முகப்பு
இளைஞர்மணி

மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 62: உயிர் பயமா? எதிர்ப்பை உருவாக்கி வெல்வோமா?

கரோனா மிகப்பெரிய உயிர் பயத்தை மனித குலத்திற்கு உருவாக்கி விட்டது. கரோனா வைரஸ்கள் (nCoV) ஒரு பெரிய குடும்பமாகும், அவை சளி முதல் கடுமையான சுவாச கோளாறு வியாதிகளை தோற்றுவிக்கும் MERS-CoV மற்றும்

Updated On : 2 ஏப்ரல், 2020 at 4:38 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:50 PM


கரோனா மிகப்பெரிய உயிர் பயத்தை மனித குலத்திற்கு உருவாக்கி விட்டது. கரோனா வைரஸ்கள் (nCoV) ஒரு பெரிய குடும்பமாகும், அவை சளி முதல் கடுமையான சுவாச கோளாறு வியாதிகளை தோற்றுவிக்கும் MERS-CoV மற்றும் SARS-CoV போன்ற நோய்களுக்கு காரணமாகின்றன. கரோனா வைரஸ் (SARS-Co2) மனிதர்களில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்படாத ஒரு புதிய வகை பிறழ்ந்த திரிபு (Mutated Strain) நோயாகும். நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் சுவாசப் பிரச்னைகள், காய்ச்சல், இருமல்,மூச்சுத் திணறலாகும். மிகவும் கடுமையானசந்தர்ப்பங்களில், தொற்று நிமோனியா,கடுமையான சுவாச நோய்க்குறியாகவும்,சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இறப்பு கூட
ஏற்படலாம்.

25 மார்ச் 2020 -இல் உலகம் முழுவதும் 4,17,348 பேர் கரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு, 18,595 உயிரிழப்பைச்சந்தித்து, இதிலிருந்து 1,08,300 பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இதில் சீனாவில் 81,171 பேர் பாதிக்கப்பட்டு (3,277) பேர் இறந்திருக்கிறார்கள், இத்தாலியில் 69,179 (6,820), அமெரிக்காவில் 52,921 (684) ஸ்பெயினில் 39,676 (2800), ஜெர்மனியில் 32,986 (157),

ஈரானில் 28,811 (1934), பிரான்ஸ் 22,304 (1,100), மற்ற நாடுகள் 10,000 - த்திற்கும் கீழே பாதிப்பு, இறப்பு 500 -க்கும் கீழே தான். இதில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 536, இறப்பு 10, புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57, மீண்டுவந்தவர்கள் 40, சிகிச்சையில் இருப்பவர்கள் 486.

Advertisement

இதில் அதிக அளவில் மீண்டவர்கள் சீனர்கள்தான். பாதிக்கப்பட்டவர்கள் 81,171. சிகிச்சையினால் குணமானவர்கள் 73,159 பேர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், நல்ல சிகிச்சை கொடுத்து சீனா அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. ஆனால் இத்தாலியில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்பு அதிகம்? இத்தாலியும், சீனாவும் பக்கத்து நாடுகள் அல்ல. சீனாவிற்கு பக்கத்து நாடு இந்தியா. சீனாவைப்போல் பாதிப்பு இந்தியாவில் இல்லை. அப்புறம் எப்படி இத்தாலி சீனாவை விட அதிகம் பாதிக்கப்பட்டது. இவ்வளவு மோசமாக இத்தாலி பாதிக்கப்பட்டதற்குக் காரணம், வடக்கு இத்தாலி லெதர் மற்றும் டெக்ஸ்டைல் கம்பெனிகளை சீனாவிற்கு விற்க, சீனா வுகான் மாநிலத்தில் இருந்து 1 லட்சம் சீனர்களை இறக்குமதி செய்து தொழிற்சாலைகளில் வேலைக்குப் பயன்படுத்தினார்கள். அதனால் அதிக கரோனா நோய் தொற்று பரவி சீனாவை விட செத்தவர்கள் அதிகம்.

இத்தாலியில் இறந்தவர்களில் அதிகம் முதியோர்கள். புகைப்பிடித்து நுரையீரல் கெட்டவர்கள், அதோடு உலக சுற்றுலாப் பயணிகள், எல்லாம் சேர்ந்தது. இத்தாலியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். இந்த நோய் மனிதர்களிடம் இருந்து தும்மல் நீர்திவலைகள் மூலமும், அவை படிந்திருக்கும் இடங்களில் கையை வைத்து அதை வாய், மூக்கு, கண், காது மூலம் நம் உடலுக்குள் செல்ல அனுமதிப்பதால் பரவுகிறது. இது பெரும்பாலும் முதியோர்களை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களைப் பாதிக்கிறது.

