உயர்கல்வி கலந்தாய்வு: தரமான கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள்!
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் உயர்கல்வி கவுன்சிலிங் குறித்த பதற்றங்கள் இல்லாமல், கவுன்சிலிங்கைத் திட்டமிட்டு எதிர் கொண்டால், எந்தக் கலக்கமும் அடையத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் உயர்கல்வி கவுன்சிலிங் குறித்த பதற்றங்கள் இல்லாமல், கவுன்சிலிங்கைத் திட்டமிட்டு எதிர் கொண்டால், எந்தக் கலக்கமும் அடையத் தேவையில்லை.
லட்சக்கணக்கான மாணவ - மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள நிலையில், சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே 1,100 க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்று எந்தவித பதற்றமுமின்றி உயர்கல்வி கவுன்சிலிங்கை எதிர்கொண்டு நினைத்த கல்லூரியில், நினைத்த பாடப்பிரிவை சிரமமின்றி பெற்று விடுவார்கள். ஆனால், அதில் சில நூறு மதிப்பெண்களைக் குறைவாய் பெற்றவர்களுக்கு மட்டும் தான் எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்படும்.
நடுத்தர மதிப்பெண்கள் பெற்றுள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கொண்டு நல்ல கல்லூரியில் இடம்பெற முடியுமா, இல்லை - கலை, அறிவியல் கல்லூரியில் சேருவதா என்பது புரியாமல் கலங்க வேண்டியிருக்கும்.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு கூட பல ஆயிரம் இடங்கள் நிரம்பாமல் காலியாகவே இருந்தன. எனவே பொறியியல் கல்லூரியில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது சாத்தியமே. ஆனால், கல்லூரியின் தரத்தை அறிந்து, ஆராய்ந்து அதில் சேருவதுதான் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.
பொறியியல் துறையைப் பொருத்தவரை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர், பெட்ரோ கெமிக்கல், மரைன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. எத்தகைய பொறியியல் பிரிவினைத் தேர்வு செய்து படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அதன் எதிர்கால நிலை எவ்வாறு அமையும் என்பதை சிறந்த வழிகாட்டும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். (சில பாடப்பிரிவுகள் இன்றைய தேதிக்கு சிறப்பானதாக இருக்கும். ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பிரிவு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது)
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில், கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு எவ்வளவு கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்தக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என்பதை இணையதளம் மூலம் பார்வையிட்டு கல்லூரிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இதைக் கொண்டு ஓரளவுக்கு, எந்தக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக தர வரிசையில் 1,050 வரையுள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கலந்தாய்வு நடைபெறும் நேரத்தில் அந்தக் கல்லூரிகளில் தங்களுக்கு வசதியான சூழல் உள்ள கல்லூரியைத் தேர்வு செய்து கொண்டால் எந்தவிதக் குழப்பமும் இன்றி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட முடியும்.
கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, அதைப் படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு போன்றவற்றையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு தகுதியுள்ள பாடப்பிரிவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கு அதிக வாய்ப்புள்ள துறைகளையும், அவற்றைப் படிக்க தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளையும் தெரிந்து கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.
தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு உள்ள கல்லூரிகள் எவை, தங்களுடைய ஊருக்கு அருகில் இருக்கும் கல்லூரிகளில் கற்றுத் தரப்படும் பாடப்பிரிவுகள் எவை என்பதையும் நன்றாகத் தெரிந்து கொள்வதன் மூலம் கலந்தாய்வு சுலபமாக இருக்கும். மாணவர்கள் தங்களின் விருப்பத் தேர்வான பாடப்பிரிவுகளையும், விருப்பமான கல்லூரிகளையும் 1, 2, 3 என்று பட்டியல்போட்டு வகைப்படுத்தி குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு கலந்தாய்வுக்குச் சென்றால் வேலை எளிதாக முடியும்.
பதற்றமோ, அவசரமோ இன்றி கலந்தாய்வில் பங்கேற்றால் தரமான கல்லூரிகளில் சேர்ந்து கவலையின்றிப் படிக்க முடியும்.