முகப்பு
இளைஞர்மணி

கட்டுமான மேலாண்மைத்துறையில் ஓர் உயர்படிப்பு!

சர்வதேச அளவில் தற்போது கட்டட கட்டுமானத்துறை வேகமாக வளர்த்து வருகிறது.

Updated On : 2 ஜனவரி, 2018 at 12:46 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:22 PM

சர்வதேச அளவில் தற்போது கட்டட கட்டுமானத்துறை வேகமாக வளர்த்து வருகிறது.
அடுக்குமாடிக் கட்டடங்கள், மாடியில் நீச்சல்குளம், அடிப்பாகத்தில் கார் நிறுத்தும் இடம் என கட்டடக்கலையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கட்டட வடிகால், கழிவுநீர் அமைப்புகள், கட்டட நிர்மாணம், நெடுஞ்சாலைகள் அல்லது ரயில்பாதைகள் நிர்மாணிப்பது போன்ற பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இளங்கலை கட்டடப் பொறியியல் படிப்பு மட்டும் போதாது. எனவே கட்டடப் பொறியியல் மேலாண்மை பட்ட மேற்படிப்பு (ME Construction Engineering & Management) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கான செயல்முறைகளுக்கு இளங்கலை மற்றும் பட்டதாரி அளவிலான ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான அறிவை வளர்த்து அதை கட்டடத்துறைக்குப் பயன்படுத்துவதே இந்த படிப்பின் நோக்கமாகும்.
இந்தப் படிப்பு குறித்து நாகர்கோவில் அருணாசல மகளிர் பொறியியல் கல்லூரியின் பொறியியல்துறைத்தலைவர் பி.பார்த்தசாரதி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""இந்தப் படிப்பில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, மாதிரி கட்டடப் பொருள்கள், கட்டடம் கட்டதேவையான உபகரணங்கள், புதிய தொழில் நுட்பத்தில் காங்கீரிட் அமைப்பது உள்ளிட்ட பாடங்களும் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்தி, காங்கிரீட் கலவை, அதன் தன்மை, உறுதித் தன்மை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கட்டடப் பொறியியல் மேலாளர்கள் தங்கள் திட்டங்களுக்கான வடிவமைப்புக்களைத் தயாரிக்கவும், ஆய்வு செய்யவும், கணினிகள் மற்றும் கட்டுமான மேலாண்மை மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் முடிவைக் காணக் கூடிய தகுதி வாய்ந்த பொறியாளர்களின் அணிகளை ஒருங்கிணைப்பானதற்கானதாகும். மென்பொருளைப் பயன்படுத்தி கட்டட மதிப்பீடு, அட்டவணைத் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பெரும்பாலும் கட்டுமானப் பொறியியல் மேலாளர்கள் ஒரு மைய அலுவலகத்திருந்து வெளியே வேலை செய்வதுடன், வேலை இடங்களுக்கு அடிக்கடி வருகை தந்து ஆய்வு செய்ய வேண்டும். காலி நிலப்பகுதிகளுக்கு நில அளவை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து மாணவர்களுக்கு பாடமும் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் தொடந்து களஆய்வு செய்து குறுந்திட்ட அறிக்கை தயாரித்து கல்லூரியில் வழங்க வேண்டும். கட்டட வேலைகளை ஆய்வு செய்யவும், திட்டத்தில் சரியான தரநிலைகள் பராமரிக்கப்படுவதை சரிபார்க்கவும் மாணவர்கள் நேரடியாகச் சென்று பயிற்சி பெறுவார்கள்.
ஒரு திட்டத்தைத் தொடங்கும் முன்னரே வேலைத் தளத்தை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமான பணியாகும். சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்வது, உள்ளூர் கட்டடவிதிகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடல் செய்ய ஏற்பாடு செய்யப்படும். வேலை தொடங்குவற்கு முன்பே வரைபடம், கட்டுமானச் செலவுகள் குறித்து மாதிரி திட்ட அறிக்கை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். இறுதியில் கட்டுமான தளத்திற்கு நேரில் சென்று, பயிற்சி பெற்று, ஏதாவது ஒரு புதிய தொழில் நுட்பம் குறித்து திட்ட அறிக்கை தயாரித்து கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுமானப் பொறியியல் மேலாளர்கள் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் பணியிடங்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பாளர்களாக இருப்பார்கள். எனவே அது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். வலுவான பிரச்னைகளுக்குத் தீர்வு அளிப்பவர்களாகவும், கணிதத்திறன் கொண்டவர்களாகவும் கட்டுமான பொறியியல் மேற்பார்வையாளர்கள் இருப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் கட்டுமானப் பொறியியல் மேலாளர் வேலை மற்றும் தேவை அதிகரித்து வருகிறது. அடுத்த 8 முதல் 10ஆண்டுகளில் தொழில்துறை புள்ளி விபரங்களின் படி கட்டுமானத்துறை 20 முதல் 25 சதம் வரை வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுமானப்பணிக்கும் தகுதிவாய்ந்த கட்டடப் பொறியியல் மேலாளர் தேவைப்படுகிறார்கள். எனவே இந்த படிப்பு படித்தால் வேலை 
நிச்சயம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.