இளைஞர்மணி

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு...எழுதுங்கள்!

DIN

அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த +2 நிலையில் நடைபெறவுள்ள தேர்வு (Combined Higher Secondary Level Exam) மிக எளிதான தேர்வுகளில் ஒன்றாகும். இத்தேர்வு தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப்4 / வி.ஏ.ஓ தேர்வுக்கு இணையான தேர்வு ஆகும். அடிப்படைத் தகுதி +2 தேர்ச்சி மட்டுமே. கணினி உதவியாளர் (Data Entry Operator) பதவிக்கு +2ல் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். இத்தகுதி 01.08.2018 க்குள் பெற்றால் போதுமானது.
எனவே, இந்த ஆண்டில் +2 எழுத இருப்பவர்களும் 01.08.2018 க்குள் 18 வயது நிரம்பினால் இத்தேர்வை எழுதலாம். விதவைகள் உட்பட பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் இருக்கின்றன. இத்தேர்வைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 
கணினி மூலமாக தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.100 மட்டுமே. பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடிமக்கள் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தேர்வுக்கு முதல் நிலையில் விண்ணப்பிக்க கடைசி நாள் 18-12-2017 மாலை 5 மணி ஆகும். இந்நேரம் வரை மாநில வங்கியில் (SBI) பணம் கட்ட வேண்டிய ரசீதினைப் பெற்றுக் கொள்ளலாம். பணம் கட்டிய பின்பு 20.12.2017 வரை விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதுமிருந்து இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள். ஆதலால் தமிழக இளைஞர்கள் விரைவில் விண்ணப்பிப்பது நலன் பயக்கும். 
முதல் நிலை எழுத்துத் தேர்வு இருநூறு மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. கணினி மூலம் இரண்டு மணி நேரம் நடக்கும். இத்தேர்வில் நான்கு பிரிவுகள் உள்ளன.
பொது அறிவு, புத்திக்கூர்மை, கணிதம், பொது ஆங்கிலம்- இந்நான்கினுக்கும் தலா 50 மதிப்பெண்கள் உண்டு. இத்தேர்வில் குறிப்பிட்ட கட் - ஆப் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 100 மதிப்பெண்களைக் கொண்டுள்ள இத்தேர்வில் ஆங்கிலத்தில் கடிதம், சுருக்கி வரைதல் (Precis), சிறிய கட்டுரை போன்றவை இருக்கும். இத்தேர்வில் குறைந்தது 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இத்தாளில் எடுக்கப்படும் மதிப்பெண், முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும். இரண்டு நிலைகளிலும் வெற்றி பெறுபவர்கள் மூன்றாம் நிலையாக ஆங்கிலம் அல்லது இந்தி தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கணினி மூலமாக நடக்கும் இத்தட்டச்சு தேர்வில் ஒரு நிமிடத்திற்கு 35 ஆங்கிலச் சொற்கள் அடிக்க வேண்டும். தமிழக அரசின் தட்டச்சு தேர்வின் சான்றிதழ் தேவையில்லை. கணினி உதவியாளர்கள் (DEO), ஒரு மணிநேரத்துக்கு 8000 Key Depressions செய்ய வேண்டும். 
பொது அறிவியல், வரலாறு, புவியியல், இந்திய சுதந்திரப் போராட்டம், பொருளாதாரம், அரசியலமைப்புச் சட்டம், அறிவியல், விளையாட்டு, பொதுவானவை, நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் கேள்விகள் அமைந்திருக்கும். 9,10 - ஆம் வகுப்புகளுக்கான வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் 11,12 ஆம் வகுப்புகளுக்கான வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை நன்கு படிக்க வேண்டும். 11, 12 - ஆம் வகுப்புகளுக்கான அறிவியலை மேலோட்டமாக பார்த்தல் நலம். பொதுஅறிவுக்கான ரூ.100 முதல் ரூ.150 வரை உள்ள கையடக்க நூல்களை அநேக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. 
தமிழக அரசின் அநேக பொதுநூலகங்களில் இம்மாதிரியான நூல்கள் கிடைக்கின்றன. முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்களும் கிடைக்கின்றன. "23 வயதுக்குள் இத்தேர்வில் வெற்றி பெற்றால், பல்வேறு உயர்நிலை வேலைகளைக் கண்டிப்பாகப் பெற முடியும்'' என்கிறார் மத்திய அரசின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பாராளுமன்ற செயலகத்தில் தொலைத்தொடர்பு துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற தென்காசி என்.எம்.பெருமாள்.
எளிதான மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) +2 நிலை தேர்வு (CHSL)
முதல் நிலைத் தேர்வு தேதி: 4-3-2018
இரண்டாம் நிலைத் தேர்வு தேதி: 8-7-2018
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT