கண்டதும் கேட்டதும்: 28
''லெனின் என்ன இது எழுந்து கொள்ளுங்கள்'' என்று அயங இன் Laboratory முதலாளி முருகன் பதறினார். அவர் ஏவிஎம் செட்டியாரின் முதல் மகன் ஆவார்.
''லெனின் என்ன இது எழுந்து கொள்ளுங்கள்'' என்று அயங இன் Laboratory முதலாளி முருகன் பதறினார். அவர் ஏவிஎம் செட்டியாரின் முதல் மகன் ஆவார்.
AVM இன் Laboratory அலுவலகம். அங்கு பல தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருந்தார்கள். அங்கு நான் எடிட்டிங் டேபிளிலும் மற்றும் Laboratory கூடத்திலும் அங்கிருந்த தொழிலாளர்களுடன் வேலை செய்து கொண்டிருப்பேன்.
அங்கு வேலை காலை ஐந்து மணிக்கே ஆரம்பிக்கிறது என்றால் காலை 4.30 மணிக்கே வந்துவிடுவதுடன் வேலை ஆரம்பிக்கும் வரை அங்கு அமர்ந்து கொண்டு யோகா செய்து கொண்டிருப்பேன். பல நாள்கள் அங்கேயே படுத்துக் கொள்வதும் உண்டு. நேரம், காலம் இல்லாமல் 24 மணி நேரமும் வேலை இருந்தாலும் அங்கு உள்ள தொழிலாளர்கள் உள்ளம் துவளாது வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
நான் படுத்துக் கொண்டிருந்தது Laboratory வாசலில். தொழிலாளர்கள் தங்களுடைய அறைக்குச் செல்ல வேண்டுமென்றால் என்னை அவர்கள் தாண்டிக் கொண்டுதான் உள்ளே போக முடியும். ஆகவே தொழிலாளர்கள் பதறிப் போய் முதலாளியிடம் சென்று, நான் வழியில் படுத்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் கூறினார்கள்.
முருகன் தன் அறையில் இருந்து வெளிவந்து நான் படுத்துக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தார்.
""லெனின் எழுந்து கொள்ளுங்கள். ஏன் இப்படி இங்கே படுத்துக் கொண்டிருக்கீங்க. தொழிலாளர்கள் உள்ளே போக வேண்டும் அல்லவா?'' என்றார்.
""அதெல்லாம் இல்ல சார். நீங்க பேசுவதாக இருந்தா நான் எழுந்துக்கிறேன். இல்லன்னா இவங்க என்னைத் தாண்டி உள்ளே போகட்டும்'' என்று கூறிவிட்டு இன்னும் அழுத்தமாக வழியில் படுத்துக் கொண்டேன்.
""சரி... பேசலாம். எழுந்துக்குங்க'' முருகன் இன்னும் பதற்றத்துடன் இருந்தார்.
""பேசுவது மட்டும் இல்ல. இப்போது உங்க கிட்ட ஒரு கோரிக்கை வைக்கப் போறேன். அதை இன்னைக்கே நிறைவேற்றுறதா உறுதி தரணும்'' என்றேன் நான்.
""என்ன கோரிக்கை? உங்களுக்கு அப்படி என்ன இங்கு குறை ஏற்பட்டுடுச்சி. அப்படீன்னா உடனே தீர்த்து வைக்கிறேன். வழியில் இருந்து முதல்ல எழுந்துக்குங்க'' என்று முருகன் கூறினார்.
""இது என் கோரிக்கை இல்ல'' நான் உறுதியாகக் கூறினேன். முருகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். அந்த வாசலின் முன்னே தொழிலாளர்கள் சூழ்ந்து இருந்தார்கள். அவர்கள் பணி செய்ய உள்ளே செல்ல வேண்டியது இருந்தது.
""என்னப்பா இது. ஏன் இவரு இப்படிச் செய்யறாரு. நீங்களாவது சொல்லுங்கப்பா'' என்று தொழிலாளர்களைப் பார்த்து முருகன் கேட்டார்.
ஆனால் யாரும் பதில் கூறவில்லை. ஆனால் ஓர் அடி பின்னே நகர்ந்து கொண்டனர்.
முருகன் தர்மசங்கடத்தின் உச்சிக்கு சென்று நிலை இல்லா மனநிலையில் மீண்டும் என்னைப் பார்த்தார்.
முருகன் என்னைப் பார்த்து, ""லெனின் தயவு செய்து எழுந்து கொள்ளுங்கள். உங்களது கோரிக்கையை நான் நிறைவேற்றித் தரேன்'' என்றார்.
""அதுதான் நான் சொல்லிட்டேனே. இது என் பிரச்னை இல்ல. இதோ நிக்கறாங்களே இவர்களின் பிரச்னை'' என்று நான் பதில் அளித்தேன்.
