வெற்றியைத் தேடித் தரும் கூட்டுப் பயிற்சி!
ஆங்கிலம், கணிதம், வணிகவியல், பொருளியல், வரலாறு பாடங்களில் பட்டம் பயின்றவர்கள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டால் மத்திய அரசு நடத்தும் பல்வேறு வகையான தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள்.
ஆங்கிலம், கணிதம், வணிகவியல், பொருளியல், வரலாறு பாடங்களில் பட்டம் பயின்றவர்கள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டால் மத்திய அரசு நடத்தும் பல்வேறு வகையான தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவர் மேலும் கூறியது:
""அரசு வேலைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் பட்டப் படிப்பு முடித்த உடனே மறு வருடத்திலேயே பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் Combined Graduate Level Examination எழுத வேண்டும். ஆண்டுக்கு 5000 முதல் 10,000 பதவிகள் வரை காத்திருக்கின்றன. வருமானவரி ஆய்வாளர், சுங்க மற்றும் கலால் ஆய்வாளர், வட்டாட்சியர் நிலையில் உள்ள மத்திய அரசு உதவியாளர் வேலை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த வேலைகளுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு செயலகத்தில் உதவியாளர் நிலைக்கு (Assistants in the Central Secretariat) தேர்வு பெற்றால் ஓய்வு பெறும்போது தமிழ்நாடு அரசு துறைச் செயலாளர் பதவிக்கு இணையான பதவி வரை பெற வாய்ப்புகள் உள்ளன.
ஒரு மாணவனோ, மாணவியோ பிளஸ்-2 முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போதே தங்களது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். UPSC, SSC, TNPSC, Defence Services, Bank Officers, Clerks, Railways, Scientific Departments, Parliament of India, Intelligence Organizations, Postal Department என்று பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கல்லூரி மாணவர்கள் படிக்கும் போதே, பொழுது போக்காக அடிப்படை ஆங்கில அறிவுத்திறன், பொது அறிவுத்திறன் உள்ளிட்டவற்றை கொஞ்சம், கொஞ்சமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு உயர் அதிகாரியாக ஆக வேண்டுமென நினைக்கும் பட்சத்தில் அதற்குண்டான பத்தாண்டு கேள்வித் தாள்களையும் பொழுது போக்காகப் பார்த்து வரலாம்.
கல்லூரியில் படிக்கும் போதே, நேரம் கிடைக்கும் பொழுது போட்டித் தேர்வுகளுக்குண்டான பொது அறிவு, பொது ஆங்கிலம், புத்திக் கூர்மைத் தேர்வு, அடிப்படைக் கணிதம், தமிழ் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும். அவை பின்னாளில் நீங்கள் நிறைந்த அளவில் வெற்றி பெற இயலும்.
மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பொது அறிவுத்தாள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். 1) இந்திய அரசியலமைப்புச் சட்டம் 2) இந்திய வரலாறு 3) இந்திய சுதந்திரப் போராட்டம் 4) இந்திய மற்றும் உலகப் புவியியல் 5) இந்தியப் பொருளாதாரம் 6) மேம்போக்கான உலக வரலாறு 7) அடிப்படை அறிவியல் 8) உலக ஸ்தாபனங்கள்(UNO etc.) 9) அடிப்படை பொது அறிவு 10) கணினி அறிவியல் 11) தற்கால விஷயங்கள் (Current Affairs) போன்றவை பொது அறிவுத்தாளில் இடம் பெற்றிருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டவை நீங்கலாக 1) தேசிய சின்னங்களும் முக்கியத்துவமும் 2) புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் 3) மேற்கோள்கள் 4) சுருக்கங்கள் (Abbreviations) 5) விளையாட்டுகளும், விளையாட்டு வீரர்களும் 6) விருதுகள் குறிப்பாக தேசிய விருதுகள் 7) இந்திய சரித்திரத்திலும் உலகிலும் புகழ் பெற்றவர்கள் 8) புகழ் பெற்ற சரணாலயங்கள், அறிவியல் கூடங்கள், முக்கியமான இடங்கள், பன்னாட்டு பாராளுமன்றங்களின் பெயர்கள், மிக உயர்ந்த சிறப்புக்கள் கொண்ட இடங்கள், பொருட்கள் மற்றும் வரையறுத்துக் கூற முடியாத இன்னோரன்னவை உள்ளிட்டவையும் அடிப்படை பொது அறிவில் வரக்கூடிய விஷயங்களாகும்.
போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் போது கூட்டாகச் சேர்ந்து படிப்பதும் நல்ல பயனை அளிக்கும். கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்று எண்ணம் உடைய பல்வேறு பாடங்களில் பட்டம் பெற்ற மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் ஒன்றாகக் கூடிப் படிக்கலாம். ஒருவருக்கொருவர் தங்களது அறிவுத்திறன்களைப் பகிர்ந்து கொண்டு வெற்றிப் பாதையை நோக்கி முயற்சியுடன் பயணித்தால் ஓராண்டுக்குள் அனைவருக்கும் நல்ல வேலைகள் கிடைப்பது உறுதியாகும். BA (Eng), BSc (Maths), B.Com, BA History BA (Economics) படித்த மாணவர்கள் இணைந்து கூட்டாகப் படித்து வந்தால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.
கூட்டாகச் சேர்ந்து படிக்கும்போது ஒவ்வொருவரும் தங்களது அறிவையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். தனியாக தீர்க்க முடியாத சந்தேகங்களை - கணக்குகளை ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். குழுவின் எல்லா உறுப்பினர்களும் தேர்வில் தேற வேண்டும் என்ற நோக்குடன் இருப்பதால் தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்படும் தாமதிக்கும் குணம், சுறுசுறுப்பின்மை குறைய வாய்ப்புகள் உண்டு. ஒவ்வோர் இளைஞரும் ஒரு துறையில் (area of study) சிறந்து விளங்குவதால் அந்தத் துறையில் மற்றவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்கலாம்.
போட்டித்தேர்வு எழுதும் மாணவ இளைஞர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய குணநலங்களில் ஒன்று, எதையும் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் (Inquisitiveness) என்ற ஆர்வம் ஆகும். ஒரு பாடத்தில் முதலில் எளிய நூல்கள் மூலம் நமது அடிப்படை அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே பாடத்தில் பல்வேறு வழிகளில் புதுப்புதுக் கேள்விகளைப் படித்து நமது அறிவை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, கணினியைப் பற்றி எல்லாத் தேர்வுகளிலும் கேட்கிறார்கள். UPSC, SSC, IBPS, Rly, ISRO போன்ற பல்வேறு அமைப்புகள் நடத்தும் தேர்வுகளின் வினாத்தாள்களில் கணினி பற்றி உள்ளன. பல தேர்வுகளில் வரும் கணினி வினாத்தாள் பகுதிகளை திரும்பத் திரும்பப் பார்த்தால் அக்கேள்விகளை எளிதில் அணுக முடியும்.
பாராளுமன்ற செயலகங்களில் (Lok Sabha Secretariat, Rajya Sabha Secretariat) அவ்வப்போது பல்வேறு வேலைகளுக்குண்டான அறிவிப்புகள் வெளிவரும். பாராளுமன்ற வேலைகளில் ஒரு சில தனித்துவங்கள் உள்ளன. பதவி உயர்வுகள் மற்ற அமைச்சகங்களைவிட மிக விரைவில் கிடைக்கும். உங்கள் மனதினால் கற்பனை செய்ய முடியாத அளவில் உள்ள மிக உயர்ந்த பதவிகளையும் காலப்போக்கில் அடைய முடியும். உயர்நிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடர்புகள் மிக எளிதாகக் கிடைக்கும். அது நமக்கு வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும். பொது அறிவில் சற்று திறன் வாய்ந்த முதுகலை ஆங்கிலப் பட்டதாரிகள். 21 வயது முதல் பாராளுமன்ற வேலைகளுக்கு முயற்சி செய்தால் 25 வயதுக்குள் கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும்'' என்றார் அவர்.