இளைஞர்மணி

21 வயது இளம் நீதிபதி!

DIN

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரின் மான்சரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங். கடந்த வாரம் ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்ற இளைஞர். ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தேர்வில் வெற்றி பெற்று தனது 21 வயதில் நாட்டின் முதல் இளைய நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
21 வயதில் இவர் பெற்ற வெற்றி வெறும் அதிர்ஷ்டமல்ல. அதன் பின்னால், இன்றைய இளைஞர்களுக்கு பல செய்திகள் மறைந்துகிடக்கின்றன. பல்வேறு பட்டங்களைப் பெற்றிருந்தாலும், வேலை கிடைக்கவில்லையே என வருந்திக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த எச்சரிக்கை உணர்வு, மாற்றுச்சிந்தனை, திட்டமிடல், உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற பலவற்றையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தும் உத்தியை உணர்த்திஇருக்கிறார் மயங்க்.
இவர் தனது மேல்நிலைக் கல்வியை இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் கொண்ட அறிவியல் பிரிவில் முடித்தார். அதிக மதிப்பெண்கள் பெற்றதால், ஐ.ஐ.டி.யில் சேர்ந்து பொறியியல் பயில்வதற்காக, உறவினர்கள் அவரை JEE நுழைவுத் தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினர். ஆனால், பொறியியலைக் காட்டிலும், சட்டம் படிக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அவரது முடிவை பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2014 - இல் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. எல்.எல்.பி. 5 வருட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் அவர் சேர்ந்தார். 2018-19- இல் தான் அவரது பட்டக் கல்வியின் இறுதி ஆண்டு. இந்த நிலையில், உரிமையியல் நீதிபதி பதவிக்கான ஆள்சேர்ப்புக்காக, ராஜஸ்தான் நீதித்துறை சேவை தேர்வு நவம்பர் 16, 2018 -இல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்ட போது, தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 23. அதனால், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து மயங்க் யோசிக்கவில்லை. ஆனால், டிசம்பர் 2018 இல் இந்த வயதுவரம்பை 21 ஆக குறைத்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.1, 2019 இறுதி நாள் என்ற நிலையில், வாய்ப்பை நழுவவிடாமல், உடனடியாக இணையம் வழியாக விண்ணப்பித்தார் மயங்க்.
முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 நிலைகளைக் கொண்ட போட்டித் தேர்வில், நிகழாண்டு மார்ச் 31 -ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதேவேளையில், 2 மாத இடைவெளியில் (மே 31) மயங்கின் 10 ஆவது செமஸ்டர் தேர்வும் தொடங்கியது. இந்த 2 தேர்வுக்கும் ஒரே நேரத்தில் தயாராக வேண்டிய நிலையில் மிக கடுமையாக உழைத்தார் மயங்க்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீதித் துறை பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவு வெளியானது. தனது திட்டமிடல் மற்றும் கடின உழைப்பால், இந்தத் தேர்வில் பங்கேற்ற 27 ஆயிரம் சட்டப் பட்டதாரிகளில், வெற்றிபெற்ற 3,675 பேரில் ஒருவராக மிளிர்ந்தார் மயங்க்.
அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 7, 8 தேதிகளில் நடைபெற்ற பிரதான தேர்வில் 300-க்கு 169 மதிப்பெண்களையும், தொடர்ந்து நடைபெற்ற நேர்காணல் சுற்றில் 35-க்கு 28 மதிப்பெண்களையும் பெற்று வெற்றி பெற்றதோடு, முதலிடத்தையும் பிடித்தார். தில்லி, ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 21 வயது இளைஞர்கள் நீதித்துறை சேவைக்கான தேர்வுகளை ஏற்கெனவே எழுதியிருந்தாலும் அவர்களில் யாரும் வெற்றி பெறவில்லை.
தேர்வில் வெற்றிபெற்றது குறித்து மயங்க் கூறுகையில், ""நான் தேர்ச்சி பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், முதலிடம் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எனது குடும்பத்தில் சட்டத் தொழிலில் ஈடுபடப் போகும் முதல் நபர் நான்தான். நீதித்துறை தேர்வுக்கான தயாரிப்புகளோடு, எனது பட்டப்படிப்பு தேர்வுக்கான தயாரிப்புகளையும் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. நீதித்துறை தேர்வு தயாரிப்புக்காக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஒதுக்கினேன். கடின உழைப்பு மட்டுமே தேர்வுகளை வெல்ல எனக்கு உதவியது.
நான் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவில்லை. தேர்வை எதிர்கொண்டது கிட்டத்தட்ட ஓராண்டு கால செயல்முறை என்பதால், எப்போதும் எழுச்சியோடு இருப்பது சிரமம். அதனால், நான் ஒரு அட்டவணையைத் தயாரித்து, அதன்படி செயல்பட்டேன்.
நேர்காணல் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கள வல்லுநர்கள் இருந்தனர். அவர்கள், வழக்கமான சட்டங்கள் முதல் சபரிமலை மற்றும் அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வரை பல கேள்விகளை என்னிடம் கேட்டனர். சபரிமலை குறித்த மறுஆய்வு வழக்கு எனது நேர்காணலுக்கு ஒருநாள் முன்னதாக வந்தது. அதைப் பற்றி செய்தித்தாள்களில் அன்றே படித்திருந்ததால், இந்த கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடிந்தது.
சமுதாயத்தில் நீதிபதிகளுக்கு உள்ள முக்கியத்துவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நான் நீதித்துறை சேவையை நோக்கி ஈர்க்கப்பட்டேன். ஒரு நீதிபதியாக, சட்டத்தின் கதவைத் தட்டும் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த விரும்புகிறேன். என் வயது இளைஞர்கள் அதிகமாக திசைதிருப்பப்படுகின்றனர். சமூக ஊடகங்கள் அல்லது நண்பர்களின் அழுத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். அவர்கள் தங்கள் ஆற்றலை தங்கள் குறிக்கோள்களில் செலுத்தினால் உயர்ந்த இலக்குகளை அடையமுடியும்'' என்றார் மயங்க். 
ராஜஸ்தான் நீதித்துறை சேவை தேர்வில் மற்றொரு சாதனையும் நிகழ்ந்திருக்கிறது. நீதிபதி பதவிக்கு தேர்வான 197 பேரில் 127 பேர் (64%) பெண்கள் என்பதுதான் அது. முதலிடம் பெற்ற மயங்க்-ஐ தொடர்ந்து, 2 ஆவது இடத்தை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவி தன்வி மாத்தூர் (23), 3 ஆவது இடத்தை மாணவி தீக்ஷô மதன் (22) ஆகியோர் பிடித்துள்ளனர். தன்வி, அமிட்டி பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டக்கல்வி பயின்றவர். பெண் தேர்வர்களில் முதலிடம் வகிக்கிறார்.
அதோடு, தேர்வில் வென்றவர்களில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 8 பேர் பெண்கள். இவர்களில் 3 பேர் 22 வயது, 2 பேர் 23 வயது, 2 பேர் 26 வயது, ஒருவர் 28 வயது உடையவர்கள். முதலிடம் மற்றும் 10 ஆவது இடம் பெற்ற ஆண்களில் 10 ஆவது இடத்தைப் பெற்ற ஆண் தேர்வரும் 23 வயதுடையவர். நீதித்துறை தேர்வெழுத அதிகபட்சமாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தேர்வில் வென்றவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் குறைவான இளையோர் என்பது குறிப்பிடத்தக்கது.


- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT