இளைஞர்மணி

கடல் தாமரையும்... ஹெட்போன் பாட்டியும்...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

தினமணி

உன்னோடு போட்டிபோடு! - 4
அந்தத் தீவின் மறுபகுதியில் அலையின்றி இருந்த கடலைப் பார்த்து, "இது கடலா? கண்மாயா? ஏரியா?'' என்று வியப்போடு நான் கேட்டபோது, என்னை இடுப்பளவு நீருக்குள் அழைத்துச்சென்ற அங்கிருந்த மீனவர் ஒருவர், பளிங்குபோன்ற அந்தத் தண்ணீரில் எங்கள் கால்களுக்கு அருகே மணலில் ஒரு பொருளைக் காண்பித்தார். நான் வியப்போடு அதைப் பார்த்தேன். அது கடல்நீருக்குள் பூத்த சூரியகாந்தியைப் போல காட்சி தந்தது. பக்கத்தில் மற்றொன்று. சற்றுதூரத்தில் இன்னொன்று. 

"இது கடல்தாமரையா?'' என்று கேட்ட நான், நீருக்குள் கையைவிட்டு அதைத் தொட முயற்சித்தேன். அந்த மீனவர் என் கையைப் பிடித்துக்கொண்டு, "இது ஒருவகையான கடல்வாழ் உயிரினம்'' என்று சொன்னார். நான் உடனே, "ஓகோ சிப்பி, சங்கு, நண்டுபோலத்தான் இதுவுமா?'' என்று கேட்டுவிட்டு, "அதை எடுங்கள்'' என்றேன். அவர் சிரித்தபடி, "இதை எடுக்க முடியாது. இது மணல்பகுதியில் தன் உடலைப் புதைத்துக் கொண்டு, நீர்ப்பகுதியில் தண்டோடு கூடிய தாமரையைப் போல மலர்ந்திருக்கும். ஏதாவதொரு சிறிய உயிரினம் இதில் வந்து அமர்ந்தாலோ, இதைத் தொட்டாலோ அப்படியே சுருங்கி அதை உள்ளே இழுத்துக் கொள்ளும். அதற்கு உணவு, அந்தச் சிறிய உயிரினம்தான். உண்மையில் இதன் பெயர் கடல்தாமரைதான்'' என்று சொன்னார். 

"தாவரங்களில் கூட தொட்டாச்சுருங்கி எனும் பெயர்கொண்ட சிறிய செடி உண்டு. நாம் அதைத் தொட்டவுடன் சுருங்கிப் போகும். ஆனால், அது பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாது'' என்று நான் சொல்ல, "மனுஷங்கள்லேயே சிலபேரு தொட்டாச்சுருங்கியா திரிவாங்க'' என்று அவரும் சிரித்தபடி சொன்னார். 

"இப்படி ஓர் அதிசயமான கடல்வாழ் உயிரினத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அதுமட்டுமில்லை, இப்படியொரு உயிரினம் இருக்கிறதென்று யாராவது சொன்னாலும் நம்பியிருக்கமாட்டேன். அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று சாதித்திருப்பேன்'' என்று என்னருகில் இருந்த நண்பர் வியப்போடு சொன்னார். 

"இந்த உலகத்தில், தான் கண்ணால் பார்க்காத ஓர் அதிசயப்பொருளை, இருப்பதாக யாராவது சொன்னால், நீங்கள் மட்டுமில்லை, இராமாயணத்தின் நாயகனாகிய ஸ்ரீராமனாக இருந்தாலும்கூட அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கத்தான் செய்வார்!'' என்று நான் சொல்ல, "அதென்ன கதை?''
என அவர்களிருவரும் என்னிடத்தில் கேட்டார்கள். "இன்றைய கூட்டத்தில் எல்லாருக்குமாகச் சொல்லுகிறேனே'' என்று நான் சொன்னவுடன், "அதுவும் சரிதான்'' என்றார்கள், இருவரும்.

நமக்குத் தெரியாதவற்றைத் தேடித் தெரிந்து கொள்ளுதலும்கூட, பொருள் தேடுவதைப் போன்றதொரு தேடுதல் முயற்சிதான். தாகமுடையவன் தண்ணீருக்கு அலைவதைப்போல நம் தேடுதலில் ஓர் ஆவல் இருக்கவேண்டும். நமக்குத் தெரியாத ஒன்று உலகத்தில் எப்படி இருக்க முடியும்? என்று உறுதியாக நினைத்தல் தவறு.

பிற்பகல் உணவுக்கு முன்பாக, குடும்பம் குடும்பமாக வந்த நண்பர்கள் கூட்டம் மேடையோ, ஒலிபெருக்கியோ இல்லாத அவ்விடத்தில், உட்கார நாற்காலிகளும் இன்றி மரநிழலில், கடற்கரை மணலில் அமர்ந்து கொள்ள, அவர்களுடன் வந்த குழந்தைகள் பரபரவென மணலில் குழிதோண்ட ஆரம்பிக்க, இன்னும் சில குழந்தைகள் மணலைக் குவித்து திடீர் நாற்காலிகளை உருவாக்கிக் கொண்டார்கள். இதமான கடற்காற்று வீச, சுற்றிலும் கடற்பறவைகள் சிறிய மரக்கிளைகளில் வந்து அமர்ந்திருக்க, நான் சகல ஜீவராசிகளுக்கும் பேசத் தொடங்கினேன். 

