இன்டர்வியூ: தெரிந்து கொள்ளுங்கள்!
தேர்வு என்றாலே பள்ளி மாணவர் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஒருவித பயம், பதட்டம் உள்ளது.
தேர்வு என்றாலே பள்ளி மாணவர் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஒருவித பயம், பதட்டம் உள்ளது. அதிலும் நேர்முகத் தேர்வு என்றால் கேட்கவே வேண்டாம். கூடுதல் பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. இதன் காரணமாகவே திறமையானவர்கள் கூட நேர்முகத் தேர்வில் தோல்வியடைய நேரிடுகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் முதல்நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என பல்வேறு தேர்வுகளை வைத்து தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில் முதல்நிலை, எழுத்துத் தேர்வில் தங்களின் புத்தக அறிவைப் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வில் மட்டும் தோல்வி அடைந்து விடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மன அழுத்தம், அச்சம் போன்றவையே முக்கிய காரணமாகும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மனஅழுத்தத்தையே ஒரு தேர்வாக வைத்து, எத்தகைய கடும் மன அழுத்தத்தைத் தரக்கூடிய சூழலிலும், ஒருவர் எவ்வாறு வெற்றிகரமாகப் பணியாற்றுகிறார் என்பதைக் கண்டறிவதற்காக "ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ' என்ற பெயரிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது.
பொதுவாக வடிகட்டும் தேர்வு அல்லது திரையிடல் நேர்முகத் தேர்வு, மனிதவள நேர்முகத் தேர்வு, மனஅழுத்த நேர்முகத் தேர்வு, சூழ்நிலை நேர்முகத் தேர்வு, தொழில்நுட்ப நேர்முகத் தேர்வு என நேர்முகத் தேர்வுகள் பலவகைப்படும்.
திரையிடல் நேர்முகத் தேர்வு: இந்த வகை நேர்முகத் தேர்வானது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகளுக்கு அதிகளவிலான நபர்கள் போட்டியிடும்போது, அவர்களில் தகுதியான நபர்களை மட்டும் முதலில் வடிகட்டுவதற்காக நடத்தப்படுவது. பொதுவாக இந்த வகை நேர்முகத் தேர்வில் ஒரே மாதிரியான வினாக்களே அதிக அளவில் இடம் பெறுகின்றன.
மனிதவள நேர்முகத் தேர்வு: இந்த வகை நேர்முகத் தேர்வில் பங்கேற்பவரின் துறை சார்ந்த அறிவைவிட, துறை சார்ந்த ஆளுமை சோதிக்கப்படுகிறது. கூடுதலாக மொழித் திறன், தகவல் தொடர்புத் திறன் போன்றவை பரிசோதிக்கப்படுகிறது.
மனஅழுத்த நேர்முகத் தேர்வு: இந்த நேர்முகத் தேர்வில் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பணியாற்றும் திறன் சோதிக்கப்படுகிறது. தொழில்நுட்ப அறிவும், ஆளுமையும் மிக்கவராக இருந்தாலும், மிகக் கடினமான சிக்கலான சூழ்நிலையிலும் அவரின் முடிவெடுக்கும் திறன் ஆராயப்படுகிறது. சில நேரங்களில் தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகள் பங்கேற்பவரின் மனதைப் புண்படுத்தக்கூடியதாகக் கூட இருக்கும். ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக தெளிவாகப் பதிலளித்து, நம்மால் எத்தகயை உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் சமநிலையுடன் செயல்படமுடியும் என்பதை தேர்வாளர்களுக்கு உணர்த்தவேண்டும். இதுவே ஆங்கிலத்தில் "ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ' என்றழைக்கப்படுகிறது.
சூழ்நிலை நேர்முகத் தேர்வு: இந்த நேர்முகத் தேர்வில் ஒரு கற்பனையான சூழல் வழங்கப்பட்டு, அந்தச் சூழலில் பணியாற்றும், முடிவெடுக்கும் திறன்கள் மதிப்பிடப்படும். இதுவும் ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ போன்றதே.
தொழில்நுட்ப நேர்முகத் தேர்வு: இது பொதுவாக பணிக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப அறிவையும் போட்டியாளர் பெற்றிருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்காக அனைத்து நிறுவனங்களிலும் நடத்தப்படும் பொதுவான நேர்முகத் தேர்வுதான்.
இவை தவிர, வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் விதமாக தொலைபேசி, செல்லிடப்பேசியில் நேர்முகத் தேர்வு, ஸ்கைப்பில் நேர்முகத் தேர்வு என நேர்முகத் தேர்வு தற்போது பல்வேறு உருமாற்றங்களை அடைந்து வருகிறது.