எல்லாருக்கும் 86,400 விநாடிகள்!
""இந்தா... பத்து நிமிஷத்தில வந்துருவேன், “தெரு முக்குல திரும்பிட்டேன். இனி ஒரே நிமிஷம்தான்... உங்க முன்னால நிற்பேன்''
""இந்தா... பத்து நிமிஷத்தில வந்துருவேன், “தெரு முக்குல திரும்பிட்டேன். இனி ஒரே நிமிஷம்தான்... உங்க முன்னால நிற்பேன்''
""கம்ப்யூட்டர் முன்னாலதான் உட்கார்ந்திருக்கேன்... அடுத்த "செகண்ட்' உங்களுக்கு மேட்டர மெயில் பண்ணிருவேன்'' என்றெல்லாம் "சொடக்கு'ப் போடுகிற நேரத்தில் காரியத்தை முடித்துவிடுவதாக உறுதி கூறி நம்மை மணிக்கணக்கில்... ஏன் நாள் கணக்கில் கூட காக்க வைத்துவிட்டு, பிறகு அதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் இயல்பாகத் திரியும் மனிதர்களை நாம் கண்டிப்பாக கடந்து வந்திருப்போம். ஏன், நம்மில் பலர்கூட இந்த ரக "நேரம் தவறாத' மனிதர்களாகவும் இருந்திருப்போம்; இப்போதும் இருக்கலாம்.
ஒவ்வொருவரின் கடிகாரமும் அவரவர் இயல்பு, சுறுசுறுப்பு, சோம்பல் மற்றும் தடம்பிறழும் நாக்கின் தன்மையெல்லாம் பொருத்து தனித்தனியே வெவ்வேறு நேரத்தை காட்டுமேயானால்... எவ்வளவு அழிவுகள், நஷ்டங்களை இம்மனித இனம் சந்திக்க நேரிடும்? காலம் தாழ்த்துவதால் ஏற்படும் துயரங்கள், நஷ்டங்களுக்கு "டைம் (நேரம்) சரியில்லை' என்று சொல்லி ஆறுதல்படுத்திக்கொள்ளும் இயல்புடையவர்கள் அதிகரித்து போனதால்தான் IST - Indian Standard Time (இந்தியத் தர/சீர் நேரம்)ஐ, Indian Stretchable Time (இந்திய நீடித்த நேரம்) என்று நம்மவர்களை அயல்நாட்டினர் இன்றும் கேலி பேசுகிற நிலை தொடர்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வரவு செலவு (Turn over) பண்ணக்கூடிய ஒரு தொழிற் குடும்பத்தின் மூத்தவரும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்தனர்.“நாளை சரியா காலை 6:15 மணிக்குக் கிளம்பித் திரு.ஷ் அவர்களைச் சந்தித்து விடுவோம்” என்று தொழிலதிபரிடம் அவரது நண்பர் கூறினார். நண்பரை உற்றுப்பார்த்த தொழிலதிபர் கேட்டார், “""யாருடைய 6:15 க்கு? Whose 6.15?''” என்று. தொழிலதிபரின் கேள்வியைப் புரிந்து கொண்ட நண்பர் சிலாகித்துச் சிரித்தார். அதற்கு எதார்த்தமான காரணமும் உண்டு. ஏனென்றால், தொழிலதிபருக்கு 6:15 நிகழ்ச்சிக்கு 6:05-க்கே தயாராகி நிற்கின்ற வழக்கம். அவரது நண்பருக்கோ 6:15 நிகழ்ச்சிக்கு 7 மணிக்கு அவசர அவசரமாய் புறப்பட்டு வந்து நிற்கின்ற வழக்கம். தொழிலதிபரின் “யாருடைய 6:15?” என்கிற கேள்வி சரிதானே?