மரணமடைந்தவர்களில் சதவிகிதம் 80 வயதிற்கும் மேலே 14.8%, 70-79 வயதினர் 8.0%, 60-69 வயதினர் 3.6%, 50-59 வயதினர் 1.3%, 50 வயதிற்கும் கிழே இறந்தவர்கள் 0.4 சதவிகிதத்திற்கும் கீழ் தான்.

எனவே, வெளிநாட்டில் இருந்தும் குறிப்பாக சீனாவில் இருந்தும் ஜனவரி 2020- இல் இருந்து இந்தியா வந்தவர்கள், அவர்கள் யாரோடு தொடர்பு கொண்டார்கள், எங்கு தங்கினார்கள், அவர்களை அழைத்து சென்ற டிரைவர்கள், இப்படி இந்த இணைப்புகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு கரோனாவின் அறிகுறிகள் இருக்கின்றனவா என்று கண்டறிய வேண்டும். இந்தியாவில் விமான நிலையங்கள் இருக்கும் நகரத்தில், இந்த இணைப்பில் தொடர்புடைய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு மருத்துவர்களை அனுப்பி, யாருக்கேனும் கரோனா தொற்று இருக்கிறதா என்று கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி அந்த, அந்த பகுதியிலேயே தனிமை வார்டுகளை பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் உருவாக்கி சிகிச்சை கொடுத்து இருக்க வேண்டும். இப்படி செய்திருந்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த, அந்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அங்கேயே கொடுக்கப்பட்டிருக்கும். பதற்றம் ஏற்பட்டிருக்காது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சிகிச்சை ஏதும் இன்றி மரணத்தை எண்ணிக் கலங்கி இருக்கும் சூழல்தான் இங்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களைத் தொலைதூர மருத்துவத்தின் மூலம் கண்காணித்து, அவர்களது மனஉளைச்சலில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.

தமிழக அரசு 24-31 மார்ச் 2020 வரை ஊரடங்கு உத்தரவு 23- இல் பிறப்பித்தது. உடனே மக்கள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்ப பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கில் கூடி செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களில் எத்தனை பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவில்லை. இவர்கள் தங்கள் ஊருக்குச் சென்று தாங்கள் பெற்றோர்களுக்கும் மற்ற நோயாளிகளுக்கும் கரோனா வைரஸ் பரப்புவதற்கு மிகவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அடுத்த 20 நாட்களில் கிராமங்கள் அதிகம் பாதிக்கப்படவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு விட்டது.

ஆனால் இதுவரை தமிழக அரசு சுகாதாரத்துறை 24 மார்ச் 2020 வரை 15,298 பேரை வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் மக்கள் வீட்டிற்குள் தான் இருக்கிறார்கள். பெரியவர்களையும், நோயாளிகளையும் தனிமைப்படுத்தி, குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும். போர்கால அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்கு பிரஷர் மருத்துவர்களைக் களம் இறக்கியிருந்தால், வீட்டில் இருப்பவர்கள் ஆங்காங்கே அந்த பகுதிகளில், ஊர்களில் மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால், வீட்டில் இருப்பவர்களுக்கும்,
மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க முடியும்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் 9154. இதில் அட்மிட் செய்யப்பட்டவர்கள் மட்டும் 116, கரோனா சோதனை செய்யப்பட்டவர்கள் 743, இதில் கரோனா தொற்று இருப்பவர்கள் 15, வியாதியில் இருந்து குணமானவர்கள் 1, மதுரையில் முதல் மரணமடைந்தவர் 1, அவருக்கு பல்வேறு வியாதிகள் இருந்ததினால் இந்த மரணம் நேர்ந்தது.

இவ்வளவு ஏற்பாடு செய்தும், பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் உலகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இன்றைக்கு ஊரடங்கு என்பது வரை போக வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 25 மார்ச் 2020, 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கூட "கரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்காக ரூ. 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த கடினமான சூழலில் அரசு அறிவுரைகளை ஏற்று அனைத்து நாட்டு மக்களும் தங்களைத்தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினால்தான் நாடு கடினமான சூழலில் இருந்து மீள முடியும்' என்றார் பிரதமர்.

கரோனா வைரஸ் தாக்குதலினால் உலகமெங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உயிர் பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அச்சத்தை பன்மடங்கு அதிகமாக்கிவிட்டிருக்கிறது. வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி என்பதில்தான் நமது கவனம் முழுவதும் குவிந்திருக்கிறது. அதற்கே ஒவ்வொரு நாட்டு அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த படாத பாடுபட வேண்டியிருக்கிறது.

"ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொண்டால், மருத்துவ வரலாற்றில் கரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் மிகப்பெரிய சாதனை படைக்கும் உண்மையான வாய்ப்பு உள்ளது' என்று 21 மார்ச் 2020 அன்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ட்வீட் செய்தார். சில நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் / அஜித்ரோமைசின் மருந்துகளை கொடுத்து குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான்பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் மிகவும் நோய்வாய்ப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்கின்றன. ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப்பற்றிய ஒரு பயம் இருந்து கொண்டிருக்கிறது.

