஒரு முறை திருப்புதல் (வேகமாக திருப்பி ஒரு முறை படித்தல்) செய்தல் நலம்.அதிலும் பொதுத் தமிழைத் தேர்வு செய்தோர் தேர்வுக்குத் தயாரிக்கும்போது, படிக்க படிக்க ஆர்வமும், நாம் நம் தாய்மொழியாம் தமிழை இலக்கணச் சுத்தமாக தெரிந்து கொண்டோம் என்கிற திருப்தியும் ஏற்படுவதை உணரலாம்.
தேர்வுக்கு இன்னும் 30 நாள்கள்தானே இருக்கிறது, அதற்குள் எப்படி தயாராக முடியும்? என எண்ணி, சோர்ந்துவிடக்கூடாது. எவ்வளவு குறுகிய காலகட்டம் இருந்தாலும், நம்மால் முடிந்த அளவுக்குத் தயாரிக்க வேண்டும். இந்தத் தயாரிப்பு இந்த முறை நமக்கு பயன்படாவிட்டாலும், அடுத்த முறை தேர்வெழுத மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் ஒரு பேட்டியில் கூறியது என்னவென்றால், ""தேர்வு அறிவிப்பு வந்த பிறகு படித்தால்கூட, நம்மால் கட்டாயமாக நன்றாகத் தயாரித்து தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியும்'' என தனது அனுபவத்தைக் கூறியுள்ளார். மிகவும் சத்தியமான வார்த்தைகள் இவை.
என்ன ஒரு வித்தியாசம், ஒரு வருட காலம் தேர்வுக்குத் தயாரித்தவர் எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, நாம் பன்மடங்கு உழைக்க நேரிடும். மற்றபடி முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில்தான் இருக்கும் என்ற மாவீரன் நெப்போலியனின் வார்த்தைகளையே தாரக மந்திரமாகக் கொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம்.
முக்கியமாக, படித்ததையெல்லாம், வாரம் ஒருமுறையோ, 10 நாள்களுக்கு ஒருமுறையோ திருப்பிப் பார்ப்பது கட்டாயம். முறையான திட்டமும், கடின உழைப்பும் இருந்தால் அனைவரும் கட்டாயமாக அரசுப் பணியைப் பெறலாம் என்பது உறுதி.