இன்டிசைன் தெரிந்தால் கவலையில்லை!
தற்போது பெரும்பாலான அச்சகதாரர்களும், பதிப்பாளர்களும், கணினி வரைகலை வடிவமைப்பாளர்களும் பதிப்பக வேலை என்று குறிப்பிடப்படும் பப்ளிஷிங் வேலைகளுக்கு கோரல்டிரா, பேஜ்மேக்கர் போன்ற மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பெரும்பாலான அச்சகதாரர்களும், பதிப்பாளர்களும், கணினி வரைகலை வடிவமைப்பாளர்களும் பதிப்பக வேலை என்று குறிப்பிடப்படும் பப்ளிஷிங் வேலைகளுக்கு கோரல்டிரா, பேஜ்மேக்கர் போன்ற மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். புத்தகப் பதிப்பு முதற்கொண்டு விஸிட்டிங் கார்டு, துண்டு அறிக்கைகள், ஒரே ஒரு பிரதி மட்டும் உருவாக்கி வைக்கப்படும் பதாகைகள், கலைக்களஞ்சியங்கள் வரையிலும் - கணினி வரைகலையால் உருவாக்கப்படும் எல்லா வேலைகளையும் } பதிப்பு என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
கணனி வரைகலையில் குறிப்பாக புத்தக வேலைகளுக்கான பக்க வடிவமைப்பிற்காக பயன்பாட்டில் இருந்து வந்த, தற்போதும் பயன்படுத்திக் கொண்டுள்ள பேஜ்மேக்கர் மென்பொருளில், பல குறைபாடுகள் உள்ளன. என்றாலும் பலரும் இன்னும் அதையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் உள்ள குறைபாடுகள் :
* அதிக பக்கங்கள் உள்ள வேலையை சேவ் செய்து வைத்திருந்தால், மறுபடியும் துவக்கும்போது, தொல்லை தருகிறது.
* ஒரு முறை நிறுத்திய படத்தை மாற்றுவதற்கு, அல்லது மாற்றங்கள் கொடுப்பதற்கு அதனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இம்போர்ட் செய்தே நிறுத்த வேண்டும்.
* ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒரே பக்கத்தில் நிறுத்துவது முடியாது. வேரியபிள் டேட்டா என்பது மிகவும் குறைவான அளவிலேயே செயல்படுகிறது. இதனால் அடையாள அட்டை போன்ற புகைப்படங்களை இணைக்கும் வேலைகளைச் செய்ய முடிவது இல்லை.
* திரையில் காட்டப்படும் வண்ணங்களும் அச்சில் கிடைக்கும் வண்ணமும் வேறுவேறாக உள்ளன.
* இ-புக் எனப்படும் மின்னூல் உருவாக்கத்திற்குத் தேவையான பல வசதிகள் கிடையாது. பிடிஎஃப்பாக மட்டும் மாற்ற முடியும். அனிமேஷன் வசதிகள் கொடுக்க முடியாது.
* இணையப் பக்க வடிவமைப்பிற்காக செயல்படுவது சிரமம்.
* ஆட்டோபேக்கப் மற்றும் பேக்கப் நடக்கும்போது வேறு செயல்களைச் செய்ய முடியாது.
* பேக்கப் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் முழு வேலையும் கெட்டுப்போய்விடுவதும் உண்டு. அதாவது செய்து வைத்த வேலை முற்றிலுமாகக் கெட்டுப் போகிறது.
* வேலை செய்து கொண்டிருக்கும்போது டெர்மினேட் ஆகிவிட்டால், அதுவரை செய்தவை டெலிட் ஆகிவிடுகின்றன.
இத்தகைய குறைகளையெல்லாம் களைந்து, இன்னும் அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதே இன்டிசைன் எனும் மென்பொருளாகும்.
பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், வெக்டார் வகையிலான படங்களையும் உருவாக்க இந்த இன்டிசைன் மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. அத்துடன் தலைப்பு எழுத்துக்களை அழகுபடுத்துவது, பின்புலனாக வண்ணங்களை நிறுத்துவது உள்ளிட்ட ஏராளமான, வரைகலை அம்சங்கள் இன்டிசைனிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தெரிந்த வரையிலும், அச்சுத் துறைக்கென்றே, அச்சுத்துறைக்குத் தேவையான, அதில் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவும் உருவாக்கப்பட்டுள்ள ஒரே மென்பொருள் இந்த இன்டிசைன் என்பது மட்டுமேயாகும். தமிழக அச்சுத்துறையில் தற்போது புழக்கத்தில் உள்ள பாலிமாஸ்டர் வேலைகளிலிருந்து கம்ப்யூட்டர் டூ பிளேட் வகையான வேலைகள் அல்லாமல், நேரடியாக கம்ப்யூட்டர் டூ பிரிண்ட் தருகின்ற டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலான வேலைகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஏற்ற பல செயல்பாடுகள் இன்டிசைனில் உள்ளன.
குறிப்பாக விரைவாக வேலை செய்ய உதவும் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் இந்த மென்பொருளில் முழுமையாக உள்ளது. நமது விருப்பப்படியாகவும் உருவாக்கிக் கொள்ளலாம். உரிமத்துடன் வாங்கி பயன்படுத்தப்படும் தமிழ் மென்பொருள் அல்லாமல் இணையம் வழியே விலையில்லாமல் கிடைக்கும் ஒருங்குறி எழுத்துருக்கள் மிக எளிதாக இன்டிசைன் சிஎஸ்6 பதிப்பில் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே தொழில்முறை அல்லாதோர் தமிழ் எழுத்துருக்களுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன் தற்போது பெரிய அளவில் பேசப்படுவதுடன், செயல்பாட்டிலும் கொண்டுவரப்பட்டுள்ள இ}பப்ளிகேஷன் எனப்படும் மின் பதிப்பு முறைக்குத் தேவையான மின்னூல்களை (இ-புக்ஸ்) உருவாக்குவதற்கும் மின் பதிப்பாக (இ-பப்ளிஷிங்) வெளியிடுவதற்கும் வேண்டிய பல்வேறு வசதிகள் இந்த இன்டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன.
மின்னூலுக்கு அடிப்படையான போர்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட் எனப்படும் பிடிஎஃப் வகை கோப்புகளை உருவாக்குவது என்பது இன்டிசைனில் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறப்புக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வார, மாத இதழ்களும், பல முன்னணி தினசரி நாளிதழ்களும் தற்போது இன்டிசைனை பயன்படுத்தியே தங்களது வடிவமைப்பைச் செய்து முடிக்கின்றனர். இன்டிசைனின் 9ஆவது பதிப்பு இன்டிசைன் சிசி என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அச்சுத்துறைக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இன்டிசைனை முறையாகப் பயின்று செயல்பட்டால் தற்போது பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து இன்டிசைனை மட்டும் பயன்படுத்த முடியும்.
பட்டதாரி இளைஞர்கள் இந்த மென்பொருளை முறையாக, முழுமையாகப் பழகி வைத்திருந்தால், நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. குறிப்பாக அடோபி நிறுவனத்தில் இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் போட்டோஷாப் முடித்துள்ள ஓரளவு பட்டறிவு உள்ளவர்களுக்கு வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
அடோபி நிறுவனத்தின் வலைதளமான www.adobe.com/products/indesign.html என்பதில் உள்ள Free Trial என்பதைச் சொடுக்கி, வருகின்ற பக்கங்களில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, 30 நாட்கள் பழகுவதற்கான பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பிறகு தேவையென்றால் உரிமத்துடன் இந்த மென்பொருளை வாங்கிக் கொள்ளலாம். அச்சகதாரர்கள், பதாகை நிறுவனர்கள், பதிப்பாளர்கள் போன்றவர்களுக்கும் இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.