அதாவது, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் SARS-CoV-2 நோய்த்தொற்றின் நோய்த்தடுப்புக்கான அனுபவ பயன்பாட்டிற்காக இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR), 22 மார்ச் 2020 -இல் ஒரு பரிந்துரை செய்திருக்கிறது.

COVID-19 க்கான தேசிய பணிக்குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு SARS - COV 2 நோய்த்தொற்றின் முற்காப்புக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. அதாவது COVID - 19- இன் சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள அறிகுறியற்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆய்வகச் சோதனைகளில் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கவனிக்கும் அறிகுறியற்ற வீட்டு நபர்கள் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் உபயோகிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஓர் ஆறுதலான செய்தி கியூபாவிலிருந்து வெளிவந்திருக்கிறது. கரோனா வைரஸ் தாக்குதலைக் குணப்படுத்தும் மருந்துகள் தம்மிடம் இருப்பதாக கியூபா கூறியிருக்கிறது. Interferon alpha 2B என்ற மருந்து உட்பட 23 மருந்துகள் அதனிடம் தயார்நிலையில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது. சென்டர் ஃபார் ஜெனெட்டிக் என்ஜினியரிங் அண்ட் பயோடெக்னாலஜி (CIGB) என்ற நிறுவனம் ஒரு கியூபா - சீன கூட்டு நிறுவனம் ஆகும். இது சீனாவின் சாங்க் சுன் நகரில் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக இந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. Biomodulin T என்ற மருந்து கரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் பயன்படுத்தபடுகிறது.

2003 ஆம் ஆண்டு இம்மருந்துகள் தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை கியூபா, சீனாவுடன் பகிர்ந்து கொண்டது. அதற்குப் பிறகு இருநாடுகளும் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக கரோனா வைரஸின் தாக்குதலின் தன்மையை அறிந்து தற்போது 23 மருந்துகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது கியூபாவில் பயன்படுத்தப்படும் கரோனா வைரஸýக்கு எதிரான மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துபவையாக உள்ளன. இந்த மருந்துகளை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்து, பரிசோதனைகள் செய்து பார்த்து, மேலும் இந்த மருந்துகளைப் படிப்படியாக மேம்படுத்தி புதிய மருந்துகளை கரோனா வைரஸ் பாதிப்புக்காக உருவாக்கியுள்ளார்கள். இந்த மருந்துகள் கரோனா வைரஸ் உடலில் தொற்றி பல்கிப் பெருகுவதைத் தடுத்துவிடுகின்றன. சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்துகள் தரப்பட்டு பலர் நலமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர் என்கிறது சீனா. இந்த மருந்துகளை இந்திய அரசு உடனடியாக வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சித்த மருத்துவத்தில், டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு பயன் அளித்தது. அதுபோல, கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப, கப மற்றும் வாத சுர குடிநீர் பயன் தரலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்த கப சுர குடிநீர், நெஞ்சில் ஏற்படும் சளியை தடுக்கும் தன்மை உடையது. அதோடு கியூபாவின் மருந்தைப்போல கரோனா வைரஸ் (SARS-Co2) நம் செல்களில் புகுந்து பல்கிப்பெருகாவண்ணம் ஒரு தடுப்பை இந்த சித்த மருந்துகள் செய்கின்றன என்பது தான் மிகவும் முக்கியமான செய்தி.

21 நாள்கள் வீட்டில் இருக்கும் மக்கள் சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் நம்மை கரோனா வைரஸின் தொற்று பெருக்கத்திலிருந்து காத்து மரணத்தில் இருந்து விடுவிக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள். கரோனாவிற்கு ஓர் அலோபதி மருந்தும் இல்லாத நிலையில் நம்மிடம் இருக்கும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருந்துகளை - பக்க விளைவு எதுவும் இல்லாத இந்த மருந்துகளை - மருத்துவர்களின் ஆலோசனையோடு எடுத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி கரோனாவை ஒழிப்பதே இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே வழி. நோய் மிகவும் அதிகமானால் அரசின் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டுகளில் சேர்ந்து ஆன்டி வைரல் மருந்துகளின் மூலமும், வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று கரோனாவிடம் இருந்து மீண்டு வருவது கடைசி வாய்ப்பாக இருக்கிறது.

ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்க படாத நிலையில் கரோனா இந்தியாவை சிந்திக்க வைத்து விட்டது. உயிர் பயமா? இல்லை நமது மூலிகை மருந்துகளின் ஆராய்ச்சிக்கு வித்திட்டு வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுக்கு சுயசார்பு மருந்து கண்டுபிடித்து வெல்வோமா? என்ன செய்ய வேண்டும் தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com  

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.