ஊர் சுற்றிக் காட்டும் சுற்றுலாத் தொழில்!
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்,
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அங்கு அவர்கள் எவற்றைப் பார்த்தார்கள் என்று? எல்லாம் கான்கிரீட் கட்டடங்களும், கலர் பல்புகளுமாகத் தான் இருந்திருக்கும். அனைத்தும் பொழுதுபோக்கு சுற்றுலாவிடங்களாக இருக்குமேயன்றி, வரலாறு, பண்பாடு, கலாசாரம் சார்ந்த எவற்றையும் பெரிய அளவில் பார்க்க முடியாது.
நமது தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணில் பார்க்கும் இடம் எல்லாம் வரலாறு கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் இவற்றை முறையாகப் பயன்படுத்தவும்,வெளிக்கொணரவும் தகுந்த நபர்கள் இல்லாதது மிகப் பெரிய குறையாகும். இந்தியா வரலாறு, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் கொட்டிக் கிடக்கும் பெரிய நிலப்பரப்பு.
இதனை முழுமையாக அறிந்து கொள்ள வெளிநாட்டினர் இங்கு படையெடுத்து வருகின்றனர். பழைய படையெடுப்புகளுக்கும் தற்போதைம் படையெடுப்பிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, தற்போது வருபவர்கள் தாங்கள் ஈட்டிய பொருளை இங்கு செலவு செய்ய வருகின்றனர். இதனால் நமது நாட்டிற்கு அந்நியச் செலாவணியாகக் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்கள் கிடைக்கின்றன.
நடுவண் அரசின் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி கடந்த 2014 நவம்பர் முதல் 2015 ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 43 லட்சம் பேர் சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளனர். இவர்கள் மூலம் கிடைத்த வருவாய் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய்களாகும்.
தற்போது சுற்றுலா என்பது பலதரப்பட்ட பிரிவுகளைக் கொண்டதாக மாறிவிட்டது. நம்மிடம் உள்ள கூடுதல் மதிப்பே,அத்தனை பிரிவுகளுக்கும் ஏற்ற இடங்கள் நம்நாட்டில் உள்ளன என்பதுதான்.
வரலாற்றுச் சுற்றுலா,பொழுதுபோக்குச் சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, கலாசார சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, தேனிலவுச் சுற்றுலா,யோகாசனச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, உணவுச் சுற்றுலா என்பன உட்பட ஏராளமான பிரிவுகளுடன் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்க நாட்டு டாலர்களைச் சம்பாதிக்க அங்குதான் செல்ல வேண்டும் என்றில்லை. நமது ஊரில் இருந்தபடியேயும் சம்பாதிக்க வகை உள்ளது. சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கலாம். துவக்கத்தில் சிறிய அளவில் உள்ளூர் மக்களுக்காக சுற்றுலாக நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இன்றும் நமக்குத் தெரிந்த மிகப்பெரிய குறை ஒன்று உள்ளது. தமிழ்நாட்டிற்குள் உள்ள இடங்களை, தமிழ்நாட்டு மக்களும் பார்த்து மகிழ்வதற்காக முறையான சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையைத் தவிர, வேறு யாரும் கிடையாது. நாமாக ஒரு மகிழுந்தை எடுத்துக் கொண்டு ஒவ்வோர் இடமாகப் போய் பார்க்க வேண்டியுள்ளது.
சென்னையை விடுங்கள், கலாசாரப் பெருமை மிக்க மதுரை, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, மகாபலிபுரம், காஞ்சிபுரம் போன்ற நகரங்களிலும் சுற்றுலா அழைத்துச் செல்ல யாரும் இல்லை. இதனைத் தொடங்குங்கள். உள்ளூர் மக்களுக்காக, சரியான விடுமுறை நாட்களுக்காக நல்ல சுற்றுலா நிகழ்ச்சியைத் தயாரித்து விளம்பரப்படுத்துங்கள். துவக்கத்தில் குறைந்த அளவு நபர்களே பதிவு செய்தாலும், அவர்களுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தைக் கொடுத்து திருப்திபடுத்துங்கள். அவர்கள் உங்களுக்காக வேலைசெய்யத் தொடங்குவார்கள். திருப்தியடைந்த ஒரு வாடிக்கையாளர் பத்து விற்பனை பிரதிகளுக்குச் சமமாவார். சிறிய நிகழ்ச்சிகளாக நடத்துங்கள்.
எடுத்துக்காட்டாக, ஒருநாள் மதுரை சுற்றுலா என்று அறிவித்து மதுரையின் முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று சரியான விளக்கம் கொடுத்து அழைத்து வாருங்கள். இதுபோல பல ஊர்களுக்கு இரண்டு நாள், ஐந்துநாள் சுற்றுலா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திப் பாருங்கள்.
தமிழ்நாட்டு மக்கள், புதுதில்லி உள்ளிட்ட இந்திய நகரங்களைச் சுற்றிப் பார்க்க நல்ல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தலாம். தமிழ் வழிகாட்டிகள் மூலம் பிற மாநிலங்களில் சுற்றுலாத்தலங்களைப்பற்றி விளக்கிக் கூறினால் நம் மக்கள் முழு நிறை வடைவார்கள்.
ஒன்றிரண்டு வருடங்கள் நல்ல முறையில் இயங்கிய பிறகு நடுவண் அரசிடம் பதிவு செய்து கொள்ளுங்கள். இதனால் பதிவு பெற்ற சுற்றுலா முகவராக வெளிநாட்டினருக்கான சுற்றுலாக்களையும் உங்களால் ஒருங்கிணைக்க முடியும். பல மொழிகள் பேசும், இளங்கலை அல்லது முதுகலை சுற்றுலாவியல் முடித்த நபர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள். tourism.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை இப்போதே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
உள்ளூர் சுற்றுலா நடத்துபவர், வெளிநாட்டினருக்கான சுற்றுலா முகவர் உள்ளிட்ட நிலைகளில் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள், விண்ணப்பங்கள், விளக்கங்கள் முழுமையாக இந்த வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப நமது செயல்பாடுகளை வரையறுத்து நடைமுறைப்படுத்திக் கொண்டால் இரண்டு ஆண்டுகளில் பதிவு பெற்ற சுற்றுலா முகவராக முழுமையாகச் செயல்பட வழிகிடைக்கும்.
பதிவுபெற்ற சுற்றுலா முகவர்கள் வெளிநாடுகளில் விளம்பரம் செய்ய கண்காட்சிகள் வழியாக சுற்றுலாத்துறையே உதவுகிறது. அங்கு நடைபெறும் சுற்றுலாக் கண்காட்சிகளில் இந்திய சுற்றுலாத் துறை அரங்கில் முகவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக நம்மைத் தொடர்பு கொள்ளவும் வகை செய்கின்றனர்.
முதுகலை வரலாறு, சுற்றுலாவியல் படித்துள்ளவர்கள் எளிதாக வெற்றியடையும் பகுதியாக இந்தச் சுற்றுலாத்துறை திகழ்கின்றது.