""அது ஒண்ணும் இல்ல லெனின். நான் அவங்களோடு பேசி அவர்களின் பிரச்னையை ஒரு வாரத்தில் தீர்த்துடறேன். நீங்க முதலில் எழுந்துக்கங்க'' முருகன் ஒரு சமநிலைக்கு வந்து இருந்தார். நான் லேப்பின் வாசலில் படுத்திருப்பது எனது எடிட்டிங் டேபிளில் உள்ள பிரச்னை இல்லை. இப்போது தம்முன் நின்று கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களின் பிரச்னை என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அவர் அந்த தொழிலாளர்களைப் பார்த்து, ""முதலில் இவரை எழுந்து கொள்ளச் சொல்லுங்கள். நான் உங்களிடம் ஒரு வாரத்தில் பேசுகிறேன்'' என்று கூறினார்.
தொழிலாளர்கள் தலை கவிழ்ந்தபடி மெüனம் காத்தனர்.
""சரிப்பா. இப்போது லெனின் படுத்துக் கொண்டிருப்பது அவருக்கான பிரச்னை இல்லன்னு அவரே கூறிட்டாரு. அப்படீன்னா அது உங்களுக்கான கோரிக்கைன்னு தெரியுது. எனக்குத் தெரிஞ்சு அந்த டீ நேரமும், அப்போது உங்களுக்கு கொடுக்கப்படற சிற்றுண்டி பற்றியதாகத்தான் இருக்கும். நான் உங்களிடம் அது பற்றி பேசறேன். இவரை வாசலில் இருந்து முதல்ல எழுந்து கொள்ளச் சொல்லுங்கள்'' முருகன் தொழிலாளர்களைப் பார்த்துக் கூறினார்.
ஆனால் தொழிலாளர்கள் ஒரு வார்த்தையும் பேசாது எனது மீதே தங்களுடைய கண்களை வைத்துக் கொண்டு என்ன நடக்கப் போகிறதோ என்ற தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முருகன் மீண்டும் என் பக்கம் திரும்பி, ""லெனின் கூறுங்கள். நான் இப்போது என்ன செய்ய வேண்டும். நான் அதனை உடனே முடிச்சி வைக்கறேன்'' என்று குனிந்து எனது கரங்களைப் பற்றித் தூக்க முயன்றார்.
நான் எனது கரங்களை அவரிடமிருந்து விலக்கிக் கொண்டேன்.
""அது இல்ல. நான் இப்போது எழுந்து கொண்டதும், இந்த தொழிலாளர்கள் உங்கள் அறைக்கு வருவார்கள். அவர்கள் என்ன கோரிக்கை வைக்கறாங்களோ, அதை இப்போதே பேசித் தீர்ப்பதாக உறுதி அளித்தால் நான் எழுந்து கொள்வேன்'' என்று நான் தீர்மானமாகக் கூறினேன்.
""சரி... சரி... இப்போதே பேசறேன். எழுந்து கொள்ளுங்கள்'' என்று முருகன் அவருடைய கரத்தை நீட்டி எழுப்ப முயன்றார். நான் அவருடைய கரங்களைப் பிடிக்காமல் எழுந்து கொண்டு, நான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை, பேண்டில் பட்டிருந்த தூசிகளை துடைத்துக் கொண்டு எனது எடிட்டிங் ரூமுக்குச் சென்றுவிட்டேன்.
தொழிலாளர்கள் முதலாளியான முருகன் அறைக்குச் சென்று பேசியதில் ஒரு நிமிடத்திலேயே பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. அவர்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றி வைக்கப்பட்டது. மிகவும் சந்தோஷமாக எனக்கு அவர்கள் நன்றி சொல்ல எனது ரூமுக்கு வந்தபோது, எனது கரங்களை அசைத்து, ""அவரவர் தன் வேலைக்குச் செல்லுங்கள்'' என்று கூறிவிட்டு நான் பாட்டுக்கு என் வேலையில் மூழ்கிப் போனேன். இத்தனைக்கும் இந்த பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் இங்கு ஹைலைட். மனித நேயத்தில் உள்ளம் சேர்ந்து விடுமானால் இதெல்லாம் சாதாரண நிகழ்வாகத்தான் எண்ணத் தோன்றும்.
**************
"அறம் செய விரும்பு' என்று ஒüவைப்பாட்டி எழுதிய ஆத்திச்சூடி இன்னும் சரியாக அமைய வேண்டும் என்றுதான் பாரதி புதியதாக ஆத்திச்சூடி எழுதி. "அச்சம் தவிர்' என்றார்.
இதனைக் குழந்தைகளை வாய்விட்டுப் படிக்கக் கூற வேண்டும். வாய்விட்டு குழந்தைகள் கத்தி படிக்கும்போது, அவர்களின் உள்ளம் மேலும் விரிவடைந்து சுகமான சுதந்திரமான காற்றைச் சுவாசிக்கத் தொடங்குவர்.
