இன்றும்... எப்போதும்...! ரோபாடிக்ஸ் & ஆட்டோமேஷன் பொறியியல் படிப்பு...!!!
தற்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் பல நிறுவனங்கள் ரோபோ தயாரிப்பில் ஈடுபடுகின்றன. எனவே இது குறித்த
தற்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் பல நிறுவனங்கள் ரோபோ தயாரிப்பில் ஈடுபடுகின்றன. எனவே இது குறித்த தொழில் நுட்பக் கல்வி அவசியம் எனக் கருதி, அனைந்திந்திய தொழில் நுட்ப கல்வி இயக்கம் ரோபோட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் பொறியியல் பட்டப் படிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது தொழிற்சாலைகளில் டிஜிட்டெல் இயந்திரங்கள் உள்ளன. அந்த இயந்திரங்களைக் கண்காணிக்கவும், வடிவமைக்கவும் இந்த நான்கு ஆண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு உதவுகிறது. இந்தப் படிப்பு கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் உள்ளது.
இது குறித்து அந்தக் கல்லூரி முதல்வர் ஆர்.ருத்ரமூர்த்தி, துறைத்தலைவர் பி.வினோத் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
""வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் தேவைக்கேற்ப பொறியாளர்களின் எண்ணிக்கை மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை ஈடுகட்டும் வகையில் இந்த படிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கல்லூரியில் இந்தப் படிப்பு 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுக்கு 60 மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தானியங்கி இயந்திரங்களுக்கான பொறியியல்துறையின் மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்ததான அனைத்துப் பாடப்பிரிவுகளையும், அதனைச் சார்ந்த ஆய்வுக்கூடங்களையும் கொண்டதாக இந்தப் படிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதில் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். பொறியியல் கருவி வடிவமைப்பு, இயந்திரபாகங்கள் வடிவமைப்பு, மின்னணுவியல்,தொடர்பியல், இயந்திரவியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். இயந்திர பாகங்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மைக்ரோ புராஸஸ், கணினி மூலம் இயந்திரங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பாடங்களும் பயிற்சியும் அளிக்கப்படும்.
மேலும் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு படிப்பில் ரோபோவின் பாகங்கள், எப்படி மின்சாரம் மூலம் அதனை செயல்பட வைக்க வேண்டும்? பழுதானால் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து ஆய்வுக்கூடத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தொழிற்சாலையின் செயல்பாடு, அதில் வரும் பிரச்னைகள், அவற்றை எப்படித் தீர்ப்பது என்பவை குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும்.
நான்காம் ஆண்டு மாணவர்கள் 6 மாத காலம் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, அதன் செயல்பாடுகள், இயந்திரத்தில் ஏற்பாடும் பிரச்னைகள், டிஜிட்டல் முறையிலான இயந்திரங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து பயிற்சி பெற வேண்டும். நான்காம் ஆண்டு இறுதியில் மாணவர்கள் ஏதாவது புதிய கண்டு பிடிப்பு, அல்லது இருப்பதை நவீனமாக்குவது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து, தேசிய அளவிலான கருத்தரங்கில் சமர்ப்பித்து சான்று பெற வேண்டும்.
இந்திய நிறுவனங்களான பானுக், டாடா, பெஸ்கோ, சீமன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் எங்கள் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்த நிறுவனங்களின் துணையோடு எங்கள் கல்லூரியில் பானுக் சென்டர் பார் அட்வான்ஸ்டு, சி.என்.சி & ரோபாட்டிக்ஸ், பி.எஸ்.ஜி.அடெப்டு சென்டர் பார் ரோபோட்டிக்ஸ், பி.எஸ்.ஜி.டான்ஃபோஸ் சென்டர் பார் கிளைமேட் & எனர்ஜி, பி.எஸ்.ஜி.சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் இன் ஆட்டோமேஷன் ஆகிய சிறப்பு பயிற்சி கூடங்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்புப் பயிற்சி கூடங்கள் மூலம் சிறு, குறு, மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். இதன் மூலம் பேராசிரியர்களும், மாணவர்களும் தற்போதைய நடைமுறையில் இருக்கும் தொழில் நுட்பங்களைக் கற்று அனுபவமடைந்து தொழிற்சாலைகளில் ஏற்படும் பிரச்னைகளைச் சுலபமாகத் தீர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.
இதில் படித்தவர்கள் உற்பத்தி, பாதுகாப்பு, உணவு, விண்வெளி, மருத்துவம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். படிக்கும் போதே, பல பெரிய நிறுவனங்களிலிருந்து வந்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
Advertisement
இத்துறையில் மேல் படிப்பு படிக்க,அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா,கொரிய உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்கலாம்.
தற்போது வெளிநாடுகளில் வீடுகளிலும் ரோபோவின் பயன்பாடு வந்துவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவிலும் வீடுகளில் ரோபோவின் பயன்பாடு வந்துவிடும். எனவே இந்த படிப்புக்கு நல்ல எதிர்காலமும், வேலை வாய்ப்பும் உள்ளது'' என்றார்கள்.