சுய முன்னேற்றம் - 47
முனைவர் வ.வே.சு.
கல்வியாளர்
""ஏன்டா அவனை அடிச்ச?''
""என்னைத் திட்டினான் சார்''
""வாயால திட்டினத்துக்குக் கையால அடிக்கலாமா?''
""ரொம்ப மோசமா பேசினான் சார்... பொறுத்துக்க முடியல. அடிச்சுட்டேன்''
ஆம். வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். கையால் அடிப்பதை விட அவை ஏற்படுத்தும் காயங்கள் இன்னும் ஆழமானவை. மறக்க முடியாதவை. பள்ளி, கல்லூரி மாணவரிடையே நேரிடும் கைகலப்புகளின் ஆரம்பப்புள்ளி, பெரும்பாலும் தகாத, தரக்குறைவான வார்த்தைகளாகத்தான் இருக்கும். அதே போல, சண்டை சச்சரவுகளுக்கான தீர்வுகளுக்கு மன்னிப்பு வார்த்தைகள் முதல் பாலமாக அமையவும் வாய்ப்புண்டு. வார்த்தைகள் கேடும் விளைவிக்கும். நன்மையும் விளைவிக்கும். வார்த்தைகளின் இந்த வல்லமையை உணர்ந்து கொள்ளும் இளையவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேறும் தகுதியைப் பெறுகின்றனர்.
சொற்களின் பொருளைப் புரிந்து கொள்வது முக்கியம். ஒரு வாக்கியத்தின் பொருளைத் தோராயமாகவோ அல்லது பொதுப்படையாகவோ புரிந்து கொள்வது போதாது. வாக்கியத்தில் பயின்று வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிய வேண்டும். அப்போதுதான் சரியான சொற்களைச் சரியான இடத்தில் பயன்படுத்தும் பழக்கம் ஏற்படும். நிறைகளைச் சொல்லும் போதும், பாராட்டும் போதும் இருப்பதைவிட, ஒருவரைக் குறை கூறும் போதோ, குற்றம் சாட்டும் போதோ எந்த விதமான சொற்களைப் பயன்படுத்துகின்றோம் என்பதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. ஊடல் கொண்டு செல்லும் அரசி கோப்பெருந்தேவியைச் சமாதானம் செய்ய பின் செல்லும் பாண்டிய மன்னனிடம், ""சிலம்பைக் களவாடியவனை என்ன செய்ய?'' என்று பொற்கொல்லன் கேட்கிறான். அவசரத்தில் இருந்த நெடுஞ்செழியன், ""கொண்டு வருக'' என்று சொல்வதற்குப் பதிலாகக் ""கொன்று வருக'' என்று சொல்லிவிடுகிறான். ஒரே ஒரு சொல் மாறியது. ஓர் ஊர் அழிந்தது. ஓர் இலக்கியம் பிறந்தது. ஆம். சொற்கள் மிக வலிமையானவை.
பொதுவாகச் சிறுவர்களிடையே வசவுச் சொற்களே சண்டைகளுக்குத் தொடக்கமாகின்றது. அதுவும் வகுப்பறைகளிலோ, விளையாட்டுத் திடல்களிலோ கூடிப் பிரிந்து குழுக்களாகப் பங்கு பெறுகையில் உணர்ச்சி வேகத்தில் தவறான வார்த்தைகள் இடம் பெற்றுவிடுகின்றன. பாப்பா பாட்டில் மகாகவி பாரதியார் "கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா' என்று கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு மாணவன் டிஸ்பெப்ஸியா (Dyspepsia) வினால் அவதிப்படுகிறேன் என்று பொய்யாக விடுப்புக் கடிதம் எழுதியிருந்தான். இது போல் ஒரு மருத்துவச் சொல்லைப் பயன்படுத்தினால் நம்பிவிடுவார்கள் என்று நினைத்திருப்பான் போலும். மறுநாள் ஆசிரியர் உனக்கு என்ன உடம்புக்கு என்றவுடன் கண்வலி என்றான். டிஸ்பெப்ஸியா வயிறு சம்பந்தமான நோயைக் குறிப்பது. பொருள் தெரியாமல் அச்சொல்லைப் பயன்படுத்தியதால், அவன் சொன்ன பொய் அவனுக்கே கேடாகிவிட்டது. பொய்யும் அம்பலமாகிவிட்டது.