"எங்க ஊர் டெண்ட் கொட்டகையில் இப்படித்தான் மணல் பரப்பியிருப்பார்கள். அதில், சிலபேர் ஒரு மூட்டையளவு மண்ணைக் குவித்து சிம்மாசனம்போல் செய்து அதில் உட்கார்ந்து கொள்வார்கள். பின்னாலிருக்கும் பத்துப் பேருக்குப் படம் தெரியாது. சிலசமயம் அவர்கள் தலைப்பாகை வேறு கட்டியிருப்பர். இப்போது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் மணற்குவியலை மெதுவாகச் சுரண்டச் சுரண்ட, மணற்குவியலில் உட்கார்ந்திருந்தவர் அவரையறியாமல் தரை டிக்கெட்டுக்கு வந்துவிடுவார். ஆளைத் தொடாமலே அவர்களைக் கீழேயிறக்கும் ரிமோட் கன்ட்ரோலைக் கண்டுபிடித்தவர்களே நம் ஆட்கள் தான்'' என்று நான் சொல்லிப் பேச்சைக் கலகலப்பாக ஆரம்பிக்க, அதற்குள் கூட்டத்திலிருந்த ஒருவர், "செல்போனைக் கண்டுபிடிச்சது வேணா வெளிநாட்டுக்காரனா இருக்கலாம். ஆனா அதுல மிஸ்டுகால் கண்டுபிடிச்சது நம்மாளுக'' என்று பெருமிதமாக முழங்கினார்.

அதை ஆமோதித்த நான் பல்வேறு செய்திகளைப் பேசிக்கொண்டு வந்தபோது, என்னை அழைத்துவந்திருந்த நண்பர், "இராமாயணம்... இராமன்... இராமாயணம்... இராமன்'' என்று கத்தினார். எல்லாரும் அவரைத் திரும்பிப் பார்த்து, "விடுங்க அவர் பேசட்டும். அப்புறம் சாப்பிடலாம்'' என்றார்கள். 

நண்பரும், "யோவ், நான் சாப்பாட்ட சொல்லலயா? ராமரைப் பத்தி பேசச் சொன்னேன்'' என்று சத்தம்போட, அவர் என்ன சொல்கிறார் என்று தெரியாத ஒரு பாட்டி, "சரியான சாப்பாட்டு ராமனா இருக்கான். நீங்க பேசுங்க?'' என்று சொல்லிவிட்டுப் பக்கத்திலிருந்த தன் பேத்தியிடம், "இவர் ஏன் பேசாமலே நிக்கிறார்?'' என்று கேட்க, பாட்டி, "அவர் பேசிட்டுதான் இருக்காரு. நீ மொதல்ல இந்த ஹெட்போன கழட்டித் தொல'' என்று சொல்ல, நான் இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும், நாங்கள் கடலுக்குள் பார்த்த கடல்தாமரை பற்றி சொல்லத் தொடங்கினேன்.

உடனே ஒருவர் எழுந்து, "அது செம டேஸ்டா இருக்கும்'' என்றார். அதற்கு நானும், "இருக்கட்டும். என் வாழ்க்கையில் இன்றுதான் நான் இத்தகையதொரு அதிசயத்தைப்பார்க்கிறேன். இப்படியோர் உயிரினம் இருக்கிறதென்று வேறு யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். இராமாயணத்தில் மாரீசன் வதைப்படலத்தில் பொன் மானைப் பார்த்த இலக்குவன், "இப்படி ஒரு மான் உலகத்தில் இருக்காது' எனச் சொல்ல, அதை மறுத்த இராமபிரான், "இந்த உலகத்தில் நாம் பார்க்காத ஒரு பொருளை இல்லை என்று மறுக்கக்கூடாதடா, என் இளையவனே' எனச் சொல்லுகிறான்.

இக்கதையை சற்று விரிவாகச் சொல்கிறேன். கேளுங்கள். சீதையைத் தூக்கிச் செல்ல நினைத்த இராவணன், அதற்குத் தன் மாமனான மாரீசனின் உதவியை நாடினானாம். அந்த மாரீசன்தான், தாடகையின் இளையமகன். சீதையைத் தூக்கிச்செல்ல வேண்டுமென்ற இராவணனின் ஆசையை அறிந்த மாரீசன், பயத்தினால் நடுங்கிப்போய், "இராவணா இந்த ஆசையை விட்டுவிடு. என் தாயையும், மூத்த சகோதரனையும் கொன்றது, இந்த இராமனின் அம்புதான். உன் யோசனைப்படி நான் அங்கே சென்றால், அவன் என்னையும் கொல்லுவான்' என்று மாரீசன் கூற, "நீ போகாவிட்டால் இங்கேயே நான் உன்னைக் கொல்லுவேன்' என்று இராவணன் மிரட்ட, "சரி செத்தாலும் நல்லவன் கையால் சாவோம்' என்று மாரீசன் ஆயத்தமானான்.

அப்போது மாரீசன், இராவணனைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டானாம். "நீயோ, மாயவித்தையில் வல்லவன். இராமனைப்போல் உருமாறி சீதையை நம்ப வைத்து அவளை அழைத்துக்கொண்டு வர உன்னால் முடியாதா?'
எனக் கேட்க, "இராவணன் சொன்ன பதில் என்ன தெரியுமா?' என்று நான் கூட்டத்தைப் பார்த்து கேட்க, அந்த ஹெட்போன் பாட்டி எழுந்து சொன்ன பதிலைக்கேட்டு நான் மலைத்துப்போனேன். அந்தப் பாட்டி என்ன சொன்னது தெரியுமா?
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT