முகப்பு
இளைஞர்மணி

இயந்திரவியலும் மின்னணுவியலும் இணைந்த படிப்பு!

தொழிற்சாலைகளில் மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரம் செய்து வருகிறது.

Updated On : 26 டிசம்பர், 2017 at 6:20 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:56 PM

தொழிற்சாலைகளில் மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரம் செய்து வருகிறது. திருப்பதியில் லட்டு தயாரிப்பது, பழனியில் பஞ்சாமிருதம் தயாரிப்பது, திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பது, தானியங்கி பால் பூத், தானியங்கி ஏணிப்படிகள் என பல விதங்களிலும் இயந்திரமயமாகிவிட்டன. விஞ்ஞான முன்னேற்றத்தால் வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் விண்கலம் வரை உள்ள உபகரணங்களில் இயந்திரவியலும், மின்னணுவியிலும் கைகோர்த்துள்ளன. இயந்திரவியல் மற்றும் மின்னணுவியல் இணைந்து உருவானதே மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பாகும். இது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பாகும்.
இந்த படிப்பு கற்பிக்கப்படும் கல்லூரிகளில் விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியும் ஒன்று. 
இந்த படிப்பு குறித்து துறைத்தலைவர் க.கண்ணன் நம்மிடம் பகிர்ந்து 
கொண்டவை:
""நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் சலவை இயந்திரம், குளிரூட்டி(ஏ.சி), கார் போன்ற அனைத்திலும் மெக்கட்ரானிக் பொறியியல் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் அறுக்கும் இயந்திரம் தொடங்கி அனைத்து இயந்திரங்களும், ரோபோக்களும் மெக்கட்ரானிக்ஸ் பொறியியலின் வெளிப்பாடாகும். 
இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ வகுப்பு தேர்வில் 60 சதம் மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவு தேர்வு மற்றும் நிர்வாக இடங்கள் மூலமாகவும் இப்படிப்பில் சேரலாம். இந்த படிப்பில் ஆண்டுக்கு 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான பாடத்திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியல், பைத்தான் புரோகிராமிங், பொறியியல் வடிவமைப்பு உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்
படுகின்றன. தொடந்து ஆங்கிலம், மெட்டீரியல் சயின்ஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மெக்கானிக் பொறியியல் மின்னணுவியல் குறித்து பாடங்கள் நடத்தப்படுகின்றன.
காற்றழுத்த மற்றும் நீரியல் தானியக்கம், ரோபோட்டிக்ஸ் போன்ற பாடங்களும், பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. டிஜிடெல் எலெக்ட்ரானிக்ஸ். சென்ட் ஆப் மெட்டிரியல், எலெக்ட்ரிக்கல் மோட்டார் அன்டு டிரைவ், மைக்ரோபிராஸஸ் வித் அப்ளிகேசன், டைமெட்டிக், மெட்ராலஜி அன்டு மெசர்மென்ட் உள்ளிட்டவை குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிக் எலெக்ட்ரானிக், வர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ரேபிட் ப்ரோட்டா டைப்பிங் போன்ற பாடங்களை மாணவர்கள் விருப்பப் பாடமாக 
எடுத்துப் படிக்கலாம்.
இறுதியாண்டில் மாணவர்கள் குறுந்திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதாவது ஏதாவது புதிய கண்டுபிடிப்பு, அல்லது இருக்கும் தொழில் நுட்பத்தை நவீனப்படுத்துவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரித்து கல்லூரியில் வழங்க வேண்டும். பின்னர் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு களப்பயிற்சிக்காக அனுப்பப் படுவார்கள். இத்துறையில் எஸ்.எம்.சி.ஜப்பான் என்னும் சர்வதேச நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். எப்.பி.எஸ்.ஐ. என்னும் தொழில்துறை அமைப்பில் புரிந்துணர்வு செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பல தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ. சி.டி. அகாடமியில் இக்கல்லூரி ஓர் உறுப்பினராகச் செயல் புரிந்து வருகிறது. இதன் மூலமும் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ளவும், திட்ட வேலைகள் செய்யவும், வேலை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இறுதியில் மாணவர்கள் திட்ட அறிக்கை தயாரித்து கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்பின் மூலம் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் தொடக்கத்தில் ஊதியம் கிடைக்கும். ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் அந்தந்த தாய்மொழி கற்றுக் கொண்டால் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.
பி.இ. மெக்கட்ரானிக்ஸ் படிப்பு பலதுறை திறமைகளை மாணவர்களுக்கு அளிப்பதால், அவர்கள் கம்ப்யூட்டர்கள், மைக்ரோ கன்ட்ரோலர்ஸ், பி.எல்.சி.சென்சார்ஸ், நீரியக்க மற்றும் காற்று இயக்க இயந்திரங்களை உபயோகிக்கவும். இவற்றைக் கொண்டு தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து உருவாக்கும் திறமை பெற்றவர்கள் ஆவார்கள். சமூகத்தின் மீது அக்கறையும், திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமும் உள்ள மாணவர்களுக்கு இந்தப் படிப்பு ஒரு வரப்பிரசாதமாகும்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.