"அச்சம் தவிர்' என்ன ஆரம்பம் இது? இது யாருக்குக் கூறிய வார்த்தை. ஒüவையின் ஆத்திச்சூடி குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்று உள்ளது. அப்போது அது குழந்தைகளுக்கானதுதான். ஆனால் பாரதியின் புதிய ஆத்திச்சூடி குழந்தைகளின் Alphabetsஇல் வரவில்லை. அப்படியென்றால் அது பெரியவர்களுக்கானதாகத்தான் உணர முடிகிறது.
"அச்சம் தவிர்' இதனை ஏன் பாரதி தனது ஆத்திச்சூடியில் முதலில் வைத்தார் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். சாதாரணமாக அப்ல்ட்ஹக்ஷங்ற்ள் இல் முதலில் வரும் "அ' வில் ஆரம்பித்த போது "அச்சம்' என்ற வார்த்தையை அவன் கைக்கொண்டதாக கூற முடியுமா? அப்படி இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் முன் ஒரு குறிக்கோள் இருந்தது. இது போராட்டக்களமாக அமைந்து இருந்தது. யாரைப் பார்த்தாலும் உளவாளிகளாக, நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்துடன்தான் சுதந்திர வேள்வியில் பங்கு கொண்டவர்கள் தனது பங்கினை ஆற்ற வேண்டியிருந்தது. இதனை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆகவேதான் பாரதி "அச்சம் தவிர்' என்று கூறி மக்களுக்கு உற்சாகமூட்டி இருக்க வேண்டும்.
மனித வாழ்வின் தொடக்கம் இப்போதுள்ளது போல அவ்வளவு வெளிச்சமானதாக ஆரம்பிக்கவில்லை. "வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற புத்தகத்தில் இரை தேடிச் செல்லும் ஏழு பேரில் ஐவர் மட்டுமே தனக்கான உணவுடன் தன் இருப்பிடம் செல்வர். தன்னுடன் வந்தவர்களை இழந்தது பற்றி கவலை இருந்தாலும் உணவு கிடைத்த மகிழ்ச்சியே அங்கு நிலவுவதை அறிய முடிகிறது.
பாய்ந்து வேட்டையாடும் புலியும், சிங்கமும், விழுங்கும் மலைப்பாம்பும், ஆழ்ந்த இருட்டும் மனிதனின் மனதில் முதலில் அச்சத்தை உருவாக்கி இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அப்படியென்றால் அச்சத்தைத் தவிர்த்துவிட்டால் அடுத்து என்ன கேள்வி என்ற கேள்வி இயல்பாகவே தோன்றுகிறது அல்லவா?
சசீந்திரம் கோயிலில் ஒரு போர் வீரனின் சிலை இருக்கிறது. அதில் அந்த போர்வீரன் கொண்டுள்ள கவச உடை, தலை கவசம் மற்றும் அவனுக்கான விதவிதமான கத்திகள் செதுக்கப்பட்டிருக்கும். ஏன் இந்த போர்வீரன் இவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டியவனாகிறான்? அது யாருக்கான உடை? அவனுக்கானதா அல்லது அவன் எதனைக் காப்பாற்ற புறப்பட்டுள்ளான் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
உயிர் போய்விடுமே என்ற அச்சத்தாலேயே அவன் இவ்வளவு கவச உடையைப் பூண வேண்டி இருந்தது. அப்படியென்றால் "அச்சம் தவிர்' என்று எழுதிய பாரதி ஏன் "அன்பு கொள்' என்று ஆரம்பிக்கவில்லை? என்று எண்ணத்தான் தோன்றுகிறது. அன்பு இங்கு இருந்திருந்தால் எந்த அடிமைத்தனமும் இங்கே புகுந்திருக்காது அல்லவா? அடிமைத்தனம் இல்லாத நிலத்தில் அச்சம் விளைந்திருக்காது அல்லவா? In the name of love !!!
AVM Laboratory தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை தங்களுக்குள் இருந்த அச்சத்தால் வெளியே கூறாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் யாரேனும் நான் செய்தது போன்று செய்திருந்தால் அந்த முதலாளியிடம் இருந்து நல்ல முடிவு கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் அச்சத்தால் தங்களது வேலைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்திருந்தனர். நான் அவர்களின் மேல் வைத்திருந்த அன்பால் அவர்களின் அச்சத்தினைப் போக்கினேன். அப்படியென்றால் அன்பு அல்லவா அச்சத்தைத் தவிர்க்கும் மந்திரமாக இருக்கிறது.
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே' - இதன் உண்மை அர்த்தம் புரிய வேண்டுமென்றால், நீங்கள் தினமும் காலை எழுந்ததும் உரத்த குரலில் கூறுங்கள், "அச்சம் தவிர்'
(தொடரும்)