கட்டுமானத்துறையில் உயர் படிப்பு!
கட்டுமானத்துறை இன்று வளர்ந்துவரும் ஒரு துறையாகும். கட்டுமானத்துறையில் பணி செய்ய கட்டமைப்பு பொறியியல் பட்ட மேற்படிப்பு
கட்டுமானத்துறை இன்று வளர்ந்துவரும் ஒரு துறையாகும். கட்டுமானத்துறையில் பணி செய்ய கட்டமைப்பு பொறியியல் பட்ட மேற்படிப்பு அவசியமாகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில், கட்டமைப்பு பொறியியல் பட்டமேற்படிப்பு (M.E - Structural Engineering) உள்ளது. இந்த படிப்பு குறித்து முதல்வர் எஸ்.அறிவழகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""கட்டிடம் கட்டும்போது உள் கட்டுமானத்தில் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க உதவுவதே கட்டமைப்பு பொறியியல் படிப்பாகும். இது இரண்டு ஆண்டு முதுகலை பட்டப் படிப்பாகும். இந்த படிப்பில் சேருவதற்கு இளங்கலை கட்டடவியல் பொறியியல் படிப்பு படித்திருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆண்டுக்கு 30 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்த படிப்பில் சேர்பவர்கள் ஏற்கனவே இளங்கலையில் கட்டிடவியல் படித்திருப்பதால், கட்டிடம் குறித்த அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்கும். எனவே கட்டமைப்புக்குத் தேவையான தூண், கிடைமட்ட தூண், கட்டமைப்புச் சுவர், தூண் மற்றும் கிடைமட்டத் தூண் இணையும் இடம், தனித்துவம் வாய்ந்த கான்கிரீட், மற்றும் சிமெண்ட் போன்றவற்றின் பண்புகள், உறுதித் தன்மை, திட்ட கட்டமைப்பு பகுத்தாய்வு போன்றவை குறித்து பாடமும் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். கட்டிடம் கட்ட நவீனத் தொழில்நுட்பம், நில நடுக்கம், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்காத கட்டிடம், தீ விபத்தினைத் தாங்கும் சக்தி உள்ள சுவர்கள் உள்ளிட்டவை குறித்து மென்பொருள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். கடல் பாலங்கள் கட்டுவது குறித்து பாடம் நடத்தப்படும். அணை கட்டுவது, அதன் வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்தும் பாடம் நடத்தப்படும்.
Advertisement
கட்டிடம் குறித்து அடிப்படை அறிவினைத் தருவதுடன் மாணவர்கள் ஆராய்ச்சி அனுபவங்களில் பங்கு பெற தேவையான அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் தரும் ஆய்வு கூடம் மூலம் மாணவர்களின் திறனை மேலும் வலுப்படுத்துகிறோம். இறுதியில் மாணவர்கள் 8 மாதகாலம் கட்டுமான நிறுவனங்களில் நேரடி பயிற்சி பெற்று திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அந்த திட்ட அறிக்கையை சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பட்டம் வழங்கும். இந்த படிப்பு படித்த மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளும், கட்டுமானத்தொழில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும் உள்ளன. வெளிநாடுகளிலும் இந்த படிப்புக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
"புதியவை குறித்து படிக்க வேண்டும். சவாலான வேலைகளைச் செய்ய வேண்டும். சாதிக்க வேண்டும்' என நினைக்கும் மாணவர்களுக்கு இந்த படிப்பு ஒரு நல் வாய்ப்பாகும்'' என்றார்.