பறக்கும் சைக்கிள்!
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு, எந்தப் பக்கமும் அசைய முடியாமல் இருக்கும்போது தோன்றும், இந்த நெரிசலில் இருந்து தப்பித்து அப்படியே பறந்து போய்விட மாட்டோமா? என்று.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு, எந்தப் பக்கமும் அசைய முடியாமல் இருக்கும்போது தோன்றும், இந்த நெரிசலில் இருந்து தப்பித்து அப்படியே பறந்து போய்விட மாட்டோமா? என்று.
லண்டனில் உள்ள "எக்ஸ்ஃபுளோர் ஏர்' என்ற நிறுவனம், ஒரு பறக்கும் சைக்கிளைத் தயாரித்துள்ளது. இதை உருவாக்கியவர்கள் வடிவமைப்பாளர்களான ஜான் ஃபோடென், யானிக் ரீட் என்ற இருவர்.
சாதாரண சைக்கிளைப் போலவே இந்தச் சைக்கிளை சாலைகளில் ஓட்டிக் கொண்டு செல்ல இயலும். போக்குவரத்து நெரிசலோ அல்லது சாலையில் பயணம் செய்ய முடியாத நிலையோ ஏற்பட்டால், இந்தச் சைக்கிள் உடனே சிறகு விரித்துப் பறந்துவிடும்.
ஆம். இந்தச் சைக்கிளின் பின்புறத்தில் ஒரு பெரிய விசிறி பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்துக்குக் கேடு செய்யாத உயிரிஎரிபொருளால் இயங்கக் கூடிய மோட்டார் இந்த சைக்கிளில் உள்ளது. அந்த மோட்டாரின் மூலமாக இந்த விசிறி இயங்கத் தொடங்குகிறது.
சைக்கிள் மெல்ல உயரே பறக்கிறது.
தரையில் இந்த சைக்கிளின் வேகம் மணிக்கு 24 கி.மீ. வானத்திலோ மணிக்கு 40 கி.மீ. தரையிலிருந்து 4000 அடி உயரம் வரை இந்த சைக்கிள் பறக்கும்.
வானத்தில் பறக்கும்போது எரிபொருள் தீர்ந்துவிட்டால், அப்படியே விழ வேண்டியதுதானா என்று அஞ்சுகிறீர்களா?
அப்படியெல்லாம் விழமாட்டீர்கள். ஏனென்றால் சைக்கிளில் ஒரு பாராசூட்டும் இணைக்கப்பட்டுள்ளது. சைக்கிள் பறக்கும்போது இந்த பாராசூட் விரிந்துவிடும். எரிபொருள் தீர்ந்துவிட்டாலும் சைக்கிள் வானில் மிதந்து கொண்டே இருக்கும்.
சொந்தமாக ஹெலிகாப்டரோ, விமானமோ வாங்க முடியாதவர்கள் இந்த பறக்கும் சைக்கிளை வாங்கிக் கொள்ளலாம். விலை இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இன்ஸ்டால்மென்டில் தருவார்களா? என்று தெரியவில்லை.