பிறமொழி வார்த்தைகளைக் கற்கும் போது அதிக கவனம் தேவை. ஆசிரியரிடமிருந்தோ அல்லது மொழிப் பயிற்சிப் புத்தகங்களிலிருந்தோ கற்பதே நல்லது. எங்கோ இந்த மொழியைக் கேட்டேன் என்று பயன்படுத்தினால், அது தவறாகப் போய்விடலாம். ஒரு வட இந்திய மாணவனை, பேராசிரியர் கூப்பிட்டனுப்பினார். பிறகு ஏதோ நினைவில் இருந்த அவர்
அம்மாணவன் அறைக்குள் வந்ததும், ""என்ன வேண்டும்?'' என்றார். அவர் தமிழில் பேசிய தோரணையைக் கண்டு அவனும் தனக்குத் தெரிந்த தமிழில், ""நீ கூப்டே நா வந்தேன்'' என்றான். பேராசிரியர் இதைப் பெரிய அவமரியாதையாக நினைத்ததால் இந்நிகழ்ச்சி ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கல்லூரி முதல்வர் வரை சென்று விட்டது. சந்தைக்கடை வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு ஒரு மொழியைச் சபையிலே பேசக் கூடாது. எந்த மொழியிலும் மரியாதையும், கண்ணியமும் நிறைந்த வார்த்தைகளையே கற்றுக் கொள்ளுங்கள். அவற்றையே பயன்படுத்துங்கள்.
மொழியின் நாகரிகம், சொற்களைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்ததே!
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயது வருவதற்குள் தாய்மொழியில் ஆயிரம் வார்த்தைகளின் பொருளை அறிந்து கொள்கின்றன. நான்காவது வகுப்பு வரும் போது ஏறத்தாழ பத்தாயிரம் சொற்களைப் புரிந்து கொள்கின்றன என்று குழந்தைக் கல்வி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பிற மொழிகளைக் கற்கும் போது இந்த எண்ணிக்கை மாறலாம். ஒரு மொழியில் எவ்வளவு சொற்கள் தெரியும் என்பதில் பெருமை இல்லை. அவற்றுள் தீதற்ற, பிறருக்குத் துன்பம் விளைவிக்காத, காயப்படுத்தாத, கண்ணியமான, நல்ல தரமான எத்தனை சொற்களை நீங்கள் பிறரோடு பழகும் போது பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் சிறப்பு அமைகிறது முன்னேற்றமும் இருக்கிறது.
"தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே எந்தச் சொல்லை எங்கே பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு மாணவனின் மொழி அனுபவத்தை நிச்சயம் பாதிக்கின்றனர். பத்திலிருந்து ஆறு போனால் அஞ்சு எனச் சொன்ன மூன்று வயது தம்பியை அண்ணன் திட்டுகிறான்:
""டேய் உனக்கு மூளை இருக்கா.. அறிவு கெட்டவனே?''
""ஏன்டா தம்பிய இப்படித் திட்டுறே?'' அம்மா கேட்கிறாள்
""நான் கணக்கு சரியாப் போடலேன்னா அப்பா இப்படித்தாம்மா திட்டுவாரு''
ஒருவனுடைய மொழி நாகரிகத்தை வாழ்விடங்களே தீர்மானிக்கின்றன. ஒரு சில சூழல்களில் சரளமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், பொதுவிடங்களிலும், அலுவலகங்களிலும் எழுத்திலும் இழிவாகக் கருதப்படுபவை என்று உணர்ந்த பிறகாவது அவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். எண்ணங்கள் மொழியை மாசு படுத்தும் என்றால், மொழியாலும் எண்ணங்களை மாசுபடுத்த முடியும் என 1984 நாவலில் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) குறிப்பிடுவார்.
உங்களை மற்றவருக்குச் சரியாக அறிமுகம் செய்பவை நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்தாம். உங்கள் மதிப்பை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவையே! வார்த்தைகளின் வலிமையை உணருங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.