முகப்பு
இளைஞர்மணி

தனிமையில் இருக்கும் சமூக மனிதன்!

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டிலேயே தங்கள்நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்றவற்றுக்காக எவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார்கள் உள்ளிட்டோரை நேரில் சந்திப்பதற்குத் தற்காலிகத் தடை விழுந்துள்ளது. அதை எண்ணி ஆரம்பத்தில் பலர் சோகம் அடைந்திருந்தாலும், தற்போது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

நண்பர்களை செல்லிடப்பேசி வாயிலாகத் தொடர்புகொள்வதும் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடர்பு கொள்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் சிலர் மணிக் கணக்கில் காணொலிக் காட்சி வாயிலாக நண்பர்களுடன் அரட்டையடித்து வருகின்றனர். ஆனால், செல்லிடப்பேசி வாயிலாகவும் காணொலிக் காட்சி வாயிலாகவும் நண்பர்கள், உறவினர்களுடன் கலந்துரையாடுவதில் சிலருக்கு அசெüகரியம் ஏற்படலாம். நேரில் பார்த்து, பேசிப் பழகிய நண்பர்களுடன் தற்போது தகவல் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தொடர்பு கொள்வது சிலருக்கு ஒருவித சலிப்புணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு சிலருக்கு அலுவலகம் தொடர்பான விவகாரங்களை செல்லிடப்பேசி வாயிலாக உரையாடுவதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது. ஆனால், செல்லிடப்பேசி மூலம் நண்பர்களுடன் உரையாடுவதில் தயக்கம் இருக்கும். அத்தகைய தயக்க உணர்விலிருந்து விடுபடுவது மிகவும் அவசியமானது.

எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண்பதற்காக எடுத்து வைக்கும் முதல் அடி, அந்தப் பிரச்னை இருப்பதை முதலில்ஏற்றுக் கொள்வதாகும். நமக்கு பிரச்னை உள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். நமக்கு என்ன பிரச்னை என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டால்தான் அதற்கான சரியான தீர்வை எட்ட முடியும். தயக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

நேரடியாக ஒருவரிடம் பேசுவதென்பது எளிது; அது வெளிப்படையானது. நம்முடன் பேசுபவரின் உடல் மொழியும், பேச்சும் அவர் என்ன பேசுகிறார் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்திவிடும். ஆனால் செல்பேசியில் பேசும்போது பேசுபவரின் குரல் மட்டுமே நமக்குக் கேட்கும். அதை வைத்து அவர் சொல்வதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று ஒருவர் நினைத்தால், செல்பேசியில் பேசுவதை அவர் விரும்பமாட்டார். எனினும் கரோனா வைரஸ் தாக்குதலினால் தனிமையில் இருக்க வேண்டிய தருணங்களில் செல்பேசி, காணொலிக் காட்சிகள் மூலமாக மட்டும்தானே நாம் தொடர்பு கொள்ள முடியும்? எனவே தயக்கத்தை விரட்டிவிட்டு பிறருடன் பேசுவதைத் தவிர வேறுவழியில்லை.

மேலும் இப்படி நம்மிடம் செல்பேசியில் பேசும் எல்லாரிடமும் நாம் அச்சப்படத் தேவையில்லை. மனிதர்கள் நமக்கு எதிரிகள் அல்ல. எனவே தனிமையில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்க பிறருடன் உரையாடுவது மிகவும் அவசியமானது.

வீட்டுக்குள் முடங்கியிருக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கலாம். அவற்றைப் பகிர்ந்து கொள்வது நமது அனுபவங்களின் கடுமையானதன்மையை குறைத்துவிடவும் கூடும்.

ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்என்றாலும், தனிமனிதராக மட்டுமே ஒருவர் வாழ்ந்துவிட முடியாது. பிறரின் துணையில்லாமல் நாமும், நம்முடைய துணையில்லாமல் பிறரும் வாழ்ந்துவிட முடியாது. எனவே நாம் உடலால் தனிமனிதர் என்றாலும் சமூக மனிதரும் கூட. கரோனா வைரஸ் தாக்குதல் சமூக மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, தனிமனிதராக மாற்றியிருக்கிறது. என்றாலும், நமது சமூகத் தன்மையை நாம்இதனால் இழந்துவிட முடியாது. இழந்துவிடக் கூடாது. அதற்கு உதவுபவை நவீன தகவல் தொடர்புச் சாதனங்கள். அவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கம் கொள்வது நம்மை நாமே மேலும் மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதில் முடியும். அதுமட்டுமல்ல, அந்தத் தனிமைப்படுத்துதல் நம் மனதில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி, மனதை நோய்வாய்ப்படச் செய்யும். எனவேஇத்தகைய தயக்க உணர்வு, இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது.

நம் மனதில் தோன்றும் சக மனிதர்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களின் காரணமாகவே தயக்கஉணர்வுகள் உருவாகின்றன. எனவே, அத்தகைய எதிர்மறையான எண்ணங்களிலிருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். எனவே, சமூக மனிதனாக நாம் வாழ நமக்கு இருக்கும் ஒரே வழி நவீனதகவல் தொழில்நுட்பம் வாயிலாக அனைவருடனும் தொடர்பில் இருப்பதே ஆகும். இத்தகைய சூழல் தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்து கொண்டு, இயல்பு நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தயக்க உணர்விலிருந்து மீள்வதற்கு, ஆரம்பத்தில் மனதுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் செல்லிடப்பேசி வாயிலாகவோ காணொலிக் காட்சி வாயிலாகவோ தொடர்பு கொண்டு உரையாடலாம். பிடித்த புத்தகங்கள், திரைப்படங்கள், ஏற்கெனவே மேற்கொண்ட சுற்றுலாப் பயணங்கள் தொடர்பாக உரையாடலாம். சொந்த வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை என்றால் அது தவிர உலகில் உள்ள ஏராளமான பொது விஷயங்கள் குறித்துப் பேசலாம்.

அதனால் தனிப்பட்ட வாழ்க்கையில்எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

நண்பர்கள், உறவினர்கள் எனகாணொலிக் காட்சி வாயிலாகத் தொடர்பு கொள்ளும் நபர்களின் வட்டாரத்தை மெல்ல மெல்ல விரிவுபடுத்தலாம். பல நாள்களாகத் தொடர்பில் இல்லாத பள்ளி, கல்லூரி வகுப்புத் தோழர்களுடனான நட்பை மீண்டும் புதுப்பிப்பதற்கு வீட்டிலிருக்கும் இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளதால், தற்போது பிறந்தநாள் விழா போன்றவை காணொலிக் காட்சி வாயிலாகவே நடைபெறுகின்றன. எனவே, அதுபோன்ற விழாக்கள் நிறைந்த மகிழ்ச்சியான தருணங்களை தயக்க உணர்வின் காரணமாக நாம் இழந்து விடக் கூடாது.

நாம் நம்மை உடல் அளவில் எவ்வளவுதான் தனிமைப்படுத்திக் கொண்டாலும் உள்ளத்தளவில் நாம் எப்போதும் சமூக மனிதனாகவே இருக்கிறோம். சமூக மனிதனாக வாழ நமக்கு உதவும் இந்த நவீன தகவல் தொழில் நுட்பங்களை சரியானபடி, சரியான அளவில் நாம் பயன்படுத்தினால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.