ஒரு நாளில் 24 மணிநேரம் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான் என்றாலும், எல்லோரும் அதை முழுமையாகச் சரியான விதத்தில் பயன்படுத்துவதில்லை. ஒரே நாளில் பல நாட்களுக்கான பணிகளைச் செய்கிறவர்களும் உண்டு. இவர்கள் வாழ்க்கையில் சாதித்து வெற்றியாளர்களாகவும் பலருக்கு வழிகாட்டிகளாகவும் வலம் வருகிறார்கள். பலர் ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கான வேலையைக் கூடச் செய்யாமல் அடுத்தவர்களைச் சார்ந்து பலரைக் குற்றம் சொல்லிப் போராடி உயிரோடிருக்கிறார்கள். ஆம், அவர்கள் வாழவில்லை.
ஒரு வினாடிக்குள் நிமிடங்களை திணித்து... நிமிடங்களுக்குள் பல மணி நேர பணிகளைத் திணித்து... நேர்த்தியாக, சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் உண்டு. அதே நேரம், சுறுசுறுப்பிற்கும் பரபரப்பிற்கும் வேறுபாடு அறியாது, விரைவாக...நிறைய, பல பணிகளைச் செய்கிறேன் பேர்வழி என்று, காரியங்களைச் சிதைத்து, தனக்கும் பிறருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி... "ஒட்டிக்கு ரெட்டி' என்பார்களே அப்படி ஒரே வேலையை மறுபடியும்... மறுபடியும் செய்கின்ற பரபரப்பானவர்களும் உண்டு. "பதறாத காரியம் சிதறாது' என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஒரு காரியம் செய்கின்றபோது பதற்றம் ஒருவரை ஆட்கொள்ளாது இருக்க வேண்டும் என்றால், அக்காரியம் உரிய நேரத்தில், போதிய கால அவகாசத்தோடு செய்யப்பட வேண்டும்.
""ஒத்திபோடுதல் மரணத்திற்கு ஒப்பானது; அது விஷம்'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
நாம் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று. முதல் இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா 1997-இல் "கொலம்பியா' என்கிற விண்கலத்தின் மூலம் விண்ணுக்குச் சென்றார். பிப்ரவரி 1 , 2003 அன்று அவர் பயணம் செய்த விண்கலம் இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி கல்பனா சாவ்லா மரணமடைந்தார். இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்னர் கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவிற்கும் அவரது குழுவினருக்கும் வெறும் 30 வினாடிகள் அவகாசத்தில் இயந்திரக் கோளாறைச் சரி செய்துகொள்கிற வாய்ப்பினைக் கொடுத்தது. முப்பது வினாடிக்குள் ஒரு விண்கலத்தின் கோளாறைப் பழுது நீக்குவது அவ்வளவு எளிதா என்ன? சாதனையாளர்களுக்கு இப்படி நேரமின்றி நெருக்கடி. சாதரணமானவர்களுக்கு நேரத்தை எப்படிக் கடத்துவது என்பதே நெருக்கடி. “
Every Seconds Counts...ஆம், "ஒவ்வொரு வினாடியும் கணக்கிடப்படுகிறது' என்கிற கொள்கை முழக்கத்தோடு ஒரு தனியார் பன்னாட்டு கொரியர் நிறுவனம் இயங்குகிறது. நேரத்தை பற்றிய அந்த நிறுவனத்தின் இந்தப் புரிதலால்... அந்நிறுவனம் வெற்றியும் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு விடியலிலும் நாம் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 86,400 கோடிகளை அல்லது வரங்களை இயற்கை நமக்கு பரிசளிக்கிறது. ஒரு சிலருக்கு இந்த 86,400 என்பது 24 மணி நேரத்தை நிரப்புகின்ற வினாடிகளாகத் தெரியலாம். ஆனால், இந்த 86,400- ஐ இயற்கை நமக்களித்த ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக உணர்ந்தவர்கள் எல்லோருமே மானுட மேன்மைக்காக வாழும் வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர்.
இவையெல்லாவற்றையும் மனதில் கொண்டு "யாருடைய நேரம்?' என்று கேட்பவர்களாக நாமும் மாறினால் நம் எல்லாருக்கும் நன்மையே!